பெண்கள் சுயமாக சம்பாதிக்கலாம்

Viduthalai
2 Min Read

ஒரு காலத்தில் விவசாயம் என்றால் அதற்கான நிலத்தினை கிராமத்தில் வைத்துள்ளவர்கள்தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்று அனைவரும் ஆரோக்கியத்தின் மேல் அதிகளவு கவனம் செலுத்த ஆரம்பித்ததாலோ என்னவோ, பலரும் படித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஒரு நிலம் வாங்கி அதில் முழுக்க முழுக்க ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார்கள். தற்போது, விவசாயிகளைத் தவிர
அய்.டி. துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலர்தான் இதில் முழுமையாக ஈடுபட துவங்கிஉள்ளனர். அதில் ஒருவர்தான் ஈரோட்டினை சேர்ந்த ஜெகதா. இவர் கடந்த ஏழு ஆண்டாக ஆர்கானிக் முறையில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் உள்ள திருவேங்கட பாளையம் பெருந்துறையில்தான். என் கணவர் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.

எனக்கு விவசாயம் மேல் ஈடுபாடு இருந்ததால், எங்களின் 5 சென்ட் நிலத்திலும் முழுக்க முழுக்க விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். கீரையில் துவங்கி அடுத்து நெல் பயிர் செய்தோம். அதனைத் தொடர்ந்து மஞ்சள், தேங்காய், கேழ்வரகு, தானிய வகைகளில் தட்டப்பயறு, பச்சைப்பயறு, கொள்ளு, உளுந்து எல்லாம் பயிர் செய்ய துவங்கினோம். மேலும் காய்கறியில் கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கை மற்றும் பலவித பழ வகைகளும் நாங்க பயிர் செய்து வருகிறோம்’’ என்ற ஜெகதா, என்னென்ன பயிர்களை எவ்வாறு சாகுபடி செய்கிறார் என்பதைப் பற்றி விவரித்தார்.
கொய்யா, சப்போட்டா, மாம்பழம், அத்தி, நெல்லிக்காயும் விளைவிக்கிறோம்.

பழங்களின் சீசன் முடிந்தால் அதில் கம்பு, ராகி, சோளம் போன்ற சிறுதானியங்கள் பயிர் செய்ய பயன்படுத்துகிறோம். விளையும் பயிர்களை அப்படியே விற்காமல், அதனை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி விற்கும் போது, வருமானமும் இரட்டிப்பாக பார்க்க முடிகிறது’’ என்றார்.
‘‘என் விருப்பத்தை கணவரிடம் சொன்ன போது, அவர்தான் எனக்கு பண உதவி செய்து ஆரம்பிக்க சொல்லி ஊக்குவித்தார். ஆனாலும் நான் முதலில் குழப்ப மனநிலையில்தான் ஆரம்பித்தேன். முதலீடு செய்து, அதனை சரியான முறையில் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயந்தேன். அதன் பிறகு சரியான ஆலோசனையின்படி செய்த போது, அதன் வெற்றியை கண்கூடாக பார்க்க முடிந்தது. தற்போது விவசாயம் மூலம் மாதம் 35 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்க முடிகிறது.

பணம் சம்பாதிப்பதை காட்டிலும் இதில் எனக்கு கிடைக்கும் மன அமைதி அளவில்லாதது. மேலும் எங்களின் இணையம் மூலம் எந்தவிதமான பொருட்களை விவசாயத்துக்கு பயன்படுத்துறோம். ஒரு பயிரினை எத்தனை நாள் கழிச்சு சாகுபடி செய்ய வேண்டும் என அனைத்து தகவல்களும் அதில் உள்ளது.
என்னை பொறுத்தவரை பெண்கள் இந்த சமுதாயத்தில் பணம் சம்பாதிப்பதில் யாரையும் நம்பியோ எதிர்பார்த்தோ இருக்கக் கூடாது. தானே சம்பாதிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். ஒரு ஆணின் ஆதரவு அவசியமில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் ஆணித்தரமான கருத்து’’ என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *