திராவிடர் கழகத்தின் சமூகப்பணி எப்படி இருக்கிறது?

viduthalai
4 Min Read

செய்தியாளர்கள் கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் பதில்

காரைக்குடி, செப். 1 திராவிடர் கழகத்தின் சமூக நீதிப்பணி எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் பதில் அளித்தார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நேற்று (31.8.2024) காரைக்குடிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:

தமிழ்ச் சமுதாயத்திற்குத் தன்னிகரற்ற
தொண்டாற்றிய தொண்டறச் செம்மல்!

தமிழ்ச் சமுதாயத்திற்குத் தன்னிகரற்ற தொண்டாற்றிய தொண்டறச் செம்மல் – சமயத் துறையில் ஒரு புரட்சித் துறவியாகவே வாழ்ந்து, வழிகாட்டி, வரலாற்றில் பொன்னேடு களை இணைத்தது மட்டுமல்லாமல், தாமே ஒரு புதிய வரலாறாக ஆகி, திராவிடர் இயக்கத்திற்கும், பொதுமையான தத்துவங்களுக்கும், பல்வேறு முற்போக்கு அமைப்புகளுக்கும் எல்லாவற்றிற்குமே ஒரு பெரிய பேராதரவாளராகவும், பெரும் பேச்சாளராகவும், தத்துவ விளக்கப் பேராசிரியராகவும் திகழ்ந்த நம்முடைய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சமூகத்திற்கு, மகா சந்நிதானம் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட, அவருடைய நூற்றாண்டு விழாவை இன்றைக்குக் காரைக்குடியில் திராவிடர் கழகம் நடத்துவதில் – அது தன் கடமையையாற்றுகிறது என்கிற பெருமை யைப் பெறுகிறது.

தலைவரையொட்டிய சிறப்பான தொண்டறச்
செம்மல் தவத்திரு பொன்னம்பல அடிகளார்

அப்படிப்பட்ட இந்த நேரத்தில், அடிகளார் அவர்களுடைய நினைவு மண்டபத்தில், அடிகளார் அவர்களைப் பெருமைப்படுத்தவும், அடிகளாருடைய நினைவேந்தலை நினைவகத்திலே சிறப்பாக செய்யவேண்டும், இன்றைக்கு அடிகளார் அவர்களுடைய அந்தத் தொடர் பணியை, மிகச் சிறப்பாக, ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை” என்பதை ப்போல, தலைவரையொட்டிய சிறப்பான தொண்டறச் செம்மலாகவே, அவர்கள் தேர்ந்தெடுத்து,

‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” (குறள் 517)
என்ற குறளுக்கேற்ப, அடிகளாருடைய சரியான தேர்வாக இருக்கக்கூடிய நம்முடைய தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் அந்தப் பணியை மிகச் சிறப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து பெருமையடைகிறார்கள்.

‘‘அடிகளாரின் அறிவுப் பெட்டகம்”
நூல் வெளியீடு

எனவே, அவர்களை சந்திக்கவும், அடிகளார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினுடைய சிறப்பைச் சொல்லவும், இன்று மாலை நடைபெறுகின்ற விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு பெரிய கருப்பன் அவர்கள் தொடக்கவுரையாற்றுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இலக்கிய அணியின் புரவலர் தென்னவன் அவர்கள், அடிகளார் அவர்களுடைய கருத்துரைகளை, ‘‘அடிகளாரின் அறிவுப் பெட்டகம்” என்ற தலைப்பில், அவருடைய உரைகளையும், அவருடைய எழுத்துகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கக் கூடிய நூலை வெளியிட்டு உரையாற்றவிருக்கிறார். அதேபோல, அடிகளார் அவர்களிடத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிடர் இயக்கத்திற்கும் எப்படிப்பட்ட ஒரு தொடர்பு இருந்தது- இரண்டு பேருக்கும் முரண்பாடு இல்லை. மாறுபாடுகள் வேண்டுமானால் இருந்திருக்கலாம், சமயத் துறை கருத்துகளில்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெறக்கூடிய வகையில், மாலையில் நிகழ்ச்சி இருக்கிறது.

நூற்றாண்டு விழா தொடக்கத்தை
இங்கே இருந்து தொடங்குகிறோம்!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்ச்சியையும் – சிறப்பாக அவருடைய நூற்றாண்டு விழா தொடக்கத்தையும் இன்றைக்கு இங்கிருந்து தொடங்குவதுதான் முறையாக இருக்கும் என்பதற்காக, தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களுடைய அன்பான, கனிவான, கருணை மிக்க அருளாலயத்தையும் கண்டு, நாங்கள் அவருக்குச் சிறப்புச் செய்திருக்கின்றோம்.

எங்களுடைய தொடர்பு குன்றாது,
குறையாது, வளரும்!

அதன்மூலம் எங்களுடைய தொடர்பு, தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்தது, இன்னும் மேலும் வலிமை பெறுகிறதே தவிர, அது குன்றாது, குறையாது, வளரும். காரணம், குன்றக்குடி அடிகளார் மட்டுமல்ல, இந்தப் பாச உணர்வும், நேச உணர்வும், கொள்கை உணர்வும் குன்றாது இருக்கும்.

எனவே, குன்றாத குடிகளாக இவை வளரும் என்பது மிக முக்கியம். அதற்காகத்தான் இங்கே இன்றைக்கு வந்திருக் கின்றோம்.

செய்தியாளர்: உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக ஆகவிருக்கிறார் என்கிற செய்தி அதிகமாக வருகிறதே?

எதை, எப்போது, எப்படி, யாருக்கு செய்வது என்பதை உணர்ந்த, முதிர்ந்த அனுபவம் உள்ளவர்!

தமிழர் தலைவர்: இந்த நேரத்தில், அரசியலை அருள்கூர்ந்து தவிருங்கள். குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா சம்பந்தமாக கேள்விகள் இருந்தால் கேளுங்கள். அரசியலில் எது வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம்; அதற்கு உரிமையாளர், உரிமையாகப் பதில் சொல்லவேண்டியவர், அமெரிக்காவில், தமிழ்நாட்டிற்காகத் தொழில் முதலீடுகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றார். அதிலே அவர் வெற்றி பெற்று வந்தால், அந்த வெற்றியின் எதிரொலியாக எதை எதையெல்லாம் செய்யவேண்டுமோ, எதை, எப்போது, எப்படி, யாருக்கு செய்வது என்பதை உணர்ந்த, முதிர்ந்த அனுபவம் உள்ளவர் நம்முடைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் ஆவார். அதை அவர் தெளிவாகச் செய்வார். உங்களுக்கும் விடை கிடைக்கும்.

குறைவாக இல்லை; நிறைவாக இருக்கின்றது என்பதற்கு அடையாளம்!

கேள்வி: முன் எப்பொழுதும் இல்லாத வகையில், திராவிடர் கழகத்தில் சமூகநீதிப் போராட்டம், முன்னெடுப்பெல்லாம் குறைவாக இருக்கிறது என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர் பதில்: குறைவாக இல்லை. நிறைவாக இருக்கின்றது என்பதற்கு அடையாளம், இதுவரை ஒப்புக்கொள்ளாத ஒன்றிய அரசு — சமூகநீதிக்கு அடையாளமாக இருக்கக்கூடிய அந்த அடித்தளத்தை – ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு அவர்களே முன்வந்திருக்கிறார்கள் என்பதுதான்.
மாலையில் நடைபெறும் நிகழ்விற்கு வாருங்கள், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *