தமிழ்நாட்டிற்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்போது?
திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்!
பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்
ஹிந்து மதப் பண்டிகைகள் எல்லாம் திராவிடர்களைக் கொன்றொழித்த ஆரியப் புராணக் கதைகளின் அடிப்படையில்தானே! தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் பகுத்தறிவுக் கொள்கையைக் கொண்ட ‘திராவிட மாடல்‘ அரசு, இந்த மூடப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று (7.9.2024) விநாயகர் சதுர்த்தியாம்! பிள்ளையார் பிறந்த நாளாம்!
தமிழ்நாட்டுக்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்படி?
சில நூற்றாண்டுகளுக்கு முன்தான் வடக்கே இருந்து பிள்ளையார் – விநாயகர் என்று தமிழ்நாட்டிற்குள் பண்பாட்டுப் படையெடுப்பாக உள்ளே திணிக்கப்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு காலப்போக்கில் வாதாபியி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘கடவுள்’தான் விநாயகன் – ‘பிறந்தது எப்படியோ?’ (நூல் ஆதாரம்: தமிழறிஞர் – மேனாள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் – பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் நூல்)
‘முருகன்’ (கந்தன்) எப்படி ஸ்கந்தன் ஆக்கப்பட்டு, ‘சுப்ரமணியக் கடவுளாக’ மாற்றப்பட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் போன்ற கற்றுத் துறைபோகிய தனித்தமிழ் பண்பாட்டுப் பாதுகாவலர்களிின் கருத்தியலை எளிதில் புறந்தள்ள முடியாதே!
அதுமட்டுமா?
வேதங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும்
பிள்ளையார் உண்டா?
‘‘வேதங்களிலும், பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம்பெறவில்லை’’ என்று அனிதா ரெய்னாதாப்பன் (1992:31) குறிப்பிடுகிறார்.
குப்தர் காலத்து முந்தைய சிற்றூர்களிலும் பிள்ளையார் வடிவம் இல்லையென்று கூறும் ஆய்வாளர் ஆனந்த குமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
‘விநாயகர்’ என்பது விண்–நாயகர்–தலைவர் – புத்தருக்கு உள்ள பெயர். அது ஹிந்துக் கடவுளுக்கு வந்தது எப்படி என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறாரே! (‘பெளத்தமும் தமிழும்’) இதற்கு என்ன பதில்?
பிறகு பிள்ளையாரை வைத்து மராத்திப் பார்ப்பனர் திலகர் போன்றவர்கள், பம்பாய் – மராத்திய மாநிலத்தில், அரசியல் ஆயுதமாக்கி, பக்திப் போதையைப் பயன்படுத்தி தங்களது தேசியப் போர்வைக்கு இந்த வர்ணாசிரமவாதிகள் வழிமுறை வகுத்தனர். அதைப் பெருங்கொண்டாட்டமாக்கி, பண்பாட்டுப் படையெடுப்பை வளர்த்தனர்!
முன்பெல்லாம் சிறுசிறு களிமண் பொம்மைகள் ஓரிரு ரூபாய்க்கு வாங்கப்பட்டு, வழிபாடு முடிந்தவுடன் கிணற்றிலோ, ஆற்றிலோ போடப்படும்!
மதக் கலவரத்தை ஏற்படுத்த பிள்ளையாரும் – ஊர்வலமும்!
இப்பொழுது அந்த ஆயுதத்தை மதக் கலவரத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி, அரசியல் லாபம் ஈட்ட
ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்துபரிஷத், வடநாட்டு மார்வாரி – பனியாக்களின் பண வீச்சுடன் நடைபெறும் நிலை தமிழ்நாட்டிற்குள்ளும் ஏற்பட்டுள்ளது!
அப்படி விநாயகருக்கு எந்த சக்தியும் கிடையாது என்று பாமர மூடநம்பிக்கையாளர்களுக்கு நிரூபித்துக் காட்டவே 1953 ஆம் ஆண்டு பிள்ளையார் சிலைகளை பொது இடங்களில் உடைத்துக் காட்டினர் தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும்!
அது புண்படுத்த அல்ல; மக்களைப் பண்படுத்தவே! அறியாமையிலிருந்து அவர்களை விடுதலை பெறச் செய்யவே!
‘விக்னத்தைப் போக்குவான்’ என்று கதை அளப்பார்கள் – மக்களின் எந்த ‘விக்னத்தை’, கோணலை அவர் நிமிர்த்தியிருக்கிறார்? சிந்திக்க மறுக்கும் மூடர்களால் இதுபோன்று பக்தியைப் பயன்படுத்தி, பலர் பிழைப்புத் தேடுவதுதான் ‘மிச்சம்!’
