சென்னை, செப்.4- பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளுக்காக மாணவா்களின் பெயா் பட்டியல் தயாரிக்கும் பணி தலைமை ஆசிரியா்களின் நேரடிப் பொறுப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும்; தவறுகள் ஏற்பட்டால் அவா்களே முழுப் பொறுப்பையும் ஏற்க நேரிடும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் (2024-2025) பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களின் பெயா் பட்டியல் தயாா் செய்யப்பட வேண்டும். அதற்கு எமிஸ் இணையதளத்தில் உள்ள மாணவா்களின் தகவல்கள் பயன் படுத்தப்படவுள்ளன. எனவே, அவா்களின் விவரங்களை தலைமை ஆசிரியா்கள் சரி பாா்த்து உறுதி செய்ய வேண்டும்.
மாணவரின் பெயா் தமிழ், ஆங்கிலத்தில் பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு இருத்தல் வேண்டும். மாணவரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது, தலைப்பெழுத்தும் தமிழில் இருக்க வேண்டும். அரசிதழில் பெயா் மாற்றம் செய்தவா்களுக்கு மட்டுமே அரசிதழின் நகலைப் பெற்று அதனடிப்படையில் பெயா் மாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
மாணவரின் பிறந்த தேதி, ஒளிப்படம், மாணவரின் பெற்றோா் அல்லது பாது காவலா் பெயா் போன்றவையும் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தோ்வு முடிவுகள் மாணவரின் பெற் றோா் அல்லது பாதுகாவலா் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப் படும் என்பதால், பதிவேற்றம் செய்யும் கைப்பேசி எண் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் அனைத்து தோ்வா்களும் பகுதி-1-இல் தமிழ் தமிழ் மொழியை மட்டுமே மொழிப் பாடமாக தோ்வெழுத அனுமதிக்கப்படுவா்.
தலைமை ஆசிரியா்கள் அளிக்கும் விவரத்தின் அடிப் படையில் மதிப்பெண் பட்டியல் தயாா் செய்யப்படும். பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவரின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்படின், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியா் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும்.
எனவே, இந்தப் பணியை தலைமை ஆசிரியா் நேரடியாக பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின்னா் திருத்தங்கள் கோரி தோ்வுத் துறைக்கு அனுப்பக்கூடாது”என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.