தந்தை பெரியார் மூன்று முறை இலங்கைக்குச் சென்றிருக்கிறார். 1931-ஆம் ஆண்டு அய்ரோப்பியப் பயணங்களுக்குச் செல்லும்போதும், அங்கிருந்து 1932-ஆம் ஆண்டு திரும்பும்போதும் இலங்கை வழியாகவே தந்தை பெரியார் சென்று திரும்பினார். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மாகாணங்களில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்திருக்கிறார். புகழ்பெற்ற தந்தை பெரியாரின் இலங்கை சொற்பொழிவு அப்போது நிகழ்த்தப்பட்டது தான். பல பதிப்புகள் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.
1929-இல் பிப்ரவரியில் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு செங்கல்பட்டிலும், பின்னர் மே மாதத்தில் சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாடு பட்டுக்கோட்டையிலும் நடைபெற்றது, இதற்கிடையில் 1929 ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில், சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வது என்ற தீர்மானத்ததுடன், தந்தை பெரியாரை அழைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1932ஆம் ஆண்டு மட்டுமல்லாமல், 1937-லிம் தந்தை பெரியார் மேற்கொண்ட இலங்கைப் பயணம் தொடர்பான குறிப்புகள் ‘குடிஅரசு’ ஏட்டில் கிடைக்கின்றன. மேற்கண்ட அழைப்பின் பேரில் 1937-இல் பெரியார் இலங்கை சென்றுள்ளதை “Srilankan Tamil Struggle” என்ற கட்டுரைத் தொடரில் இலங்கையின் முன்னணி இதழாளரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இனப் தமிழர் பிரச்சினை குறித்து எழுதி வருபவருமான டி.சபாரத்தினம் ஆதாரங்களுடன் இருபதாவது அத்தியாயமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள் இங்கே மொழிபெயர்த்துத் தரப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் தந்தை பெரியாருக்கு சிறப்பான வரவேற்பு
“ஜூன் 14 அன்று யாழ்ப்பாணம் வந்த ஈ.வெ.ராவுக்கு அன்று மாலை யாழ்ப்பாணம் எஸ்பிளனேடில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜூன் 22 இன் மார்னிங் ஸ்டார் ஏடு, ஈ.வெ.ரா அந்த மாபெரும் கூட்டத்தில், “நான் மிகவும் மதம் பிடித்த குடும்பத்தில் பிறந்தேன். ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுளின் பெயரால் நடக்கும் காரியங்களைப் பார்த்து நாத்திகன் ஆனேன். ஒரு பிரிவினருக்குக் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்படும்போது எப்படி கடவுளை நம்புவது?” என்று கேள்வி எழுப்பினார்.
மிருகங்கள் பலியிடப்படுவதைக் கண்டித்த ஈ.வெ.ரா. மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என்று பார்வையாளர்களிடம் கூறியதோடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஒரு பிரிவினரின் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பை மறுக்கும் நடைமுறையைக் கொடூரமானதாக அறிவித்தார். பள்ளிகளில் இருக்கை அமைப்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டுவதாக உயர் ஜாதியினரையும் சாடினார்.
தேச விடுதலை பற்றியும் பேசிய ஈ.வெ.ரா, சமூக சீர்திருத்தம் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றார். “நாம் சுதந்திரம் அடைவதற்கு முன் நம் வீட்டை ஒழுங்காக வைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
ஜாதியப் பாகுபாடுகளுக்கு முடிவு கட்டுங்கள் – இளைஞர்களுக்கு பெரியார் வேண்டுகோள்
ஈ.வெ.ரா. இரண்டு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் செய்து பல பள்ளிகளையும், கிராமங்களையும் பார்வையிட்டார். இளைஞர் கழகத்தினர் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். ஈ.வெ.ரா. யாழ் குடாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகிய துறைகளில் முதலில் கவனம் செலுத்துமாறு அவர்களிடம் கூறினார். மாணவர் சேர்க்கையிலும், இருக்கையிலும் கடைப்பிடிக்கப்படும் ஜாதியப் பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவர் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அக்காலத்தில் யாழ்ப்பாணப் பள்ளிகள் ஜாதிப் படிநிலையில், கீழ் நிலையில் இருத்தப்பட்டிருந்த பறையர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி மறுத்தன. வேளாளர் அல்லாத பிற ஜாதியினரின் குழந்தைகளை அவர்கள் அனுமதித்தனர்; ஆனால் அவர்கள் வெள்ளாளக் குழந்தைகள் அமர்வதை விட தரையில் உட்கார வேண்டும் அல்லது சில அங்குலங்கள் தாழ்வாக இருக்க வேண்டும் என்னும் நிலை இருந்தது.
