தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினைத் திராவிடர் கழகம் காரைக்குடியில் கொண்டாடி மகிழ்ந்தது. காவிக் கொடியும் கழகக் கொடியும் இணைந்தே பறந்தது கண்டு பொதுமக்கள் விழிகள் வியப்பால் விரிந்தன. ‘சமயத் தலைவரின் நூற்றாண்டு விழாவினைத் திராவிடர் கழகம் கொண்டாடுகிறதே!’ என்று பலரின் புருவங்கள் உயர்ந்தன.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் காவி உடை தரித்தவர்தான்; உடலெங்கும் திருநீறு பூசியவர்தான் ; இறை நம்பிக்கை உடையவர்தான் ; ஆனாலும் அவர் ஆற்றிய சமுதாயப் பணிகளை , இனநலத் தொண்டினைத் திராவிடர் கழகம் நன்றியோடு நினைவுகூர்ந்து இவ்விழாவினை நடத்தியது.
தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டார் . அவருடன் இணைந்து பணியாற்றிய ஆன்மீகப் பெரியவர்களில் முக்கியமானவர் குன்றக்குடி அடிகளார் .
ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
சமஸ்கிருத வேத மந்திரங்களுக்குப் பதில் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
ஆலயங்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்று சட்ட மேலவையிலே பேசியிருக்கிறார் .
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு அதனையும் செலுத்தி இருக்கிறார் .
மண்டைக்காட்டில் நடைபெற்ற மதக் கலவரத்தில் அமைதியை நிலைநாட்டியிருக்கிறார்.
இப்போது 90 ஆம் ஆண்டில் நடை போடும் பகுத்தறிவு ஏடாம் ‘விடுதலை’யின் பணிமனையைத் திறந்து வைத்திருக்கிறார்.
‘‘இன்றைய ஆத்திகம் என்பது சிறுபான்மையினர் நலம்; இன்றைய நாத்திகம் என்பது பெரும்பான்மையினர் நலம்” என்று கூறிய கருத்தாளர் – அருளாளர் அடிகளாருக்குத் திராவிடர் கழகம் நூற்றாண்டு விழா நடத்துவது முற்றிலும் பொருத்தமானதே.
அடிகளார் நினைவிடத்தில் மலர்வளையம்!
அடிகளாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, உருவச் சிலைக்கு மாலை அணிவிக்க குன்றக்குடிக்குச் சென்றார் ஆசிரியர் அவர்கள். காரைக்குடியில் இருந்து குன்றக்குடி செல்லும் கோவிலூர் – பாதரக்குடி புறவழிச் சாலையில் காலை 11.30 மணிக்குக் கழகத் தோழர்கள் காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி. திராவிடமணி தலைமையில், மாவட்டத் தலைவர் கு. வைகறை முன்னிலையில் குழுமியிருந்து பொன்னாடை அணிவித்தும், வாழ்த்தொலி எழுப்பியும் உற்சாக வரவேற்பு நல்கினர்.
நூற்றாண்டு விழா நாயகர் அடிகளாரின் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்த குன்றக்குடி மடத்திற்கு வந்து சேர்ந்தார் தமிழர் தலைவர்.
‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்று செயல்படும் மடம் குன்றக்குடி ஆதீனம்.
பல கிராமங்களை தத்தெடுத்து முன்னேற்றுவதில் அக்கறை செலுத்தும் ஆதீனம்.
பிரதமரின் பாராட்டையும், முதலமைச்சரின் பாராட்டையும் பெற்ற நிறுவனம்.
மடத்தின் கணக்கு வழக்குகளைத் துல்லியமாய் ஆராய்ந்து, ‘அனைத்தும் சரியாக இருக்கிறது’ என்று உலகிற்கு அறிவித்தது நெருக்கடி காலம் .
இதற்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் மடத்துக்கு வந்திருக்கிறார்கள்.
அண்ணா அவர்கள் வருகை புரிந்து இருக்கிறார்கள்.
பூதான இயக்க நிறுவனர் வினோபா பாவே வந்தி ருக்கிறார்.
திராவிடர் கழகத் தலைவர் , தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குன்றக்குடி மடத்திற்கு இப்போது வருவது மூன்றாவது முறை. அடிகளாரைச் சந்திக்க முதல் முறை சென்ற அவர் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடிகளார் (தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்) மறைகிறார். அடிகளாருக்கும் ஆசிரியருக்கும் 30 ஆண்டுகால நட்பு. துக்கம் விசாரிப்பதற்காக குன்றக்குடி மடத்திற்கு இரண்டாவது முறை வருகை புரிந்தார். அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு இப்போது மூன்றாம் முறை வருகை புரிந்து இரண்டு மணி நேரம் செலவிட்டார்.
