சென்னை, செப்.8- முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் வழிகாட்டுதலின்படி தமிழ் வளர்ச்சித் துறை முதன் முதலாக ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டு முனைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, ஆட்சிமொழி என்பது ஒரு மாநிலத்தில் சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி யாகும். அதன்படி தமிழ் நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாகும் என்று 27.12.1956இல் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழ் நாடு முழுவதிலுமுள்ள அரசு அலுவலகங்களில் தமிழில் அலு வல்களை நடத்த அறிவுரையும் ஆட்சிமொழித் திட்டத்தை செயற்படுத்திடவும் 1957இல் ஆட்சிமொழிக்குழு உருவாக்கப் பட்டது.
ஆட்சிமொழித் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பரவலாகவும் முழுமையாகவும் செயற்படுத்தும் நோக்கில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “தமிழ் வளர்ச்சி இயக்ககம்” எனும் தனித்துறைத் தலைமை அலுவலகம் 1971–ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு சென்னை, பாரிமுனையில் உள்ள குறளகத்தில். இயங்கி வந்தது. பின்பு 16.01.2000இல் சென்னை, எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கென தனிவளாகம் உருவாக்கி தனிக் கட்டடத்தில்சிறப்புடன் இயங்கி வருகிறது.
ஆட்சிமொழித்திட்டச் செய லாக்க மேம்பாட்டிற்கு சேலம் மற்றும் திருநெல்வேலியைத் தலை மையிடமாகக் கொண்டு இரு மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகங்கள் 12.02.1998 அன்று தொடங்கப்பட்டு இரண்டு மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் பணிபுரிந்து வந்தனர். பின்பு 08.08.2013 அன்று சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களிலுள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை துணை இயக்குநர் பணியிடங்களாக நிலை உயர்வு செய்து ஆணையிடப் பெற்றது.
முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுசார் நிறுவனங் கள் ஆகியவற்றின் நிரு வாகம் சிறப்பாகவும் தொய்வின்றியும் நடத்திட தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கிணங்க தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிருவாகப் பணிகள் சிறப்பாகவும் தொய்வின்றியும் எளிமையாகவும் மேற்கொள்ளப்படும் வகையிலும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டத்தில் செய்தித்துறையில் உள்ளதைப் போன்றே தமிழ் வளர்ச்சித் துறையிலும் தமிழ் வளர்ச்சி இயக்குநரின்கீழ் ஏற்ெகனவே உள்ள திருநெல்வேலி மண்டலத்துடன் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை என ஆறு மண்டலங்களாக வகைப்படுத்தி தமிழ் வளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஆறு துணை இயக்குநர்களை மண்டில அளவிலான பொறுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டதற்கிணங்க 20.08.2024 முதல் செயற்பட தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆகியோரால் தொடர்ந்து நடத்தப்பெறும் ஆய்வுக்கூட்டங்களில் ஆறு மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களின் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பான விவரங்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்கள் வாயிலாக செயற்படுத்தப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்ற அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரின் சிந்தனை வடிவமான இவ்வாணையின் வாயிலாக தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகள் தொய்வின்றி சிறப்பாகவும் விரைவாகவும் நடைபெறவழிவகை செய்யப்பட்டுள்ளது.
-இவ்வாறு தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.