அந்த நடைமுறையை மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனம் என்று ஈ.வெ.ரா.கண்டித்ததையும், படித்த இளைஞர்கள் இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதையும் ‘மார்னிங் ஸ்டார்’ ஏடும், ‘உதயதாரகை’ ஏடும் பதிவு செய்துள்ளன” என்று தன்னுடைய கட்டுரைத் தொடரின் ஏறத்தாழ ஒரு முழுப் பகுதியினைத் தந்தை பெரியார் குறித்து விவரித்திருக்கிறார் டி.சபாரத்தினம்.
தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக 1979-இல் இலங்கை சென்ற தமிழர் தலைவர், தற்போது சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா காலத்தில் மீண்டும் இலங்கை சென்று வந்திருக்கிறார். அங்கும், சுயமரியாதை, ஜாதி ஒழிப்புக் கருத்துகளை எடுத்துப் பேசி வந்திருக்கிறார். தந்தை பெரியாருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்ட எஸ்பிளனேடு பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசிரியர் அவர்கள் விரும்பியதையடுத்து. 25-ஆம் தேதி காலை 8.30 மணிக்குக் கிளம்பத் தயாரானோம். ஆனால் அதற்கு முந்தைய நாள் ‘உதயன்’ பத்திரிகையின் செய்தியாளர் வேண்டுகோளுக்கிணங்க ஒரு நேர்காணலுக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. காலை 8.15 முதல் 8.45 வரை நேர்காணல் செய்தார் ரவிசாந்த். அவர் தான் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து ஆசிரியரின் பயணத்தைப் பதிவு செய்துவந்தவர்.
தந்தை பெரியார் வந்து சென்ற பகுதியில் தமிழர் தலைவர்
11 மணிக்குள் யாழ்ப்பாண விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில், தந்தை பெரியார் வரவேற்கப்பட்ட பகுதிகளுள் ஒன்றான எஸ்பிளனேடு சாலைக்குச் சென்று பார்வையிட்டார். அப் பகுதியின் அருகில் தான் தற்போது நீதிமன்ற வளாகம் உள்ளது. 87 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் வந்து சென்ற பகுதியில் ஒளிப்படம் எடுத்துக் கொண்டு, ஈழத் தந்தை செல்வா அவர்களின் வீடு அமைந்திருக்கும் தெல்லிப்பளை நோக்கி விரைந்தோம். யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதி தான் தெல்லிப்பளை. தந்தை செல்வாவின் மாமனார் பார் குமார குலசிங்கம் மணியக்காரராக இருந்தவர். மணியக்கார வளவு என்று தான் அது அழைக்கப்படுகிறது.
அதில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வா நினைவு கண்காட்சியைச் சென்று பார்வையிட்டார் தமிழர் தலைவர். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஆர்.பேரின்பநாயகம் ஆகியோர் சென்றிருந்தனர். தந்தை செல்வாவின் பேரன் 24-ஆம் தேதி நிகழ்ச்சிகளில் தமிழர் தலைவருடன் கலந்துவிட்டு, சென்னை சென்ற நிலையில், தந்தை செல்வா கலையரங்கம் முகாமையாளர் கமலதாஸ், செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை ஆலோசகர் சியாமளா செல்வரத்தினம் ஆகியோர் தமிழர் தலைவர் உள்ளிட்டோரை வரவேற்றனர். அறக்கட்டளையினர் சார்பில் ஆசிரியருக்குப் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. தந்தை செல்வா குறித்த நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்துவிட்டு விடைபெற்றார்.
