அய்.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பது போதை மாதிரியான விடயமாக எனக்குள் இருந்தது. மக்களுடன் இணைந்து பயணிப்பது மாதிரியான கனவுகள் அடிக்கடி வந்தன. யுபிஎஸ்ஸி தேர்வுக்கு நான் தயாரான போது, சரியான வழிகாட்டி இல்லாமல், முதல்நிலைத் தேர்வு (பிரிமிலினரிக்கு) பிறகு முதன்மை (மெயின்) தேர்வுகள் உண்டு. அதில் தேர்ந்தெடுக்கும் (ஆஃப்ஷனல்) பிரிவுகள் இருக்கிறது போன்ற விவரங்கள் தெரியாமலே நுழைந்தேன். சரியான வழிகாட்டி மட்டும் எனக்கும் கிடைத்திருந்தால் நிச்சயம் இலக்கை அடைந்திருப்பேன்’’ என்று கூறுகிறார் ரெஷ்மி. ‘‘தூத்துக்குடியில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். அப்பா சாதாரணக் கூலித் தொழிலாளி. வீட்டுக்கு நான்தான் மூத்தப் பெண். எனக்கு பிறகு இரண்டு தங்கைகள். படிக்கணும். கல்விதான் கைகொடுக்கும் என்கிற சூழல் நிறைந்த வாழ்க்கை.
குடும்பத்தின் முதல் பட்டதாரியாக, தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பிஎஸ்ஸி ஜியாலஜி படிக்கும் போதே பகுதிநேர வேலையாக டியூசன் எடுக்க ஆரம்பித்தேன். அடுத்து எம்.எஸ்ஸி படிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதியதில், முதன்மைப் பட்டியலில் (டாப் லிஸ்டில்) என் பெயரும் இருந்தது.
இந்த நேரத்தில் வீட்டில் பார்த்த உறவினர் மாப்பிள்ளையோடு திருமணம் முடிந்து மகளும் பிறக்கிறாள்.
இல்லற வாழ்வு எனக்கு சரியாக அமைய வில்லை. படிப்பையும் பணத்தையும் என்னால் உருவாக்க முடியும். திருமண வாழ்க்கையை விட்டு குழந்தையோடு வெளியில் வருகிறேன்.
மீண்டும் எம்எஸ்ஸி ஜியாலஜி படிப்பில் சேர்ந்தபோது மகள் 8 மாத கைக்குழந்தை. ஆனாலும், பல்கலைக்கழக சிறந்த மாணவியாக (யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டராக) படிப்பை முடித்து வெளியில் வருகிறேன்.
பொருளாதாரத் தேவைக்காக கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியவாறே பிஎச்டி படிப்பிலும் இணைகிறேன். கைக்குழந்தையோடு இதெல்லாம் தேவையா என வீட்டிலும், வெளி யிலும் பேச ஆரம்பித்தனர். எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் இலக்கை நோக்கி நகர்ந்ததில், முதன்மைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வுக்காக விரிவுரையாளர் பணியை விட வேண்டிய நிலை.
யுபிஎஸ்ஸி தேர்வை சந்திக்க மீண்டும் தயாரான போதுதான், என்சிஆர்டி என்கிற புத்தகம் ஒன்று இருப்பதே தெரிய வருகிறது. வருமானத்திற்காக ஒவ்வொரு அய்ஏஎஸ் அகாடமியாக ஆசிரியர் பணியிலும் ஈடுபடுகிறேன்.
மாணவியாக இருந்தவள், ஆசிரியராக குடிமைப் பணி பயிற்சி நிறுவனத்தில் (சிவில் சர்வீஸ்) நுழைந்தபோதுதான் அங்குள்ள செயல்பாடுகளை உணர முடிந்தது. யுபிஎஸ்ஸி தேர்வுகளை எழுதும் மாணவர்களின் தேவை ஒன்றாக இருக்கும் போது அகாடமியின் செயல்பாடுகள் வேறொன்றாக இருந்தது.
90 சதவிகிதம் முக்கியத்துவத்தைக் கொடுத்து, பணத்தை மட்டுமே சம்பாதிக்கும் நோக்கில் மாணவர்களின் நேரத்தை அகாடமிகள் விரையம் செய்வது சரியான வழிமுறை இல்லை எனப்பட்டது அய்ஏஎஸ் அகாடமிகளில் மிகப்பெரிய அரசியல் நிகழ்வது புரிய ஆரம்பித்தது.
சரியான பாதையில் மாணவர்கள் பயணிக்க வழிகாட்டும் ஆசிரியராக 2019இல் அகாடமிகளில் இருந்து முழுமையாய் வெளியேறி வி4யு அய்ஏஎஸ் அகாடமி ஒன்றை சொந்தமாகத் தொடங்கி மாணவர்களின் வழிகாட்டியாய் மாறினேன்’’ என்கிறார் ரெஷ்மி.