ஒரு பெரியாரியவாதி எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் வடிவேல் என்கிற புதியவன். தன் வாழ்நாள் முழுவதும் தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் வழுவாது நின்aறவர்.
உடற்கொடையோடு அவரது வாழ்வு நிறைவுற்றது. தன் இரண்டு கால்களில் நிற்க முடியாமல் போனாலும் யாருக்காகவும் தன் பகுத்தறிவு பிரச்சாரப் பணியை அவர் நிறுத்திக் கொண்டதில்லை!!
கையில் ஒரு கைத்தடி – அது அவரது மூன்றாவது கால். ஒரு கையில், தான் ஏறி இறங்க வசதியான அரை சைஸ் சைக்கிள். தாராபுரத்தின் சூறைக் காற்றுக்கு மத்தியில் தன் வலுவைக் கொண்டு ‘விடுதலை’ சந்தா சேர்க்க, தலைமையின் வேண்டுகோளுக்கு ஏற்ப நன்கொடை வசூல் செய்ய தோழர்களோடு கலந்துரையாட என எந்த நேரமும் கழகப் பணியில் இருந்தவர்.
மிதிவண்டியில் பயணிக்கும் போது தனது சமநிலை தப்பும்போது கீழே விழுந்து கிடப்பார். பிறரின் உதவிக்குப் பிறகு மீண்டும் தனது கருஞ் சட்டை பிரச்சாரப் பயணத்தின் இலக்கை நோக்கி பயணிப்பார். இது அடிக்கடி நிகழும் நிகழ்வு!
வடிவேல் அய்யா அவர்களின் மூத்த மகன் மறைந்த வீரமணி –- ஒருமுறை ஆசிரியர் வீரமணி அவர்களைப் பார்ப்பன சங்கத்தின் மாநில கூட்டத்தில் தாறுமாறாக விமர்சித்த பிரபல பார்ப்பன வழக்குரைஞரின் வீடு தேடிச் சென்றது வ.வீரமணியின் துணிவு!
ஆசிரியர் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில் வடிவேல் அய்யா மனம் பூரித்து விடும்! மடிப்பு கலையாத கருப்புச்சட்டை, வேட்டி, கக்கத்தில் ஒரு கைப்பை. கைப்பைக்குள் ஆசிரியரிடம் நன்கொடையாக வழங்க வங்கிக்குச் சென்று புது பணத்தாள்களை வாங்கி 100 ரூபாய் கத்தையை நன்கொடையாக வழங்குவது வழக்கம் . அதில் அவருக்கு அமைப்பை வலுப்படுத்திய ஒரு செயல் நம்பிக்கை!!
இப்படியாக வாழ்ந்து மறைந்த வடிவேல் அய்யா வழிகாட்டி மட்டுமல்ல., வழித் தூண்டலு மாகும்.
– பெரியார் குயில், தாராபுரம்