தொடர்ந்து, இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அவர்களின் இல்லத்திற்குச் சென்று உரையாடிவிட்டு, பலாலி விமானதளத்திற்கு விரைந்தோம். மிகுந்த மகிழ்வுடன் வரவேற்றனர் சேனாதிராஜா அவர்களின் குடும்பத்தினர்.
யாழ்ப்பாணத்திற்குச் சென்று இறங்கி, மீண்டும் விமானத்தில் ஏறும் வரையிலான 48 மணிநேரத்திற்குள் நடந்தவை தான் இத்தனை நிகழ்வுகளும்! 3 நேர்காணல்கள், இத்தனை இடங்களுக்குச் சென்று வந்தது, நிகழ்ச்சி அத்தனையும் அதற்குள் தான்! 91 வயதில் அசாத்தியமான ஆசிரியரின் வேகத்தைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை அங்கும்!
யாழ்ப்பாணத்திற்கு வந்து இறங்கி திரும்பும்வரை உடனிருந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, ஓடியாடி அத்தனைப் பணிகளையும் மேற்கொண்ட 57 வயது இளைஞர் தங்க.முகுந்தன். அய்யா அமிர்தலிங் கனாரின் தனிச் செயலாளராக இருந்தவரான ஆர்.பேரின்பநாயகம், வரவேற்பு, முக்கிய இடங்கள், வழியனுப்புதல் என்று எல்லா இடங்களிலும் தன் உடல் நிலையையும் கருதாமல் வந்திருந்து சிறப்புச் செய்த இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் பெரியவர் மாவை சோ.சேனாதிராஜா, அவர்தம் இயக்கத் தோழர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் தமிழர் தலைவரிடம் காட்டிய பேரன்பு அளவிட முடியாதது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அய்யா அமிர்தலிங்கனாரின் மைந்தர் டாக்டர் பகீரதன் (இங்கிலாந்து), ஒருங்கிணைக்க உதவிய முனைவர் பாஞ்.ராமலிங்கம், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்புடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணம் எவ்வித இடையூறுமின்றி நிகழ்ந்தது.
காண்போரிடமெல்லாம் மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்வதில் தான் ஆசிரியர் ஆர்வம் காட்டினார். செல்லுமிடங்களி லெல்லாம் தமிழர் தலைவரை அடையாளம் கண்டுகொண்டும், தேடிவந்தும் ஒளிப்படம் எடுத்தும், அளவளாவியும் அன்பைக் காட்டினர் ஈழத் தமிழர்கள். விமானநிலையத்தில் சென்னைக்குக் கிளம்புவதற்குத் தயாராக இருந்த தமிழ்நாட்டுத் தமிழர்களும், ரோட்டரி சங்கத்தினரும் தமிழர்தலைவருடன் உரையாடி மகிழ்ந்தனர். குறித்த நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பிய ஏர் அல்லயன்ஸ் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார் தமிழர் தலைவர். மாலை அவருக்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் பட்டியலில் இருந்தன.
“முந்தைய வருகைக்கும் இப்போதைய வருகைக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் நீங்கள் காணும் வேறுபாடு என்ன?” என்று ஆசிரியரிடம் கேட்ட போது அவர் கொடுத்த பதில். “முன்பு சூடான சூழல் இருந்தபோதும் தென்றல் வீசியது. தற்போது ஈரப்பதம் (Humidity) அதிகம் இருக்கிறது.”
கோடையை விட ஈரப்பதம் அதிகம் இருக்கும் சூழலின் வெக்கையை நாம் அறி வோம். அந்த வெக்கை குறைந்து மீண்டும் ஈழத்தில் தென்றல் தவழ வேண்டும் என்பது தான் அனைவரின் அவா. அதற்கு அடிகோலு வதாக இந்தப் பயணம் அமையும்.
நிறைவு