மீண்டும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: செல்வப்பெருந்தகை

Viduthalai
3 Min Read

ராமநாதபுரம், செப். 9- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் வரலாம் எனக் கூறி உள்ளார்.
நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் இந்த ஆட்சி எந்நேரமும் கவிழலாம் என்னும் பேச்சு அரசியல் நோக்கர்களிடம் காணப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் பாஜகவின் ஒரு சில முடிவுகளுக்கு கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“அடுத்த ஆண்டே ஒன்றியத்தில் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. தற்போதைய ஆட்சி என்பது நீண்ட ஆயுள் கொண்ட ஆட்சியாக எங்களுக்கு தெரியவில்லை. எனவே 2025இல் நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம், அல்லது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் சேர்ந்தும் வரலாம்.”என்று கூறியுள்ளார்.

இதுதான் கடவுள் சக்தியா?
குடை சாய்ந்தது கோயில் தேர் பக்தர்கள் காயம்
கள்ளக்குறிச்சி, செப்.9- சங்கராபுரம் அருகே மகா மாரியம்மன் கோவில் தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கடந்த 7.9.2024 அன்று மாலை தேரோட்டம் தொடங்கியது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிலை வைக்கப்பட்டு, பின்னர் தேர் புறப்பாடு தொடங்கி, நேற்று (8.9.2024) மாலை வரை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தபோது, திடீரென தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் தேரின் இடிபாடுகளுக்குள் சிக்கியதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பொக்லைன் எந்திரம் வரவழைக்கப் பட்டு கவிழ்ந்த தேர் நிமிர்த்தப்பட்டது. பின்னர், மீண்டும் தேர் புறப்பாடு நடைபெற்று, நிலையை அடைந்தது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயர் நீதிமன்றங்களில் 62 ஆயிரம் வழக்குகள் தேக்கம்
புதுடில்லி, செப். 9- டில்லியில் சமீபத்தில் நடந்த மாவட்ட நீதித்துறை மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நீதிமன்றங்களில் நீண்ட காலமாக தேங்கியிருக்கும். வழக்குகள் குறித்து கவலை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. நீதிமன்றங்களில் நீண்ட காலமாக தேங்கியிருக்கும் வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதில் உயர்நீதிமன்றங்களில் மட்டுமே 58.59 லட்சம் வழக்குகள் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சிவில் வழக்குகள் 42.64 லட்சமாகும்.

உயர்நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமே 62 ஆயிரத்துக்கு மேல் என தெரியவந்துள்ளது.
இதில் முக்கியமாக 1952ஆம் ஆண்டு பதியப்பட்ட 3 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. இதில் 2 வழக்குகள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் காத்திருக் கின்றன.
இதைப்போல 4 வழக்குகள் 1954ஆம் ஆண்டில் இருந்தும், 9 வழக்குகள் 1955ஆம் ஆண்டில் இருந்தும் உயர்நீதிமன்றங்களில் தேங்கியிருக்கின்றன.
இவ்வாறு நீதித்துறையில் அதிக அள வில் வழக்குகள் தேங்குவதை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
குளத்தில் மூழ்கி சிறுமிகள் மூவர் பலி
லலித்பூர், செப்.9- உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உள்ள பகாரி கிராமத்தில் நாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தகோவில் அருகே உள்ள குளத்தில் நேற்று (8.9.2024) காலை சுமித் (வயது 10) என்ற சிறுவன் தனது உறவி னர்களான சகோதரிகள் அனுஷ்கா (12), கல்லோ (16) ஆகியோருடன் குளிக்கச் சென்றார்.
ஆற்றில் இறங்கி குளித்தபோது 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்ற தாக தெரிகிறது. இதில் 3 பேரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஓடிசென்று குளத்தில் இறங்கி பலியான 3 குழந்தைகளின் உடல்களை மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *