ஆசிரியர் விடையளிக்கிறார்

Viduthalai
4 Min Read

கேள்வி 1: “அறிவியல் ரீதியான – முற்போக்கான மனித நேயத்தை வளர்க்கும் வண்ணம் மாணவர்கள் தங்கள் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று நம் “திராவிட மாடல்” முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளாரே?
– கல.சங்கத்தமிழன், செங்கை
பதில் 1: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற நம் முதலமைச்சர் அவர்களது அறிவுரை. இது வண்ண மயமான – பெரியார் – அண்ணா- கலைஞர் ஆட்சியின் திராவிட ஆட்சிதான் என்பதை அகிலத் திற்கு இதன்மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்.

– – – – –

கேள்வி 2: “தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் தரம் இல்லை” என்று குறைகூறும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.ரவி அவர்கள், இந்தியாவிலே லட்சக்கணக்கில் மாணவர்கள் தேர்வில் தோல்வி என்ற பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களின் கல்வித் தரத்தைக் குறித்து பேசவில்லையே?
– கி.மாசிலாமணி, நுங்கம்பாக்கம்
பதில் 2: முதலில் அவரது இந்த விமர்சனத்திற்கு – ‘Until further order’ என்ற “அடுத்த அறிவிப்பாணை வரும் வரை”யே பதவி வகிக்கும் நிலையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். விமர்சகர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் சட்டத்தின் 163 கூறுப்படி, உரிமை இல்லை.
காரணம், அதன்படி 163இன்(படி) இவர் மாநில அரசின் அங்கமாவார். தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவினை எதிர்த்துப் பேசக் கூடாது என்பதே 163ஆம் கூறு – பிரிவின் தத்துவமாகும்.
மேலும், தரம் பற்றி ‘ஆராய’ இவருக்கு என்ன தகுதி? இவர் கல்வி நிபுணரா?
தன் வேலையைப் பார்க்கத் தவறும் இவர் மீது அரசமைப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏராளமான வாய்ப்புகள் உண்டு.

– – – – –

கேள்வி 3: கொல்கத்தா நீதிபதி பதவி விலகிய உடனே பா.ஜ.க.வில் இணைந்து மக்களவை உறுப்பினர் ஆகிவிட்டார், ராம் ரகீமை தொடர்ந்து பிணையில் வெளியில் அனுமதித்த ஜெயிலர் பாஜகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டி யிடப் போகிறாரே? பாஜகவில் இணைய பெரிய பதவிகள்தான் தகுதியானதா?
– மா.சுந்தரராஜன், தேவகோட்டை
பதில் 3: முன்புஅவரது பழைய “ஜாதகம்” புரிகிறது; பூனைக்குட்டி வெளியே வருகிறது என்றே பொருள்! கண்டனத்திற்குரியது!

– – – – –

கேள்வி 4: ஹிந்துத்துவ மனப்பான்மை அதிகாரிகளால் ‘திராவிட மாடல்’ அரசுக்கு அவ்வப்போது அவப் பெயர் ஏற்பட்டு வருகிறதே?
– செ.தேவஇரக்கம், மடிப்பாக்கம்
பதில் 4: ஆம். தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் அவ்வப்போது கவனமாகக் களையெடுத்து ஆட்சித் துறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசரக் கடமையாகும்.

– – – – –

கேள்வி 5: “பொட்டு வைக்கக் கூடாது என்ற அறிக்கையை சமர்ப்பித்த பிறகுதான் நான் பெரிய அளவில் பொட்டு வைத்துக்கொண்டு நீதிமன்றம் வரத் துவங்கினேன்” என்று நீதிபதி ஒருவர் கூறி யுள்ளாரே?
– தி.சஞ்சய், பாளையங்கோட்டை
பதில் 5: பொட்டுக்கு இருக்கின்ற புராண – ஆன்மிகக் கதை அவருக்குத் தெரியுமா? என்பது தெரியவில்லை. சற்றே திரும்பி அதைப் படித்துத் தெரிந்துகொண்டால் பிறகு ஒரு வேளை திருந்துவார் என்று நம்புகிறோம்!

– – – – –

கேள்வி 6: ரத்னகிரியில் (மகாராட்டிரா) பிய்ந்து விழுந்த சிவாஜி சிலையை கடியா மெட்டீரியலில் (பிளாஸ்டிக் கலவை) செய்துள்ளார்கள் என்று நிதின் கட்கரியே போட்டுடைத்துள்ளாரே… பிளாஸ்டிக் கலவை மோல்டிற்கா 2.5 கோடி ரூபாய் செலவு?
– தர்மராஜ், ஆழ்வார் திருநகரி
பதில் 6: ஊழலற்ற உத்தமர்கள் ஆட்சியின் ஒப்பனை கலைகிறது என்பதே இதன் மூலம் பெற வேண்டிய பாடம்!

– – – – –

கேள்வி 7: “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மாநிலத் தகுதியை மீட்டுத் தருவோம்” என்று காங்கிரஸ் அறிவித்துள்ளதே? ஒத்துவருமா உள்துறை அமைச்சரகம்?
– நா.ஏகலைவன், வியாசர்பாடி
பதில் 7: மக்கள் மன்றத் தீர்ப்புக்கு இறுதி முறையீடு – “அப்பீல்” கிடையாதுங்க!

– – – – –

கேள்வி 8: 10 ஆண்டுகளின் வருவாயை தாக்கல் செய்ய சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே? தருவார்களா?
– வே.சாக்கியன், திருச்சி
பதில் 8: “அவாள்” வயிற்றில் புளியைக் கரைக்கும் ஆணை இது! கோயில் பெருச்சாளிகளின் ‘ஸ்வாகா’ வெளியே வந்தால் நல்லது!

– – – – –

கேள்வி 9: பாலியல் வன்கொடுமை கொலைக் குற்றவாளிகளான சாமியார்களுக்கு அடிக்கடி கிடைக்கும் பிணை, அமைச்சர்கள் மற்றும் முதலமைச் சர்களுக்குக் கிடைப்பதில்லையே ஏன்?
– கி.வெற்றிவேல், மதுரை
பதில் 9: எல்லாம் காவியின் ‘சக்தி’. பித்தலாட்டக் காரர்களின் வெற்றி. நிரந்தரமானதல்ல என்பதுதான் நமது ஒரே ஆறுதல்.

– – – – –

கேள்வி 10: ஊதியத்தை விட 4 மடங்கு ஓய்வு ஊதியமாக வாங்கியுள்ளாரே பங்குச் சந்தை இயக்குநர் மாதபி புச். இதுபோல் அனைவருக்கும் வருமா?
– ம.காமராஜ், நெல்லை
பதில் 10: இது மகா மகா தேசியக் கொடுமை? இதற்கெல்லாம் பரிகாரம் தேடியாக வேண்டும் – சில மாதங்களில் கிடைத்தால் நல்லது!
“மைனாரிட்டி” பா.ஜ.க. அரசு மூலம் விடியல் கிடைக்காது!
என்றாலும், நம்பிக்கையோடு இருப்போம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *