நமது சிறப்புச் செய்தியாளர்
தமிழர்தம் வரலாற்றுத் தாயகங்கள் தமிழ்நாடும் ஈழமும்! இன்று இந்தியா என்றும், இலங்கை என்றும் அழைக்கப்படும் நிலப்பரப்புகள் பல மில்லியன் ஆண்டுகளாக நிலத்தால் இணைந்தும், நீரால் அவ்வப்போது பிரிந்தும் இருப்பவை. கடந்த 5000 முதல் 8000 ஆண்டுகளுக்குள்ளான கால கட்டத்தில் தான் (கி.மு.6000-க்கும் கி.மு.3000க்கும் இடைப்பட்ட காலம்) கடற்கோளால் கடைசியாகப் பிரிக்கப்பட்டன. பாக் நீரிணைப்பில் இருக்கும் உயரம் குறைந்த மணல் திட்டுகள் இந்நிலப்பரப்புகளுக்கிடையே இருந்த தொடர்பின் மிச்சங்களே!
தொடரும் தொப்புள் கொடி உறவு
வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இந்நிலப்பரப்புகளில் வாழ்ந்துவந்த மக்கள் ஓரினத்தவரே! அதனால் தான் மொழியும், பண்பாடும் ஒன்றாகச் செழித்து வளர்ந்தன. அரசியல் ரீதியிலும் இருநாடுகளுக்கும் இருந்துவரும் தொடர்புகளுக்கு இலக்கியமும், கல்வெட்டுகளும் சான்று பகர்கின்றன. இவ்விரு நிலப்பகுதிகளும் கடந்த நூற்றாண்டின் முதல் பாதி வரைக்கும் ஒரே அரசின் கீழ் (இங்கிலாந்து) ஆளப்பட்டவை. நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களும், அரசுகளுமிருந்த நிலப்பகுதி இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் இரண்டே நாடுகளாக உருவாக்கப்பட்டதைப் போலவே, யாழ்ப்பாணம், கண்டி, கோட்டை என்று மூன்று அரசுகளாக 16-ஆம் நூற்றாண்டு வரை இருந்த ஈழ நிலப்பரப்பு, போர்த்துகீசியர்களின் ஆளுகைக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கும் வந்து பிறகு 1948-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டபிறகு சிலோன் (இலங்கை) என்ற ஒரே நாடானது. பின்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசாக 1972-இல் தன்னை அறிவித்துக் கொண்டது. தமிழர்களும், சிங்களர்களும், மூர்கள் உள்ளிட்ட இனத்தவரும் நிறைந்த இம் மண்ணில் 1956 முதல் எழுந்த இன – மொழிச் சிக்கல்களும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் – இராணுவப் போராட்டங்களும், அதில் தார்மீக அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர் தம் உரிமைக்குரலுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு வகித்த பங்கும் பெரும் நூல் தொகுதிகள் எழுதும் அளவுக்குச் செய்திகள் கொண்டவை. அவ் வரலாற்றை எழுதுவது இக்கட்டுரையின் நோக்கமன்று.
உலகத் தமிழர்களின் கவலை
நவீன காலத்தில், குறிப்பாகக் கடந்த நூற்றாண்டில் தொடங்கிய இலங்கையின் இன-மொழிச் சிக்கல் களும், அரசியல் ரீதியான அடக்குமுறைகளும், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், அரங்கேறிய இனப் படு கொலையும் அதற்கெதிரான போராட்டங்களும்
2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போருக்குப் பிறகு அமைதி நிலைக்குக் கொண்டுவரப்பட்டன. ஆனால், அது மயான
அமைதி!
அமைதி என்று பொதுவாகத் தமிழில் சொல்லப்படும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் பல சொற்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் விரிந்த பொருளுண்டு. Peace என்பது பிரச்சினைகளற்ற, சமாதானமான சூழலைக் குறிக்கும். Silence யாரும் எதுவும் பேசாத, ஒலி எழுப்பாத, சத்தமில்லாத அமைதியைக் குறிக்கும். இலங்கையில் அனைவரும் வேண்டுவது சமாதனத்தைக் குறிக்கும் அமைதியை; சத்தமில்லாத அமைதியை அல்ல! அதற்கான சூழல் அமைய வேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் கவலை.
2009-இல் ஆயுதங்கள் மவுனிக்கப்பட்ட தற்குப் பிறகு, இழந்த உரிமைகளை மீட்க, ஜனநாயக ரீதியில் போராடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் கவனத்தை ஈர்த்து, மறு கட்டமைப்பு மட்டுமல்லாது, உண்மையான உரிமைகளைப் பெறுவதற்காக அரசியல் – ஜனநாயக வழிகளில் தமிழர்கள் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் இத்தகைய உரிமைப் போராட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரும், ஈழத் தந்தை செல்வாவின் வழியில் அரசியல் களத்தில் செயலாற்றி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும், இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான முதல் தமிழர் என்னும் பெருமைக்குரியவராகவும் திகழ்ந்த பெருமகனார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்து, அந்நிகழ்வில் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்திருந்தனர்.
யாழ் பயணம்
அழைப்பை ஏற்று தமிழர் தலைவர் அவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் 2024 ஆகஸ்ட் 23 அன்று முற்பகல் 11:45-க்குக் கிளம்பி, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பிற்பகல் 1.20 மணியளவில் சென்றடைந்தார். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சென்றிருந்தனர்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழர் தலைவரை வரவேற்க இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் வருகை தந்திருந்தார். அவருடன் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை அறங்காவலர்கள் க.கவுரிகாந்தன், எழுத்தாளர் தங்க.முகுந்தன், அமிர்தலிங்கம் அவர்களிடம் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.பேரின்பநாயகம், காங்கேசன் துறை தொகுதி இ.த.க. இளைஞரணித் தலைவரும், சேனாதிராஜா அவர்களின் மைந்தருமான கலை அமுதன் ஆகியோர் வந்திருந்து வரவேற்றனர். பாராட்டத்தக்க வகையில் மிகுந்த மரியாதையுடன் விமான நிலைய அதிகாரிகள் தமிழர் தலைவரிடம் நடந்து கொண்டனர்.
