நூறு ஆண்டுகளில் இந்த தன்னம்பிக்கையை உருவாக்கியதுதான் திராவிடர் இயக்கத்தின் மாபெரும் சாதனை!
நெல்லை வீரவநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சியுரை!
நெல்லை, செப்.2 ‘‘உன்னால் முடியும்! என்னால் முடியும்! பெண்ணால் முடியும்! நூறு ஆண்டுகளில் இந்த தன்னம்பிக் கையை உருவாக்கியதுதான் திராவிடர் இயக்கத்தின் மாபெரும் சாதனை’’ என்று நெல்லை வீரவநல்லூரிில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.!
நிகழ்ச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர், சட்டப்பேரவை மேனாள் தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
திருநெல்வேலி மாவட்ட கழகத்தின் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 51A(H) விளக்கம் என்று மூன்று தலைப்புகளை உள்ளடக்கிய பொதுக்கூட்டமும் அதில் ‘‘மண்டல் குழுவும், திராவிடர் கழகமும்’’, ‘‘உலகத் தலை வர் பெரியார் வாழ்க்கை வரலாறு’’ நூல் வெளியீட்டு விழாவும் இணைக்கப்பட்டு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைவாணர் திடலில் நேற்று (1.9.2024) மாலை
6 மணியளவில் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில், சேரை ஒன்றிய கழகத் தலைவர் கோ.செல்வசுந்தரசேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் தொடக்க உரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தூத்துக்குடி மா.பால்ராசேந்திரம், சு.காசி, வள்ளியூர் ந.குணசீலன், மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன், குமரி மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் வெற்றிவேந்தன், மேலமெஞ்ஞானபுரம் டேவிட் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். இந்நிகழ்வை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்துச் சிறப்பித்தார்.
புத்தக வெளியீட்டுக்கு கிடைத்த மரியாதை!
மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், தி.மு.க. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளருமான
இரா.ஆவுடையப்பன், ‘‘மண்டல் குழுவும், திராவிடர் கழகமும்’’, ‘‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு’’ நூல்களை வெளியிட்டு, மூடநம்பிக்கை கூடாது என்ற பொருளில் உரையாற்றினார்.
தி.மு.க. நகரச் செயலாளர் வீரசுப்பையா, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் இரா.சுப்பிரமணியன், சி.பி.அய். நகரச் செயலாளர் அ.தாமஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கா.சுல்தான், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எல்.சிதம்பரம், வி.சி.க., நகரச் செயலாளர் க.சவுந்தரராஜன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் அ.மணிவண்ணன், மனிதநேய மக்கள் கட்சி பீ.நவாஸ், பேரூராட்சித் தலைவர் சு.சித்ரா, பேரூராட்சி துணைத் தலைவர் பா.வசந்த சந்திரா, வி.சி.க. ஒன்றியச் செயலாளர் வே.மாதவன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ம.தி.மு.க. நகரச் செயலாளர் மலை காந்தி, பத்தமடை பேரூராட்சித் தலைவர் ஆபிதா ஜமாலுதீன் ஆகியோர் வரிசையாக வந்து சட்டப்பேரவை மேனாள் தலைவர் இரா.ஆவுடையப்பன் அவர்களிடம் இருந்து நூல்களை உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டனர்.
மாவட்டக் கழகத்தின் சார்பில் மேடையிலிருந்த பெருமக்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என சாரை சாரையாக வந்திருந்து கழகத் தலைவர் ஆசிரியர், தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.ஆவுடையப்பன் ஆகியோருக்கு பயனாடையணிவித்து மரியாதை செய்தனர்.
திராவிடர் இயக்கத்தின் சாதனை எது?
நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார். அவர் தமதுரையில், மேடையில் அமர்ந்திருந்த மகளிர் பேரூராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்களாக சிறுபான்மைச் சகோதரிகள், கீழே இருக்கைகளில் அமர்ந்திருந்த ஏராளமான மகளிரைப் பார்த்து, அதையே சுட்டிக்காட்டி, “இதுதான் பெரியாரின் சாதனை! கலைஞரின் சாதனை! மு.க.ஸ்டாலினின் சாதனை! திராவிடர் இயக்கத்தின் சாதனை!’’ என்று எடுத்த எடுப்பிலேயே அடுக்கினார். பலத்த கைதட்டல்கள் எழுந்தன. பின்னர், மனுதர்மம் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு 100 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் நிலை என்ன என்பதையும் லேசாக கோடிட்டுக் காட்டினார். அதற்குப் பிறகு அவர் முன்பு சொன்ன கருத்துக்கு இன்னமும் வலிமை சேர்ந்தது.
கேள்விகள் தான் எல்லா வளர்ச்சிக்கும் காரணம்!
ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எப்போது? என்ற கேள்விகள் தான் இப்போதிருக்கும் எல்லா வளர்ச்சிக்கும் காரணம் என்றார். அதைத்தான் திராவிடர் இயக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கிறது என்றார். திராவிடர் இயக்கம் பெண்களை சமூகத்தில் சரிபாதி என்று நினைத்து இதுவரை பெண்களுக்கு செய்த சாதனைகளை எடுத்துக் காட்ட, ‘‘மகளிர் உரிமைத் தொகை’’ என்ற சொல்லாடலை மட்டும் வைத்துக் கொண்டு பேசினார். அதற்கு எதிராக இருக்கும் ஹிந்து மதம் பெண்களை எப்படிப் பார்த்தது என்பதை, ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் என்ற பழமொழியைச் சொல்லி புரியவைத்தார். ‘‘பொம்பள சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சு’’ என்ற மற்றொரு பழமொழியை சுட்டிக்காட்டி, திராவிடர் இயக்கம்தான் பெண்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த இயக்கம். அதுவும் எப்படித் தெரியுமா? என்று கேட்டு, கத்தியின்றி ரத்தமின்றி அறிவாயுதத்தின் மூலம் செய்த இதுபோன்ற பிரச்சாரத்தால்தான் என்று கூறி திராவிடர் இயக்கம் சமூகத்தில் செய்துள்ள முக்கியமான மாற்றங்கள் இப்படித்தான் நடந்துள்ளன என்பதை ஆழமாகப் புரியவைத்தார்.
ஆனாலும், இன்னமும் மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நினைவூட்டி, காலாவதியான மருந்துகளை நிராகரிக்கின்ற நீங்கள் காலாவதியான கருத்துகளை ஏன் நிராகரிக்க கூடாது என்று அக்கறையுடன் பொருள் பொதிந்த ஒரு கேள்வியை எழுப்பினார். இப்படி கேள்வி எழுப்பியதால் தான் இன்று உன்னால் முடியும்! என்னால் முடியும்! பெண்ணால் முடியும்! என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் என்று சொல்லி, திராவிடர் இயக்கத்தை மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை புரிய வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக கழக நெல்லை நகரத் தலைவர் மா.கருணாநிதி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
முன்னதாக ஈட்டி கணேசன் ‘‘மந்திரமா? தந்திரமா?’’ நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினார். அவருக்கு சட்டப் பேரவை மேனாள் தலைவர் இரா.ஆவுடையப்பன் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.
பங்கேற்று சிறப்பித்தோர்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.சவுந்தரபாண்டியன், தஞ்சை பகுதிச் செயலாளர் செ.மாரி கணேசு, நெல்லை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அயன் சு.பிரபாகரன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் இரா. பானுமதி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் இரா. பானுமதி, ப.க. வள்ளியூர் நகர துணைச் செயலாளர் இ.மோகனசுந்தர், ப.க. மரு.க.வேலசாமி, மாநகரப் செயலாளர் ம.வெயிலுமுத்து, தஞ்சை பகுதித் தலைவர் இரா. கருணாநிதி, ப.க. மாவட்டச் செயலாளர் சு.திருமாவளவன், மாவட்ட இளைஞரணித் தலைவர்
ஆ. வீரபாண்டிய கட்ட பொம்மன், வள்ளியூர் நகரச் செயலாளர் பெ.நம்பிராசன், மாநகரப் துணைச் செயலாளர் எம்.ஜி.ஜார்ஜ், ப.க. வள்ளியூர் நகரத் தலைவர் ந. குணசீலன், நாளை பகுதித் தலைவர் செ.தர்மராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.சூர்யா, தென்கலம் நகரத் தலைவர் வா.அய்யப்பன், ப.க. வள்ளியூர் நகரத் துணைத் தலைவர் சு.வெள்ளைப்பாண்டி, ப.க.மாநகரத் துணைத் தலைவர் சந்திப்பு நடராசன், மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் அயன் சண்முகசுந்தரம், நெல்லை பகுதித் தலைவர் ஜி.மார்ட்டின், மாநகரத் தலைவர் பி.இரத்தினசாமி, நெல்லை பகுதிச் செயலாளர் ந.மகேசு, பாளை பகுதிச் செயலாளர் ப.பாலகிருஷ்ணன், ப.க. மாவட்ட துணைச் செயலாளர் க.முருகேசன், ப.க. வள்ளியூர் நகரச் செயலாளர் ஏ.எம்.சத்தியன், ப.க. மாநகரத் தலைவர் முரசொலி இரா. முருகன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட ப.க.செயலாளர் சொ.பொன்ராஜ், பெரியார் மய்யக்காப்பாளர் பொ.போஸ், மாவட்ட வழக்குரைஞரணி பா.இராசேந்திரன், கி.கோபால்சாமி, மாவட்ட ப.க. துணைத்தலைவர் த.செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கோ.முருகன், வள்ளியூர் வெள்ளத்துரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.