இலால்குடி, செப்.9 இலால்குடி கழக மாவட்டம் புள்ளம்பாடி நகரத்தில் சுயமரியாதை நூற்றாண்டை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, அரசமைப்புச் சட்டம் 51 A(h) பிரிவு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 19.8.2024 மாலை 6 மணியளவில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் ஒன்றிய கழக தலைவர் மு.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் விஜயேந்திரன் அவர்கள் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சியை நடத்தினார். பொதுமக்கள் ஏராள மானோர் ரசித்து பார்த்தவுடன் மக்களின் மூட நம்பிக்கையை வைத்து சாமியார்கள் நடத்தும் பித்த லாட்டத்தை உணர்ந்து தெளிவு பெற்றனர்.
அதையடுத்து கழகச் சொற்பொழி வாளர் பூவை புலிகேசி சிறப்புரை யாற்றினார். அப்போது மக்களிடையே மண்டி கிடக்கும் மூட நம்பிக்கைகளை விரிவாக எடுத்துரைத்து, அதனால் பலன்கள் ஏதும் கிடையாது என்றும், மேலும் பொருளாதாரச் செலவுகள் தான் ஏற்படுகிறது என்றும், ஆகவே, அவற்றை விட்டொழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அவர் கூட்டத்தில் உரையாற்றியபோது, அண்மையில் புள்ளம்பாடி மின்வாரிய தோழர்கள் வாரிய சார்பில் குளுந்தாலம்மன் கோவிலில் கிடா வெட்டு பூசை நடத்தியதை வன்மையாகக் கண்டித்தும், ஒரு மதசார்பற்ற அரசில் இது போன்ற செயல்கள் நடப்பது வருந்தத்தக்கது என்றும், எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்; அவ்வாறு மீறி நடைபெற்றால் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்துவதுடன் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுத்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்தார்.
நிறைவாக தோழர் இசைவாணன் நன்றியுரை ஆற்றினார்.
இதன் உடனடிப் பலனாக அடுத்த நாளே மின்வாரியத் தோழர்கள் ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசை சந்தித்து எதிர் காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது என உறுதியளித்தனர்.