சோக நினைவுகளுக்கு மத்தியில் இன்னொரு சுவையான செய்தி! 1979-இல் தந்தை பெரியார் நூற்றாண்டுவிழாவுக்கு அழைத்த கலைஞர் கருணாநிதி மன்றத்தின் நவசோதி அவர்களைக் குறித்தும், மற்ற நண்பர்களைக் குறித்தும் முதல் நாள் உரையாடலின் நடுவே சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர். நண்பர் ஒருவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கிய ஆசிரியருக்கு, சட்டென அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆசிரியருடன் பழகுபவர்களுக்குத் தெரியும் – நினைவுக்கு வரவில்லை என்றால், அதை எப்படியேனும் நினைவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டார். அப்படி பயிற்சியால் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவர் அவர். இரண்டாம் நாள் அன்று அந்த நண்பரின் பெயரை நினைவூட்டியது – பதினொருவர் நினைவிடத்துக்கு எதிரில் இருந்த அந்த மண்டபம். கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம் என்ற பேரைப் பார்த்த ஆசிரியருக்கு அவரது நண்பர் பெயர் நினைவு வந்தது. அவர் பெயர் வேலணை வீரசிங்கம்! அவரது நினைவாற்றலைக் கண்டு வியந்தார் பேரின்பநாயகம் அவர்கள். சிறு குழந்தையைப் போல அந்தப் பெயரைக் கண்டுபிடித்து மகிழ்ந்தது அந்த 91 வயதுக் குழந்தை!