வல்லம், செப். 1- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் மாணவர் சங்க ஆண்டு கூட்டம் 24.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் இக்கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.
விழாவில் தலைமையேற்று உரையாற்றிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, ஒவ்வொரு வருடமும் மேனாள் மாணவர்கள் ஆண்டுக் கூட்டம் நமது கல்லூரியில் நடைபெற்று வருகின்றது என்று கூறிய அவர் உலகம் முழுவதும் பரவியிருக்கும் நமது மேனாள் மாணவர்கள் பாடத்திட்டத்தை நிர்ணயிக்கும் கமிட்டி உறுப்பினர்களாகவும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அளிக்கும் நிலையிலும் இருந்து நமது கல்லூரிக்கு நல்லதொரு பலமான துணையாக திகழ்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். நமது கல்லூரியின் நான்கு பாடப்பிரிவுகளுக்கு பன்னாட்டு தர நிர்ணய சான்றிதழ் (NBA Certification) பெறுவதற்கு மேனாள் மாணவர்களின் பங்கு அதிகம் என்று கூறிய அவர் நமது பாலிடெக்னிக்கில் மாணவர்கள் அனைவரும் தொழில்நுட்பத் திறன் மிக்கவர்களாகவும், நல்ல மனப்பாங்கு உடையவர்களாகவும் உருவாக்கப்படுகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் துணைமுதல்வர் தி.விஜயலெட்சுமி தனது சிறப்புரையில் மேனாள் மாணவர்கள் அனைவரும் தாம் படித்த கல்லூரியை பற்றி பெருமைப்படுவதோடு மட்டுமல்லாமல், கல்லூரியை பெருமைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், 1993-1999 ஆம் வருட கமர்சியல் பிராக்டீஸ் (Commercial Practice) பிரிவு மாணவிகள் சார்பாக கல்லூரியின் மேனாள் மாணவர் சங்க (Alumni Association) நிதியாக ரூ.10,000- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) அளிக்கப்பட்டது. மேலும் கட்டட எழிற்கலை துறை (Architectural Assistantship) மாணவிகள் சார்பில் ரூ.2,000- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) மேனாள் மாணவர் சங்க நிதியாக அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மேனாள் மாணவிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் உரையில் தந்தை பெரியாரின் புரட்சிகரமான கருத்துகள் மாணவர்களின் வாழ்க்கையில் எதிர்வரும் எல்லா சவால்களையும் சமாளித்து முன்னேற்றப்பாதையில் வெற்றிநடை போட வைத்தது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள்.
இக்கல்லூரியில் படித்து சமுகத்தில் நல்ல நிலையில் உள்ள மேனாள் மாணவர்கள் அனைவரும் தங்களின் தற்போதைய நல்;ல நிலைக்கு காரணம் இக்கல்லூரியில் பெற்ற தைரியம் மற்றும் தன்னம்பிக்கையும் தான் காரணம் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்கள்.
இக்கல்லூரியின் கட்டட எழிற்கலை துறைத்தலைவர் க.ப.வெள்ளியங்கிரி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் கோ.இராஜாராமன், மாணவர்கள் ஆலோசகர் செ.மைக்கேல்ராஜ், ஆங்கில பேராசிரியர் ஆர்.அய்யநாதன், மற்றும் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறைத் தலைவர் க.ரோஜா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் மேனாள் மாணவர்கள் சங்க செயலாளர் க.கோபி வரவேற்புரை ஆற்றினார். மேலும் மேனாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் க.இராஜம் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.