பிள்ளையாருக்குப் பூணூல் வந்தது எப்படி?
பிள்ளையார் உற்பத்திபற்றிய கதைகளோ நம்ப முடியாத புளுகு மூட்டைகள் என்பது ஒருபுறம் இருந்தா லும், அருவருப்பு ஆபாசத்தின் தொகுப்பாகவே காட்சி அளிக்கும் பரிதாபம்தானே மிச்சம்!
அக்கடவுளுக்கு ‘‘பூணூல் முக்கியமாம்!’’
எப்படி வந்தது இது?
யாராவது யோசித்தார்களா? சுட்டிக்காட்டுபவர்கள்மீது வசை மாரி பொழிவதுதான் ஒரே வழியா? பதிலா? என்னே, அறியாமை!
இந்த லட்சணத்தில் சில அரசியல் அவலட்சணங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏன் தமிழ்நாடு முதல மைச்சர் வாழ்த்துச் சொல்லவில்லை என்று வக்கணை பேசுகின்றன!
தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு உண்மையான ‘திராவிட மாடல்’ அரசு – அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆட்சிகள்.
மக்களை ‘‘சூத்திரரர்களாக்கி’’, ‘‘பஞ்சமர்களாக்கி’’டும் பண்டிகைகள், அசுரர்கள் என்ற திராவிடர்களைக் கொன்று அழிக்கவேண்டும் என்ற தத்துவத்தை – உட்கருத்தை வைத்தே உருவாக்கப்பட்ட பண்டிகைகள்தான் ஹிந்து மதத்தின் ஆரியப் பண்டிகைகள்!
திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்!
மனிதநேயத்திற்கிடமில்லாமல், நம் இனத்தவரை சூழ்ச்சியால் கொன்றதாகக் கதைகளை உள்ளடக்கிய – பண்பாட்டுப் படையெடுப்புமூலம் தமிழ்நாட்டிற்குள் புகுந்த ஜாதி, வர்ணாசிரமத்தை மறைமுகமாக வாழ வைக்கும் பக்திப் போதைக் கருத்துகள்தான் இவை.
இருமொழிக் கொள்கை உடைய திராவிட அரசினை – ஹிந்தித் திணிப்பு விழாவிற்கு அழைத்து வர முடியுமா? அதுபோலத்தான் ‘சூத்திர, பஞ்சம, பெண்ணடிமை ஒழிந்த ஒரு புது சமுதாயம் – சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முனையும்’ கொள்கையுடன் செயல்படும் தி.மு.க. அரசு அதற்கு நேர் முரணான மனுதர்ம, வர்ண தர்மத் திணிப்பு, ‘அசுரர் அரக்கர்’ என்று திராவிடர்களை இழிவுபடுத்திய கதைகளைப் பரப்பும் நிகழ்வுகளுக்கு எப்படி வாழ்த்துக் கூற முடியும்?
மல்லாந்து படுத்துத் தன் மார்புமீதே எச்சில் துப்பும் வேலை ஆகாதா அது? அதை உணர்ந்த பகுத்தறிவுத் தெளிவுதான் நம் அரசுக்கு உரிய தனிச் சிறப்பாகும்!
தனிப்பட்ட வெறுப்பு அல்ல – அதன் அடிப்படை!
அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்
‘திராவிட மாடல்’ அரசு ஹிந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா?
ஜாதி, வருணம் ஒழிந்த, சமத்துவ, சமதர்ம, சமூக நீதிக் கொள்கை உடைய ஓர் அரசு – அறிவியல் மனப்பான்மைக்கும், மனிதநேயத்திற்கும் தடை ஏற்படுத்தி, கேள்வி கேட்கும் தன்மையைக் குழிதோண்டிப் புதைத்திடும் வெறும் மூடநம்பிக்கைகளை எப்படி அரசு வளர்க்கும்?
வாழ்த்துச் சொல்லவில்லையே என்று வகைகெட்டுக் கேட்போர், சிந்திக்கவேண்டும்!
அப்படி கேள்வி கேட்கும் ‘சீலர்கள்!’ சீறிப் பாய்வ தற்குப் பதிலாக – ‘அசுரர்களைக்’ கொல்லாத ஹிந்துப் பண்டிகை ஒன்று உண்டா? விரலை மடக்க முடியுமா? பதில் சொல்லுங்கள், ‘‘சதுர்த்தி’’ தமிழ்ச் சொல்லா?
‘நவமி’ தமிழ்ச் சொல்லா? ‘சஷ்டி’, ‘தீபாவளி’ தமிழ்ச் சொற்களா?
அடையாளம் போதாதா?
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
7.9.2024