திருப்பத்தூர், செப்.2 செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஓயேசிஸ் அரங்கில் 28.08.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் ஏற்பாட்டில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி.தமிழ்ச்செல்வன் தலைமையில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக வரவேற்பில் வே.அன்பு, மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் ஒருங்கிணைப்பில் நடை பெற்றது.
தந்தை பெரியார் பேச்சுப் போட்டிக்கு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 22 கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 12 கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 94 பேர் முன் பதிவு செய்திருந்தினர் அதில் 82 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
பெரும்பான்மையானோர்
பெண்கள்
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பேச்சுப் போட்டியில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்க்கும் போது தந்தை பெரியார் அவர்களுக்கு பெண்கள் பெயர் வைத்துக் காலம் முதல் இந்நாள் வரை அவர் மீது பெண்கள் வைத்திருக்கும் அன்பு தொடர்கிறது என்பதையும்,பெரியார் சிந்தனைகளைப் பின் தொடர்கிறார்கள் என்பதையும் உணர முடிந்தது. ‘‘அடுப்பு ஊதும் பெண்களுக்கு கல்வி எதற்கு’’ என்ற கேள்வி கேட்ட நிலை மாறி, இனி வரும் காலங்களில் பெண்கள் சமைப்பது கடினம் கல்வி கற்று வேறு பணிகளுக்கு சென்று விட்டார்கள். ஆகவே, ‘‘ஆண்களே நீங்கள் அடுப்பு ஊதும் காலம் வந்துவிட்டது சமையல் கற்றுக் கொள்ளுங்கள்’’ என்று ஆண்களைப் பார்த்து ஆசிரியர் எச்சரிப்பது சரி தான் என்று உணர்த்தியது பெண்களின் பங்களிப்பு.
இப்பேச்சுப் போட்டிக்கு மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்ெசய லாளர் அண்ணா சரவணன், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் சி.உமா, தூயநெஞ்சக் கல்லூரி பேராசிரியர் மோகன் காந்தி ஆகியோர் நடுவர்களாக இருந்து பேச்சை மதிப்பீடு செய்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா. அன்பரசன் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தனர். இவர்களுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வே. அன்பு ஆகியோர் பெரியார் புத்தகங்களை வழங்கி சிறப்பு செய்தனர்.
அவர்கள் மாணவர்களிடத்தில் ஊக்க உரையாற்றினர். பேச்சுப் போட்டியை போட்டியாகக் கருதாமல் பயிற்சியாக எடுத்துக் கொண்டு பேசும் மாறும், எடுத்துக் கொண்ட தலைப்பையொட்டி தங்கள் கருத்துகளை முன் வைக்குமாறு மாணவர்களை உற்சாகப்படுத்திப் பேசினர்.
மாணவர்களின் பேச்சுகளை கருத்துச் செறிவு, மொழிநடை, எடுத்துரை என்ற நிலைகளில் மதிப்பீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு நிலைக்கும் பத்து மதிப்பெண்கள். ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட தலைப்பில் 5 நிமிடம் பேச அனுமதி வழங்கப்பட்டது.
பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பெரும்பான்மையோர் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். அவர்களின் பேச்சு ஹிந்தி மொழி திணிப்பு, தந்தை பெரியாருக்கு வழங்கிய பட்டங்கள், முதல் அரசமைப்புச் சட்ட திருத்தம், தந்தை பெரியார் – காந்தி சந்திப்பு, தந்தை பெரியார் – அம்பேத்கர் சந்திப்பு, பள்ளிகளில் ஜாதி, ஜாதிக் கயிறு, சேரன்மகாதேவி குருகுலம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம், நீதிக்கட்சி அதன் பங்களிப்பு, ஜாதி மறுப்புத் திருமணம், சுயமரியாதை, பிள்ளையார் சிலை உடைப்பு, தனித் தமிழ்நாடு, பெரியார் அவர் தந்தையுடன் கருத்து வேறுபாடு, கடவுள் மறுப்பு என்று பல்வேறு விதமாக பெரியார் சிந்தனைகளை உள்வாங்கி பேசினர். மொத்தத்தில் பெரியார் ஆதிக்கத்திற்கு எதிரான நிலையில் நின்று ஒடுக்கப்படுவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் என்பதை முழுமையாக உணர்ந்த நிலையில் இருந்தது அவர்களின் பேச்சு.
பரிசுகள் அளிப்புபேச்சுப் போட்டி முடிவில் மாண வர்களின் பேச்சைப் மதிப்பீடு செய்து நடுவர்கள் அறிவித்தனர். அதில் முதல் பரிசுத் தொகை 3000 ரூபாயை கு. சஞ்சய் குமார் (இரண்டாம் ஆண்டு வரலாறு, இஸ்லாமிய கல்லூரி, வாணியம்பாடி). இவர் ‘‘சுய சிந்தனையாளர் பெரியார்’’ என்ற தலைப்பில் பேசினார். இவருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் பரிசளித்து சிறப்பித்தார்.
இரண்டாம் பரிசு 2000 ரூபாயை ஆர்.காயத்ரி பி.எட்., (இரண்டாம் ஆண்டு, திருமால் கல்லூரி, சுந்தரம் பள்ளி). இவர் பேசிய தலைப்பு ‘‘புரட்சியாளர் பெரியார்.’’ இவருக்கு பேராசிரியர் சி. உமா பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.
மூன்றாம் பரிசு தொகை 1000 ரூபாயை எஸ்.ஆகாஷ் (இரண்டாம் ஆண்டு வேதி யியல் துறை, தூயநெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்). இவர் பேசிய தலைப்பு ‘‘பெரியார் பிறவாமல் இருந்தால்.’’ இவருக்கு பேராசிரியர் மோகன் காந்தி பரிசு வழங்கி சிறப்பித்தார்.
ஆறுதல் பரிசாக அரசு கலைக் கல்லூரி, கரியம்பட்டிக்கு மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்ெசயலாளர் அண்ணா சரவணன், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வாணியம்பாடி இரா. அன்பரசன் ஆகி யோர் வழங்கி சிறப்பித்தனர்.
தந்தை பெரியார் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழும், பெண்களுக்கு, ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற புத்தகமும், ஆண்களுக்கு, ‘‘இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?’’ என்ற புத்தகமும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிந்து விடைபெறும் போது, ‘‘மீண்டும் எப்போது பேச்சுப் போட்டி’’ என்று கேட்டார்கள். அடுத்த ஆண்டு அதிகப் பரிசு தொகையுடன் உங்களை சந்திக்கிறோம் என்றோம்.
வெகுதொலைவில் இல்லை!
மாணவர்கள் சரியான பாதையில் தான் செல்லுகிறார்கள். அவர்களுக்கு சரியான திசையைக் காட்டினால் தந்தை பெரியார் சிந்தனைகளை முழுமையாக நிறைவேற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர்கள் கேட்கும் ஆர்வத்திலிருந்து உணர்ந்தோம்.
இந் நிகழ்ச்சியில் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட துணைத் தலைவர் தங்க அசோகன், மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் சுப்புலட்சுமி காளிதாஸ், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் இரா. கற்பகவள்ளி, ஏ.டி. நகர செயலாளர் ஜி. சித்தார்த்தன், கோ. திருப்பதி, சோலையார்பேட்டை அமைப்பாளர் இராஜேந்திரன், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் தா. பாண்டியன், நகர அமைப்பாளர் க. முருகன், நகர இளைஞரணி செயலாளர் அக்ரி அரவிந்த் மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீடித்தது. வருகை தந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன் நன்றி தெரி வித்தார்.