ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மேனாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, மேனாள் நிர்வாக அதி காரி தர்மாரெட்டி உள்பட மேலும் பலருக்கு தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் சிறீவாணி அறக்கட்டளை நுழைவுச் சீட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம், மீனவர்கள், எஸ்சி, எஸ்டி-க்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில்களை கட்டவும், நலிந்த கோயில்களை மராமத்து செய் யவும், தீப, தூப நைவேத்தியங்களுக்கு உதவவும் மட்டுமே பயன்படுத்துவதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை எத்தனைக் கோயில்கள் கட்டப்பட்டன? எவ்வளவு செலவு செய்தனர்? என்பது குறித்த விவரங்கள் இல்லாததால் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேற்கூறிய செயல்பாடுகளில் ரூ.530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவில் கான்டிராக்ட் வழங்கியதிலும் கோடிக்கணக்கில் முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆதலால், அப்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி மற்றும் திருப்பதி மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் அப்போதைய அறங்காவலர் குழு தலைவருமான கருணாகர் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மட்டுமே கான்டிராக்ட் பணிகள் நடத்தப்படும். ஆனால் இவர்களது நிர்வாகத்தில் மட்டும், சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனைக்கு ரூ. 77 கோடி, கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்ட ரூ.420 கோடி ஒதுக்கப்பட்டன. மேலும், இதுபோல் பல சிவில் பணிகளுக்கும் கோடிக்கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கமிஷன் பல கோடி பெற்றுள்ளதாக வந்த புகார்களின் பேரில் தர்மாரெட்டி மற்றும் கருணாகர் ரெட்டிக்கும், தேவஸ்தான ஆடிட்டர் பாலாஜி, மேனாள் அறங்காவலரான ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டிக்கும் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தேவஸ்தான சிம்ஸ் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவ மனையான பேர்ட்ஸ் மருத்துவமனையில் தர்மா ரெட்டி சில மாதங்கள் வரை கூடுதல் பொறுப்பில் இருந்தபோது, சட்டத்திற்கு புறம்பான வகையில் பல்வேறு பணி நியமனங்களும் நடை பெற்றதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. இது குறித்தும் விளக்கம் அளிக்க கோரி தாக்கீது பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தேவஸ்தானத்தில் நடந்த பல கோடி ரூபாய் முறை கேடுகள் விரைவில் வெளி உலகிற்கு தெரிய வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. (28.8.2024 வெளிவந்த செய்தி)
கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று பார்ப்பனர்கள் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆகஸ்டு 28ஆம் தேதி வெளிவந்த இந்தச் செய்திக்கு நாணயமான பதில் உண்டா?
பெரிய பணக்காரக் கடவுள் திருப்பதி ஏழுமலையான் – அந்தக் கோயிலில் கொள்ளைப் போவது எல்லாம் இது முதல் முறையல்ல – எத்தனையோ முறை கொள்ளை, திருட்டெல்லாம் நடந்திருக்கின்றன.
ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் வைர நகைகள், தங்க நகைகள், காணிக்கைகள் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று சொல்லப்படுகிறது.
தங்க முலாம் பூசப்பட்ட செப்பு நகைகளை வைத்துவிட்டு, ஒரிஜினல் நகைகளைக் களவாடியதுண்டு. முக்கிய செய்தியாக, வெளிவந்தது (‘மாலை முரசு’ 28.8.2009).
தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி ரமணகுமார் வெளி யிட்ட அறிக்கை அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தது.
‘‘ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை செய்யப்படுகிறது.
2006ஆம் ஆண்டு சுமார் 5 கிராம் கொண்ட முந்நூறு தங்க டாலர்களை உரிய ரசீது இல்லாமல் மோசடியாக விற்பனை செய்ததாக விற்பனைப் பிரிவில் கே. வெங்கடாசலபதி (இவரும் வெங்கடாசலபதிதானோ) என்பவர்மீது புகார் எழுந்தது. இந்த மோசடி குறித்து விவாதிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டதன் அடிப்படையில் ரமணகுமார் விசாரித்த போதுதான் 2001லிருந்து 2006 வரை இப்படி மோசடி நடந் திருப்பது தெரிய வந்திருக்கிறது என்று கூறினார்.
நெற்றியில் நாமம், தொப்புள் வரை தொங்கும் டாலர் – இவருக்குப் பெயரே டாலர் சேஷாத்திரியாம்! இவ்வளவுப் பெரிய மோசடி நடந்தும், அவர்மீது ஒரு சிறு துரும்போ, தூசோ விழவில்லை என்பதுக் கவனிக்கத்தக்கது. (‘ஜுனியர் விகடன்’ (7.8.2009)
மன்னன் கிருஷ்ண தேவராயன் பல முறை ஏழுமலையான் கோயிலுக்கு வந்து ஒவ்வொரு முறையும் வழங்கிய வைர அங்கிகளும், பல்வேறு நகைகளும் போன இடமே தெரியவில்லை என்ற செய்தி உலகப் பிரசித்தி பெற்றது.
1513ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி தமது மனைவிகள் இருவருடன் (திருமலாதேவி, சின்னதேவி) மன்னன் கிருஷ்ணதேவராயன் ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்தபோது, நவரத்தினக் கிரீடம் ஒன்றையும், வெள்ளித் தட்டுகளையும் இரு தங்கக் கிண்ணங்களையும் காணிக்கையாக்கி இருக்கிறார்.
1514 ஜூன் 6ஆம் தேதி 30 ஆயிரம் வராகன்களில் தங்கக் காசுகளால் ஏழுமலையானுக்கு ‘கனகாபிஷேகம்’ செய் துள்ளார்.
1515ஆம் ஆண்டில் ரத்தினக் கற்கள் பதிக்கப்்பட்ட தங்க மகர தோரணம் ஒன்றையும் காணிக்கையாக்கினார். 1518 செப்டம்பர் 9ஆம் தேதியன்று கோயில் கருவறை விமானக் கோபுரத்தில் 30 ஆயிரம் வராகனில் தங்கத் தகடு பதித்தார்.
1521 பிப்ரவரி 17இல் நவரத்தினக் கிரீடத்தைச் சூட்டி னார். விலை மதிப்பு மிக்க வைரப் பீதாம்பரத்தையும் தம் பக்தியின் பரிசாக அளித்து மகிழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயன் முடி சூட்டிய 500ஆவது ஆண்டினை ஒட்டி பெரு விழா எடுப்பது என்றும், அப் பொழுது ஏழுமலையான் கோயிலுக்கு மன்னன் கிருஷ்ண தேவராயன்அளித்த நகைகளைக் கண்காட்சியாக வைப்பது என்றும் முடிவு செய்த நிலையில்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் திடுக்கிட வைக்கும் மோசடிகள் அம்பலத்திற்கு வர ஆரம்பித்தன.
திருப்பதி ஏழுமலையான் கோயில் அரசு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல என்பது கவனிக்கத்தக்கதாகும்.
கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடுவதன் பொருள் என்ன என்பது இப்பொழுது தெரிகிறதா?