தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இது!
அறிஞர் அண்ணாவின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் அறிக்கை
தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டுத் தொடக்க விழா, அறிஞர் அண்ணாவின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்களைக் கொள்கைப் பெருவிழாக்களாக நாடெங்கும் நடத்துமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கழகக் கொள்கை உறவுகளே,
திராவிட – தமிழ் இன உணர்வாளர்களே,
ஒத்த கொள்கையாளர்களான முற்போக்காளர்களே,
பகுத்தறிவுச் செம்மல்களே,
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சான்றோர்களே!
இன்று, செப்டம்பர் பிறந்து 3 நாள்கள் ஓடிவிட்டன.
வருகிற செப்டம்பர் 17 – அறிவாசான் தந்தை பெரியார் அவர்களது 146 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா!
செப்டம்பர் 15 – அறிஞர் அண்ணாவின் 115 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா!
வரலாற்றுப் பெருமையை உள்ளடக்கிய விழா!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தொடங்க விருக்கும் வரலாற்றுப் பெருமையை உள்ளடக்கிய விழா!
இப்படி பெரியதோர், அரியதோர் பகுத்தறிவு, சுயமரி யாதை, சமதர்ம சமூகநீதி லட்சியங்களின் பாசறையின் வரலாறு படைக்கவேண்டிய திருவிழா – பெருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டிய நாள்கள் ஆயிற்றே!
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கொள்கைப் பரப்பு விழாக்கள்தான்!
திட்டமிட்டு செயலாற்றுங்கள்!
சிற்றூர், பேரூர், நாடு, நகரம், எல்லா இடங்களிலும் படங்களை வைத்து, பேரணிகள், சீரணிகளாக நடத்த முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்றுங்கள்!
நாம் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருவதன் செயல் மலர்கள் ‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்ற இலக்கின் பயணம் இனிதே தொடங்கி சிறப்புடன் பீடுநடை போடுகிறது!
தந்தை பெரியார் அவர்கள் அந்நாளிலேயே 1929–லும், 1953–லலும் இலங்கை, மலாயா, பர்மா– மியான்மர் சென்று கொள்கை விதை விதைத்தார். இன்று விளைச்சலை அறுவடை செய்யும் பருவம்!
அதற்குப் பிறகு, அய்யாவின் முன்னோக்குச் செயல்வடிவம் பெற்று ‘‘பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar International)’’ அமெரிக்காவில் சிகாகோ நகரில் 28 ஆண்டுகளுக்கு முன்பே டாக்டர் சோம.இளங்கோவன் தலைமையில் தொடங்கப்பட்டு, அவ்வமைப்பு உலகின் பற்பல நாடுகளிலும், பல புதிய கண்டங்களிலும் பீடுநடை போட்டு பரப்புரையை – சிறப்பாக செய்துவருகிறது!
பற்பல வெளிநாடுகளிலும் தந்தை பெரியார் என்ற அறிவு ஆசானின் சிந்தனைகள், செயல்கள், அறிவுப் புரட்சியின் பலாபலன்கள் பரப்புரை வெளிச்சங்களாகின்றன.
புதிய சரித்திரம் படைக்க,
விரைந்து வாருங்கள்!
தந்தை பெரியார்தம் கருத்துரைகள் – மாமழையாக – சுழன்றடிக்கும் சூறாவளியாக வீசுகிறது!
அமைதிப் புரட்சி, அறிவாயுதம், அறிவுப் புரட்சியின் அவசியம் கண்டு மாற்றார் மருளுகிறார்கள், உற்றார் உளம் பூரிக்கின்றனர்.
தொடரவேண்டும் இந்த சகாப்தம் –
படர வேண்டும் பகுத்தறிவுக் கொடி மலர்கள்!
செயலாற்றக் களம் அமைத்து,
புதிய சரித்திரம் படைக்க, விரைந்து வாருங்கள்!
என்றும் உங்கள் தோழன், தொண்டன்,
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
4.9.2024