நீங்காத நினைவுகள்
பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வழியில், உடன் வந்திருந்தவர்களிடம் 45 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவுக்காக இலங்கை வந்திருந்த நிகழ்வு குறித்தும், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த இலங்கை திராவிடர் கழகத் தோழர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள், அமிர்தலிங்கம் அவர்களுடனான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டும், விசாரித்துக் கொண்டும் வந்தார் ஆசிரியர்.
மாலை 4.45 மணிக்கு டேன் தொலைக் காட்சியின் ஸ்பாட் லைட் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. படப் பிடிப்புத் தளத்திற்கு வந்த தமிழர் தலைவரை டேன் டிவி நிர்வாகிகள் வரவேற்றனர். டேன் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுலக்சன், ஈழநாடு ஆசிரியர் தேவராஜ் ஆகியோர் திராவிடர் கழகம், ஈழ மக்களின் நிலை, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படுதல், எதிர்காலப் பணிகள் உள்ளிட்ட பல கோணங்களில் கேள்விகளை முன்வைத்து, சிறப்பான நேர்காணலைச் செய்து முடித்தனர். (முழுப் பேட்டி எழுத்துவடிவில் தனியே வெளிவரும்) அயல்நாட்டுப் பயணங்களின் போது இந்திய அரசியல், அந்நாட்டு அரசியல் குறித்துப் பேசுவதில்லை என்பதையும் தமிழர் தலைவர் தெளிவுபடுத்தினார்.
நேர்காணல் 25-ஆம் தேதியன்று உலகெங்கும் ஒளிபரப்பானாலும், அதன் சாரமான செய்தியை ஈழநாடு ஏடு ஆகஸ்ட் 24 அன்றே “ஈழத் தமிழர் பிரச்சினை தீர்வுக்கு சகலரும் ஓரணியாக வேண்டும்!” என்று முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. [1981-ஆம் ஆண்டு மே 31 இரவு யாழ்ப்பாணத்தில் தொடங்கிய கலவரத்தில் ஜூன் 1 அன்று எரிக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஈழநாடு பத்திரிகை அலுவலகமும் ஒன்றாகும்.] யாழ் குடா நாடு என்பது பல கடலேரிகள் உள்ள பகுதியாகும். மாலையில் சிறிதுநேரம் அந்தப் பகுதியில் நடைபோட்டுவிட்டுத் திரும்பினார்.
ஈகியருக்கு மரியாதை
இரண்டாம் நாளான 24.08.2024 காலை 9:30 மணிக்குக் கிளம்பித் தயாரானோம். முதலில் ஈழத்தந்தை செல்வா அவர்களின் நினைவிட வளாகத்திற்குச் சென்றோம். தந்தை செல்வா சிலைக்குத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார். உடன் தந்தை செல்வாவின் பேரனும், சந்திரகாசன் அவர்களின் மகனுமான இளங்கோவன் இருந்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா ஆகியோர் தந்தை செல்வாவின் நினைவிடத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான கனகசபாபதி, நிர்வாகச் செயலாளர் குலநாயகம், தங்க.முகுந்தன்,
ஆர்.பேரின்பநாயகம் ஆகியோரும் தந்தை செல்வா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். வளாகத்திலிருந்த 80 அடி உயர செல்வா நினைவுத் தூண் தந்தை செல்வாவின் நினைவிடத்திற்கான பேரடையாளமாகத் திகழ்கிறது.
தொடர்ந்து யாழ்ப்பாணம் – காங்கேசன் துறை சாலை யில் உள்ள ‘4-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயம்’ சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் 1974-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை எட்டு நாள்கள் நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அதன் இறுதி நாளன்று மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண யாழ்ப்பாணம் சுற்றுவட்டாரப் பகுதிகளி லிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியை மட்டும், மக்கள் காணும் வகையில் வெளி அரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டது. முதல் நாள் பெய்த மழையையும் பற்றி கவலை கொள்ளாமல், வெளியரங்க நிகழ்ச்சி நடைபெறும் என்று திரண்டிருந்த மக்கள் நிகழ்ச்சியைச் செவி மடுத்துக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலிருந்து வேனிலும், ஜீப்பிலும் வந்த காவலர்கள் நிகழ்த்திய கண்ணீர்ப் புகை குண்டு வீச்சிலும், துப்பாக்கிச் சூட்டிலும், அதனால் மக்கள் சிதறியோடியதிலும் 11 தமிழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஒரு கொண்டாட்டமான நிகழ்வு கொடுங்கனவாக முடிந்தது. உலகத் தமிழர்கள் அன்றைய இலங்கை அரசின் கொடுங்கோன்மையை உணர்ந்துகொண்டனர். ஈழத் தமிழர்கள் வரலாற்றில் தனித் தமிழ் ஈழம் என்னும் முழக்கத்தைத் தமிழ்மக்களின் அனைத்துத் தலைவர்களும் முன்னெடுத்து வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வருவதற்கு இந்நிகழ்வு முக்கியக் காரணமாக அமைந்தது.
அவர்கள் உயிர்நீத்த இடத்தில் 11 தூண்களும், நடுகல்லும் நடப்பட்டு ‘4-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயம்’ அமைக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மலர் தூவி மரியாதை செய்தார். கழகப் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர்.
(நாளை தொடரும்)