திருவெறும்பூர், செப்.4- திருவெறும் பூரில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி, பெரியார் படிப்பகத்தில் 1.9.2024 அன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று பல்வேறு பெயர்களில் நிகழ்ச்சிகள் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். ஒரு நிகழ்வு என்பது தொடங்குவதில் அல்ல; தொடர்ந்து நடத்துவதில் தான் சிறப்பே இருக்கிறது.
அந்த வகையில் தலைமையிடமான பெரியார் திடலில் நூலக வாசகர் வட்டம் 2516 நிகழ்ச்சிகளையும், புதுமை இலக்கியத் தென்றல் 1005 எண்ணிக்கையையும் கடந்து நடை போடுகிறது! அதேபோல பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் இணைய வழிக் கூட்டங்கள் 110, தஞ்சாவூரில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி 90, தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரத்தில் இயக்கக் குடும்பக் கலந்துரையாடல் கூட்டம் 33 ஆண்டுகள், தஞ்சாவூர் அழகிரிசாமி அவர்களின் அறிவுச்சுடர் வலைத்தளம் 1000 காணொலிகளைக் கடந்து, அரும்பாக்கம் தாமோதரன் அவர்களின் அறிவு வழி காணொலி 1473 எனத் தமிழ்நாட்டில் நடந்து வரும் நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படியான சூழலில்தான் நேற்றைய தினம் திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி தொடங்கியது. இதன் நோக்கம் குறித்துத் தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் பேசும்போது, முதல் கூட்டத்திலேயே பெரியளவு வரவேற்பு இருக்கிறது. இது தொடரும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு தோழர் ஏதாவது ஒரு தலைப்பில் பேச இருக்கிறார்கள்.
அதேபோல மகளிரும், நமது இயக்கக் குடும்ப மாணவர்களும், இளைஞர்களும் ஒவ்வொரு மாதமும் உரையாற்ற இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாதமும் ஒரு தோழர் ஒருங்கிணைப்பார். ஆக ஒரே தோழர் பார்வையாளராக, உரை நிகழ்த்துபவராக, ஒருங்கிணைப்பாளராகச் சுழற்சி முறையில் வருவார். ஆக எல்லோருக்கும் பங்களிப்பு இருக்கிறது, எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்கிற வகையில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெறும். உரையாற்றும் தோழர்கள் கொள்கை அறிமுகம், இயக்கத்தில் இணைந்தது எனத் தம் அனபவங்களை, வரலாற்றைக் கூட எடுத்துப் பேசலாம்.
அதேபோன்று ஒரு மாதம் கலை நிகழ்ச்சிகள் செய்வது, ஒரு மாதம் இயக்கப் பாடல்கள் மட்டும் பாடுவது, இடையிடையே மருத்துவர்களை அழைத்து ஒரு சிறிய உரை, பொதுவா னவர்களை அழைத்தும் ஒரு உரை எனப் பல்துறை, பல்சுவையாக இது அமைக்கப் பெறும். இது ஒரு நிகழ்ச்சிக்கான வடிவம் என்பதைக் கடந்து நம் இளைஞர்கள், மாணவர்களுக்கான பயிற்சி முகாமாகவும் இருக்கும். மிக முக்கியமாக மாலை 6 மணிக்குத் தொடங்கி 7.30 மணியளவில் குறித்த நேரத்தில் நிறைவு பெற்றுவிடும்”, என வி.சி.வில்வம் பேசினார்.
இந்தத் தொடக்க நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர் முன்னிலை ஏற்றார். திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் வரவேற்புரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தொடக்கவுரை ஆற்றினார். அப்போது அவர், “ஒரு நிகழ்ச்சியைத் தொய்வின்றி நடத்துவது எப்படி என எடுத்துக் கூறினார். கழகத் தோழர்கள் எல்லோரையும் முக்கியப்படுத்த வேண்டும் என்றும், நிதிநிலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் கூறினார். மகளிர் அதிகம் வந்ததைப் பாராட்டியதோடு, இந்நிகழ்ச்சியின் சிறப்பிற்கும் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் ஏராளம் நடைபெற்று வருகின்றன. திருவெறும்பூரில் தொடங்கி இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்ட “பெரியார் எனும் வாழ்வியல்” எனும் தலைப்பில் 0.45 நிமிடம் உரை நிகழ்த்தினார். உளவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் அவரது உரை அனைவரையும் ஈர்த்தது.
புதியவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்ததுடன், இளம் மாணவர்களும் பங்கேற்றது மகிழ்ச்சிக்குரியது. ஒலி, ஒளி அமைப்பை பெல் நிறுவனத் தோழர்கள் எடுத்து வந்திருந்தனர். தம் வீட்டிலேயே தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினார் தமிழ்ச்சுடர் அவர்கள்.
நிகழ்வில் ரெ.குமரவேல், பு.வி.கியூபா, போ.ஜெகதீஸ்வரன், இரா.மோகன்தாஸ், இரா.முருகன், பாச்சூர் அசோகன், பெல் ஆறுமுகம், ஜெ.கீர்த்தனா, ஜெ.ஆதினி, ச.கணேசன், தெ.பாலசுப்பிரமணியன், விடுதலை கிருட்டினன், ரெ.காமராஜ், மா.குணா, பெ.கணேசன், சி.கனகராசு, ம.சங்கிலிமுத்து, க.புனிதா, பா.ரெஜினா, சு.சாந்தி, சு.அறிவுச்செல்வன், கல்பாக்கம் இராமச்சந்திரன், ச.பாலகங்காதரன்,
அ.அன்புலதா, அ.தமிழ்கவி, ஆ.அசோக் குமார், கரு.புனிதவதி, மு.ஆண்டிராஜ், கை.வெற்றி, கு.இராமமூர்த்தி, பி.மலர்மன்னன், சி.பஞ்சலிங்கம், வெ.ரூபியா, அ.சிவானந்தம், சி.நிர்மலா, ஆபாண்டிக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலா ளர் இரா.மோகன்தாஸ் நன்றி கூறினார்.