மாநில கல்வித் திட்டம் தரமற்றதாம்; ஆளுநரின் அவதூறு கருத்து!
அமைச்சர்கள் க.பொன்முடி – அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி!
சென்னை, செப்.3- தமிழ்நாடு கல்வித்திட்டம்
தான் சிறந்தது என்று அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியிருக்கிறார்கள். வேண்டும் என்றால் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து விட்டுப் பேசுங்கள் என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர்.
சென்னையில் ஒரு பள்ளிக் கூட நூற்றாண்டு விழாவில் பேசிய ஆளுநர், ‘தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டம் தரம் குறைந்ததாக இருக்கிறது. இது போட்டித்தேர்வுகளுக்கு ஏற்ற தல்ல’ என்று கூறியிருந்தார்.
மாநில பாடத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
அமைச்சர்கள் விளக்கம்
ஆளுநரின் இந்தக் கருத்துக்கு உயர் கல்வித்துறை அமைச்சர்கள் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
‘தமிழ்நாடு கல்வித் திட்டம்தான் தரமானது ஆளுநர் வேண்டும் என்றால் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து கொள்ளட்டும்’ என்று அவர்கள் பதில் அளித்து இருக்கிறார்கள்.
அமைச்சர் க.பொன்முடி
சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் 45ஆவது பட்ட மளிப்பு விழா நேற்று (2.9.2024) நடந்தது பட்ட மளிப்பு விழாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி னார்.
விழாவில், 2021-2022ஆம் கல் வியாண்டில் படித்து முடித்த மாணவி களுக்கு அமைச்சர் க.பொன்முடி பட்டங்களை வழங்கி பேசியதாவது-
தி.மு.க. ஆட்சியில்…
படிப்பவர்களின் எண்ணிக்கை எப்படி உயர்ந்தது என்று மாணவிகள் கடந்த கால வரலாற்றை படித்துப் பார்க்க வேண்டும். 1974ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தான் காயிதே மில்லத் கல்லூரி தனித்துவ மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டது.
கல்வி கற்பவர்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. இந்த வளர்ச்சி தமிழ் நாட்டில்தான் இருக்கிறது. பெண் கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உணர்வோடுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் புதுமைப்பெண் திட் டத்தை செயல்படுத்தி னார். எனவே, உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
வேலைக்கு செல்வதற்கான திறமையை நாம் படிக்கும் போதே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் முதல மைச்சரின் நோக்கம். இதேபோல, வேலை வழங்குபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். அதற்காகத்தான் ‘நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
சிறந்த மாநிலம் தமிழ்நாடு
இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தற்போது விளையாட்டிலும் சிறந்த மாநில மாக தமிழ்நாடு திகழவேண்டும் என்பதற்காக ‘ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தை’ நடத்தி ஒரு வரலாற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.
தமிழ்நாட்டில்தான் ஆரம்பப் பள்ளியில் இருந்தே அறிவுத் திறன் வாய்ந்த பாடத்திட்டம் உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் படிப்பு, கல்வித்திறன், பாடத்திட்டம் ஆகியவை சிறப்பாக இருக்கிறது. 2006-2011ஆம் ஆண்டில் திமு.க. ஆட்சியில்தான் சமர்ச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தையும், நமது பாடப்புத்தகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நமது பாடத்திட்டம் மிகச் சிறப்பாக உள்ளதை காணமுடியும்.
– இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியா ளர்க ளுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:
ஒன்றிய அரசு நிதி வழங்காதது குறித்து ஏற்கெ னவே பல விவாதங்கள் போய்க் கொண்டி ருக்கின்றன. தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில் ‘முதலில் எங்களுக்கான சமக்ரா சிக்ஸா திட்டத்தின் கீழான தவணை தொகையை வழங்குங்கள்’ என்றுதான் நாங்கள் கேட்டோம். பி.எம். சிறீ. திட்டத்தின் கீழ் தரமான கல்வியை வழங்க வேண்டிய அதேவேளையில், புதியகல்விக் கொள்கையை புகுத்த வேண்டும் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே நாங்கள் குழு அமைத்து, அந்த கமிட்டி பரிந்துரை செய்வதை பொறுத்தே முடிவெடுப்போம் என்று தெளிவாக கூறி யிருந்தோம். பின்னர், எங்களது கமிட்டி அதை ஒத்துக்கொள்ளவில்லை என்று ஒன்றிய அமைச்சரிடம் கூறி, அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணத்தை கொடுங்கள் என்று கேட்டோம்.
எந்தக் காரணத்தை கொண்டும் கொள்கையை விட்டுக்கொடுத்து அதை பெற மாட்டோம். நாங்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை என்று ஒன்றிய அமைச்சருக்கே தெரியும்.
தமிழ்நாடு கல்வித்திட்டம் தரமானது
மாநில கல்வித் திட்டம்தான் தரமானது. மாநில பாட புத்தகத்தை படிப்பதன் மூலமாக போட்டித் தேர்வுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்? எவ்வளவு பேர் அடுத்தக் கட்டத்திற்கு சென்று உள்ளார்கள்? என்பதை ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை கடந்து நமது பாடத் திட்டம் எவ்வளவு சிறப்பாக உள்ளது? என்பதை ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்துவிட்டு பேசட்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசின் போட்டித்தேர்வுகளில் நமது மாநில பாடபுத்தகத்தில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஆய்வுக்கு வரட்டும்
அதனால்தான் நூலகங்களில் மாநில புத்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் தங்களை தயார் செய்து வருகிறார்கள். வேண்டுமானால் ஆளுநர் ஒருநாள் நூலகத்திற்கு என்னுடன் ஆய்வுக்கு வரட்டும். அதன் பின்பு குற்றச்சாட்டை அவர் சொல்லட்டும்.
– இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.