மடத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் குழுமியிருந்து தலைவரை வரவேற்றார்கள் .அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்.
பொன்னம்பல அடிகளார் அமைதியின் உருவமாக நின்றிருந்தார். பெரியவரைப் போலவே இவரும் சமுதாயப் புரட்சி நிகழ்த்தியவர்.
கும்பகோணத்தில் 2004 ஆம் ஆண்டு சரஸ்வதி பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது விரைந்தன அடி களாரின் கால்கள்.
இறந்தவர்களை – உயிரற்ற உடல்களைத் துறவிகள் பார்க்க கூடாது என்பது மரபு. மரபை மீறி இறந்த பச்சிளம் குழந்தைகளின் உடல்களைக் கண்டு கண்ணீர் வடித்து, துயர் துடைத்தவர் பொன்னம்பல அடிகளார் .
சுனாமிப் பேரலை பேரழிவு ஏற்படுத்தியபோது நாகைப் பகுதியில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்தன பொன்னம்பல அடிகளாரின் கரங்கள்.
தென்மாவட்டங்களில் 1997 ஆம் ஆண்டு ஜாதித் தீ பற்றி எரிந்தபோது அமைதியை நிலைநாட்ட அங்கு பம்பரமாய்ச் சுழன்றார்.
கோவை மாநகரத்தில் மதக் கலவரம் ஏற்பட்டபோது மதநல்லிணக்கம் தழைக்க பாடுபட்டார்.
தந்தை பெரியாருடன் அடிகளார்
திராவிடர் கழகம் செய்த பணிகளை மற்றோர் அணியிலி ருந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிகழ்த்தினார். இரண்டு இயக்கங்களையும் இணைத்தது மனிதநேயம்.
தந்தை பெரியாருடன் குன்றக்குடி அடிகளார் (தெய்வ சிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்) நல்ல நட்பைக் கொண்டிருந்தார் . பெரியார் அவர்கள், குன்றக்குடி அடிகளாரைச் ‘சந்நிதானம்’, ‘சந்நிதானம்’ என்றே அழைப்பார்கள் . தந்தை பெரியாருடன் இணைந்து ஜாதி ஒழிப்பு மாநாடு, வாக்காளர் மாநாடு, ‘விடுதலை’ பணிமனைத்திறப்பு விழா, பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், மனவிழா நிகழ்ச்சிகள் முதலிய ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் . பெரியாருக்குப் பின்னால் அன்னை மணியம்மையாருடனும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடனும் நல்லுறவைப் பேணினார்.
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னால்- அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பின்னால் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்ற போது, ‘‘தந்தை பெரியார் இருந்த இடத்தை வெறிச்சோடிப் போகாமல் காப்பாற்றியவர்’’ என்று குன்றக்குடி அடிகளார் எழுதிய வாசகம் மிக மிக ஆழமானது; நுட்பமானது; ஆராய்ச்சியின்பால் விளைந்தது; அனுபவத்தினால் சொன்னது. ‘வெறிச்சோடி’ என்ற ஒரு சொல் எத்தனை எத்தனை வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கின்றபோது வியப்பு மேலிடும்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் போலவே பொன்னம்பல அடிகளார் அவர்களும் ஆசிரியர் கி .வீரமணி அவர்களிடம் பேரன்பு காட்டிப் பழகி வருகிறார். சமுதாயத் தலைவர் வீரமணி அவர்களும் சமயத் தலைவர் குன்றக்குடி அடிகளார் அவர்களும் இணைந்து பல கூட்டங்களில் உரை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
தமிழர் தலைவருக்கு
சிவப்புக் கம்பள வரவேற்பு!
மடத்திற்கு வந்தார் ஆசிரியர். சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அய்யா அவர்களை அடிகளார் மகிழ்ச்சி பொங்க இரு கரம் கூப்பி வர வேற்றார். அடிகளார் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார். ஆசிரியர் அவர்களும் அடிகளாருக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினையொட்டி வெளியிடுகின்ற அறிவுப் பெட்டகம் நூலினைக் கழகத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் வழங்கி, புத்தகத்தின் உள்ளே அடிகளார் எழுதிய கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் இடம் பெற்றிருப்பதை எடுத்துரைத்தார். அதனைக் கேட்டு வியந்த அடிகளார் ‘நாங்கள் இப்படி எல்லாம் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யவில்லை; சான்றோர்களின் பல அரிய உரைகளை இழந்து விட்டோம்’ என்று ஏக்கத்துடன் தெரிவித்தார்.
