சென்னை, செப். 10- அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா். இது குறித்து தமிழ்நாடு அரசின் சாா்பில் நேற்று (9.9.2024) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளாா். பயணத்தின் ஒரு அங்கமாக, சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு தமிழ்ச் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் 8.9.2024 அன்று சந்தித்துப் பேசினா்.
குறிப்பாக, தமிழ்நாடு அறக்கட்டளை, வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, சிகாகோ தமிழ்ச் சங்கம், அறம் சிகாகோ, அகரம் தமிழ் அகாதெமி, செயின்ட் லூயிஸ் தமிழ்ச் சங்கம், இந்தியா தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
தமிழ் நாட்டுக்கு வரவேண்டும்
தமிழ் நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்க்கும் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனா். அப்போது அவா்களிடம் பேசிய முதலமைச்சர், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா். தமிழ்ச் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளைச் சந்தித்ததில், அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததாகவும், அமெரிக்க வாழ் தமிழா்களின் நல்வாழ்வு சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டாா். இந்த நிகழ்வின் போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, அயலகத் தமிழா் நல வாரியத்தின் தலைவா் காா்த்திகேய சிவசேனாபதி ஆகியோா் உடனிருந்தனா்.