சென்னை, செப்.11 அமெரிக்காவின் சிகாகோவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், உலகளாவிய ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5,365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாடு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
இதில், ஜாபில் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனமும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.666 கோடி முதலீட்டில் 365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கமும் அமைய உள்ளன. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதலமைச்சரின் இலக்கினை விரைவில் அடைவதற்காகவும், தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத் துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம் படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில், உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4350 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.