சென்னை, செப்.5– சென்னை யைப் பொருத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிக்கு முன் னுரிமை தர வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதய நிதி ஸ்டாலின் கூறினாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து துறையினரிடையேயான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் முன்னிலையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் 3.9.2024 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
பருவமழையின் போது சாலை களில் தேங்கும் மழைநீரை அகற்ற போதுமான அளவில் நீரிறைக்கும் இயந்திரங்களை வெளியூா்களிலிருந்து மழை தொடங்குவதற்கு முன்பே கொண்டு வரவேண்டும். மழைக் காலங்களிலும் நீரேற்று நிலையங்கள் தொடா்ந்து இயங்கும் வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். மழைநீா் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் கழிவுநீா் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு களை சரிசெய்ய வேண்டும்.
முன்னுரிமை: மழைக்காலத்தில் மின் வாரியப் பணி என்பது மிகவும் முக்கியமானது. கழிவுநீா் கால்வாய்களில் தன்னாா்வலா் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்கு முன்பாக அவா்களை அழைத்துப் பேசுவது மிகவும் சிறப் பாக அமையும். அலுவலா்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து விரைவாக பணியாற்ற வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும்.
அதனால் அனைத்து துறையும் தங்களது திட்டப் பணிகளுக்கான நிதியை கழிவுநீா் குழாய் அமைத்தல், மழைநீா் வடிகால் அமைத்தல் போன்ற மக்களுடைய அடிப்படை அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
சென்னை மெட்ரோ நிறு வனத்தின் பணிகள் நடைபெறும் இடங்களில் பெருமழையின்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க மேற் கொள்வதற்கான நடவடிக்கை களை துரிதப்படுத்த வேண்டும். இந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.