முதலமைச்சர் வேண்டுகோள்
சான்பிரான்சிஸ்கோ,செப்.2-தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவ னங்களை தூண்ட வேண் டும் என்று சான்பிரான் சிஸ்கோவில் தமிழர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்தார்.
அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா வுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் (31.8.2024) சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது முதலமைச்சருக்கு பறை இசை முழக்கத்துடன், திருக்குறள் பாடி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது,
‘‘உலகின் மூன்றாவது பெரிய நாட்டிற்கு நான் வந்திருக்கிறேன். 1971-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வருகை தந்தார். அவரது மகனான நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு இப்போது வந்திருக்கிறேன்.
உலகின் மதிப்பு மிக்க அமெரிக்க நாட்டில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களான உங்களை பார்க்கும்போது எனக்குப் பெருமையாவும், மகிழ்ச்சி யாவும் இருக்கிறது. இத்தனை இந்திய முகங்களை இங்கே பார்க்கும்போது இந்தியாவில் ஏதோ ஒரு மாநிலத்தில் இருக்கிற மாதிரிதான் எனக்கு இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கிறேன் என்று தோன்றவில்லை. உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் – அது இந்தியர் இல்லாத நாடாக இருக்காது. இந்தியர்கள் வாழுகிற நாடாகத்தான் உலகின் எல்லா நாடுகளும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா என்பது இந்தியர்களை ஈர்க்கிற நாடாக எப்போதுமே இருந்திருக்கிறது.
நியூயார்க், நியூஜெர்சி, வாசிங்டன், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பால்ட்டிமோர், பாஸ்டன், டாலஸ், ஹியூஸ்டன், பிலடெல்ஃபியா, அட்லாண்டா இப்படி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீங்கள் வசித்து வருகிறீர்கள். சில பேரை நான் குறிப்பிட மறந்திருக்கலாம். இப்படி பரந்து விரிந்த அமெரிக்கா முழுமைக்கும் தமிழர்கள் பரந்து இருக்கிறார்கள். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இந்திய இன மக்கள் இருக்கின்றீர்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு இருக்கின்றீர்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்க நான் வந்திருந்தாலும், என் இனிய இந்திய சொந்தங்களின் முகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்குத் தான் நான் இப்போது இங்கு வந்திருக்கிறேன்.
நம்முடைய இந்தியாவும், நீங்கள் இருக்கக்கூடிய அமெரிக்காவும் உலகில் இருக்கக்கூடிய மிக முக்கியமான நாடுகள். இரண்டுமே ஜனநாயக நாடுகள். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா இருக்கிறது என்றால், அய்ந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான நட்பு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது.
இந்தியாவில் வர்த்தகம், அறிவியல், கணினி ஆகிய துறைகளில் நல்லுறவு தொடர்கிறது. கேல்லப் என்ற நிறுவனத்தினுடைய பொது கருத்துக் கணிப்பின்படி அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தை இந்தியா பெற்றிருக்கிறது. அதேபோல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் பட்டியலில் இந்திய மக்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா குடியுரிமை பெற்றவர்களில் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் 12.7 விழுக்காடு. இந்தியர்கள் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியாவை ஈர்க்கின்ற நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில் வாழ்கின்ற மக்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றாலும் உயர் கல்வியிலும், வர்த்தகத்திலும், சிறப்பான உயர் பதவிகளிலும் இந்திய வம்சாவளியினர் மிக அதிக இடங்களைப் பெற்றிருக் கின்றார்கள்.
அமெரிக்க நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கின் றார்கள். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். 2000 ஆண்டு களுக்குப் பிறகு இருதரப்பு வர்த்த கமும் மூன்று மடங்காக உயர்ந்து விட்டது. இவையெல்லாம் இரண்டு நாடு களுக்குமான நட்பின் அடையா ளங்கள்.
ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்தியா – அமெரிக்கா உறவு மிக மிக முக்கியமாக இருக்கிறது. அமெ ரிக்க வாழ் இந்தியர்கள் இந்திய வம்சாவளியினர் மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பது உங்கள் மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும் போதே எனக்கு தெளிவாகத் தெரிகிறது. இந்தியா – அமெரிக்கா நட்பு என்பது இரண்டு நாட்டு அரசுகளின் உறவாக மட்டுமில்லாமல், இரண்டு நாட்டு மக்களின் நட்புறவாகவும் எப்போதும் அமைந்திருக்கிறது என்பது தான் இரு நாடுகளுக்கிடையிலான தனிச் சிறப்பு. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு என்பது அமெரிக்காவின் ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது. புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருப்பது தான் இதற்கு காரணம்.
300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறு வனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நேரில் அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும் என்று உங்களை உரிமையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
மிகச் சிறந்த கல்வி, அந்த கல்வியில் அறிவுக் கூர்மை, தனித் திறமைகள், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை, குறிப்பிட்ட இலக்கை அடைய தளராத முயற்சிகள், இவை தான் உங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து உயர்த்தியிருக்கிறது. பணம், புகழ், அதிகாரம், வசதி வாய்ப்புகளை விட இந்த அய்ந்தும் தான் உங்களை வளர்த்து இருக்கிறது. இந்த உயர்ந்த குணங்களை மற்றவர்களுக்கும் உணர்த்தி அனைவரின் வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். வேற்றுமை எண்ணம் துளியும் இல்லாமல் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும்.’’
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டார்.
பங்கேற்றவர்கள்
நிகழ்ச்சியில் முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, அமைச்சர் டி.ஆர். பி.ராஜா, துணைத்தூதர் சிறீகர் ரெட்டி, அயலகத் தமிழர் நல வாரியத்தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி. அரசு அதிகாரி கள் உள்பட மேயர்கள்,துணை மேயர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.