வாத்திய இசை முழங்க ஆசிரியர் அவர்களை தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் மாலை எடுத்துக் கொடுக்க அடிகளார் நினைவிடத்தில் பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்தார். அடி களாரின் மணிமண்டபத்தில் ஒளிப்படங்களைப் பார்வை யிட்ட தமிழர் தலைவர், குன்றக்குடி அடிகளாரின் உருவச்சிலைக்கு மாலை சூட்டினார்.
மணிமண்டபத்தில் செய்தியாளர்கள் ஆசிரியரைச் சந்தித்தார்கள். அடிகளாரின் சிந்தனை வளத்தை, செயல் திறனை, தமிழ் ஆற்றலை, விஞ்ஞான ஆர்வத்தைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் தமிழர் தலைவர் . ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்’ என்ற குறளுக்கு ஏற்ப பொன்னம்பல அடிகளார் நியமிக்கப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்தார்கள் . அரசியல் தொடர்புடைய கேள்வி ஒன்றை செய்தியாளர்கள் கேட்க, ‘அதற்கான இடம் இது இல்லை; இது சன்னிதானத்தின் மணிமண்டபம்; நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்; இந்த இடத்தில் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது’ என்று அறிவுரை புகன்றார். கழகத் தலைவர் அவர்களை மிகுந்த அன்போடு அழைத்து வந்த பொன்னம்பல அடிகளார் உணர்ச்சிமயமாய் ஒன்றியிருந்தார் . ஆசிரியரும் அடிகளாரும் 30 நிமிடங்கள் கலந்துரையாடினர். மகா சன்னிதானம் குறித்த பல தகவல்களை – சந்திப்பு களை- உரையாடல்களை- வரலாறுகளை பகிர்ந்து கொண்ட ஆசிரியர் அவர்கள், சமூக முன்னேற்றத்திற்கான விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறி கொண்டனர். அதன் பிறகு மதிய உணவு பரிமாறப்பட்டது.
அடிகளாரும் – ஆசிரியரும் அருகருகே அமர்ந்து உணவருந்திய காட்சி
ஆசிரியரும் அடிகளாரும் அருகருகே அமர்ந்து உணவு உண்டனர். கழகத் தோழர்களும் மடத்து அன்பர்களும் சேர்ந்து உணவு அருந்தினர். அன்பு கலந்த உணவு; சுவை ததும்பும் உணவு; பாசமுடன் பரிமாறினார்கள்.
கழகத் தலைவர் மடத்தை விட்டுப் புறப்பட்டபோது வழி அனுப்ப வந்த அடிகளார், தலைவரின் வாகனத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தார். மாலை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சந்திப்போம் என கூறி அடிகளாரிடம் விடை பெற்று புறப்பட்டார் தமிழர் தலைவர்.
தலைவரின் வருகையையொட்டி காரைக்குடி நகரமெங்கும் கழகக் கொடிகள் பறந்தன. காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தினர் விழா ஏற்பாடுகளை நேர்த்தியுடன் செய்திருந்தனர். தந்தை பெரியாரும் – குன்றக்குடி அடிகளாரும் இணைந்திருக்கும் படங்கள் – பதாகைகள்- டிஜிட்டல் போர்டுகள் நகரை அலங்கரித்தன . குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா 31.08.2024 மாலை 7.00 மணிக்கு காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மண்ட பம். மழை பொழிந்து நகரையே குளிரூட்டியிருந்தது; அரங்கம் நிறைந்திருந்தது. மூத்த குடிமக்கள் திரளாக வந்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகச் சான்றோர் பெருமக்கள் தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தும், நலம் விசாரித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் ஆசிரியர் அவர்கள் எழுந்து மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
காரைக்குடி மாவட்டத் திராவிடர் கழக தலைவர் ம.கு.வைகறை தம் வரவேற்புரையில், ‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் நடத்துவது குறித்து மக்களும் அதிகாரிகளும் வியப்பு தெரிவித்ததை கூறி, விழா நடத்துவதற்கான காரணங்களை யும் பட்டியலிட்டார்.
காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி .திராவிடமணி அவர்கள் தம் தலைமையுரையில், ‘‘அடிகளாருக்கு திராவிடர் கழகம் நூற்றாண்டு விழா நடத்துவது அதிசயமல்ல என்றார். அய்யாவுக்கும் அடிகளாருக்கும் இருந்த நெருக்கத்தை – நிகழ்ச்சிகளை தேதி வாரியாக எடுத்துரைத்தார். பட்டி மன்ற நடுவராக அடிகளார் பேசியதையும், பெரியாரின் சொற்பொழிவை காரில் அமர்ந்து அடிகளார் கேட்டதையும் விளக்கினார்.
கழகத் தலைவர் ஆசிரியர், அடிகளார், அமைச்சர் பெரியகருப்பன், சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் சான்றோர் பெருமக்கள் மேடையில் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டார்கள்.
விழாவில் , தி.மு.க . மாநில இலக்கிய அணி புரவலர் மு. தென்னவன், ‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அறிவுப் பெட்டகம்’’ நூலினை வெளியிட காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி பெற்றுக்
கொண்டார்.
காரைக்குடி மேயர் சே. முத்துதுரை அவர்களும் , துணை மேயர் நா. குணசேகரன் அவர்களும் நூலினைப் பெற்றுக் கொண்டனர் . அவர்களைத் தொடர்ந்து அடிகளாரின் ஆர்வலர்களும், இலக்கிய ஆர்வலர்களும், பொதுமக்களும், தி.மு. கழகத் தோழர்களும் , திராவிடர் கழகத் தோழர்களும் வரிசையாக வந்து தொகையினைக் கொடுத்து தமிழர் தலைவரிடம் புத்தகத்தினைப் பெற்றுக் கொண்டார்கள்.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் . மாங்குடி தம் உரையில், சமய உலகில் இருந்து கொண்டு சமுதாய நலனுக்காகப் பாடுபட்டவர் அடிகளார் என்றார்.
தி.மு.க. மாநில இலக்கிய அணி புரவலர் மு. தென்னவன் தம் உரையில், கருப்புச் சட்டை காவி உடைக்கு விழா நடத்துவதற்கான காரணத்தை எடுத்துரைத்தார். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்தவர் அடிகளார் என்று புகழாரம் சூட்டியதோடு , மடாதிபதிகள் திருமந்திரம் பேசியபோது திருக்குறள் பேசியவர் அடிகளார் என்பதை எடுத்துக் காட்டினார். கலைஞர் சிலையை திறந்து வைத்த வரலாற்றை நினைவூட்டினார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் அவர்களுடைய ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான 30 நிமிட உரையில், இந்த விழாவை வரலாற்று நிகழ்வு என்றார். தந்தை பெரியாருக்கும் அடிகளாருக்கும் ஒரே கொள்கை என்று கூறியதோடு தந்தை பெரியார், குன்றக்குடி மடத்திற்கு வருகை புரிந்த நிகழ்வு அப்போது பேசு பொருளாக இருந்ததைக் குறிப்பிட்டார். தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு மொழிப் பற்று, சமதர்மப் பற்று, மனிதப் பற்று இருந்ததை விளக்கினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வருவதில் தமது பங்களிப்பையும் எடுத்துரைத்தார். சட்ட மேலவையில் அடிகளார் உறுப்பினராக இருந்த நிகழ்வை நினைவு கூர்ந்த அவர் , இந்த விழாவை இரண்டு துருவங்கள் இணைந்த நிகழ்வு என்றார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நிறைவுரை 40 நிமிடங்கள் அமைந்தது.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரைப் புரட்சித் துறவி என்றும்,தொண்டறச் செம்மல் என்றும், புதிய பாதை காட்டியவர் என்றும், புதிய எழுச்சியை உருவாக்கியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இந்த விழாவை நன்றித் திருவிழா என்றார்.
தந்தை பெரியாருக்கும், அடிகளாருக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார்.
ஜாதி ஒழிப்பு மாநாட்டில் அடிகளார்
ஜாதி ஒழிப்பு மாநாடுகளில் அடிகளார் முழங்கியதை வெளிப்படுத்தினார்.
தந்தை பெரியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை எந்த அளவிற்கு மதித்தார் என்பதற்கு தமிழர் தலைவர் அவர்கள் ஒரு நிகழ்வை எடுத்துக் காட்டினார் .
சென்னை பெரியார் திடலில் வாக்காளர் மாநாடு நடத்தத் திட்டமிடுகிறார் பெரியார். குன்றக்குடி அடிகளார் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பை ‘விடுதலை’யில் வெளியிட அவர் எழுதிக் கொடுத்த வாசகம் ,
‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் சன்னிதானத்தை 07.01.1962 ஆம் தேதி நடக்கும் ஓட்டர்கள் மாநாட்டு பிரதம ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ள பிரார்த்தனை செய்யப்பட்டு இருக்கிறது.’’
என்று சொன்னபோது அரங்கம் மகிழ்ச்சியில் திளைத்தது என்று சொல்லலாம். அல்லது வியப்பில் ஆழ்ந்தது என்று சொல்லலாம்.
‘விடுதலை’ பணிமனைத் திறப்பு விழாவில் அடிகளார் நிகழ்த்திய உரையை நினைவு கூர்ந்தார்.
தமிழர்களின் நலன் கருதி நடக்கக்கூடிய ‘விடுதலை’ யினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும்.
‘விடுதலை’யை வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.
‘‘தமிழர்கள் இல்லம் என்பதற்கு அறிவிப்புப் பலகை விடுதலை!’’ – அடிகளார்
தமிழர்கள் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் ‘விடுதலை’ தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும் என்ற அடிகளார் கூறிய வாசகங்களை கூட்டத்தில் தமிழர் தலைவர் உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தார்.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அடிகளாருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தபோது தந்தை பெரியார் கொதித்தெழுந்த வரலாற்றை விளக்கினார்.
அடிகளாருடனான பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
குன்றக்குடி அடிகளாரின் ஏற்புரை
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஏற்புரை வழங்கினார்.
குன்றக்குடி பெரிய சன்னிதானம் பாதையில் நடை போடக் கூடியவர்; அவருடைய எழுத்துக்களையும், பேச்சுகளையும் புத்தகமாகக் கொண்டு வந்தவர்; அவருக்குப் பின்னால் ஆதீனத்தை செம்மையோடு நடத்தி வருபவர்; 20–க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தக்கூடியவர்; வேதியியல் பட்டதாரி; மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் ; சிறந்த தமிழறிஞர்;
‘காற்றில் வந்த கருத்து மழை’
’தமிழ்ப் பண்பாடு’
’உயிர் நாரில் தொடுத்த மாலை’
முதலிய புத்தகங்களை எழுதியவர் .
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்;
ஜோதிராவ் ஃபுலே விருதையும் பெற்றிருக்கிறார்.
நிறுத்தி – நிதானமாகக் கருத்துகளை பொழியக்கூடியவர். இன்றைய அவர் தம் உரை வாய் மொழி இலக்கியம்; கணீரென்ற குரல். சொற்பொழிவில் உற்சாகம் பொங்கியது; உணர்ச்சி நடனம் புரிந்தது. சொற்கள் அருவியென கொட்டி யது; கருத்துகள் பிரவாகமெடுத்தன. மகா சன்னிதானத்தின் பெருமைகளை அடுக்கினார். அரங்கம் கூர்ந்து கவனித்தது .
குன்றக்குடி மகா சன்னிதானம் அவர்களின் சமத்துவ சிந்தனையை விளக்குவதற்காக ஒரு சம்பவத்தைக் கூறினார். சிவகங்கை மகாராஜா விருந்துக்கு வருகிறார் என்று கூறி உணவு ஏற்பாடு செய்யச் சொல்கிறார். உழவர்களை அழைத்து இவர்கள்தான் மகாராஜாக்கள்; தலைவாழை விருந்து படைத்தார் ; பேதம் கூடாது என்பதை செயலில் காட்டிய சம்பவத்தை அடிகளார் கூறியபோது அவை உணர்ச்சி மயமாய் இருந்தது .
குடிசையின் உள்ளே அடுப்பு எரிவதற்காக மகா சன்னிதானம் மேற்கொண்ட முயற்சிகளைக் கூறி, நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி, வேறு எந்த ஆன்மீகத் தலைவரும் பெறாத அறிவியல் பரப்புதல் விருதை மகா சன்னிதானம் பெற்றதைப் பூரிப்புடன் எடுத்துரைத்தார். அறிவியல் நாளை குருபூஜை கொண்டாடுவதுபோலக் கொண்டாடினார் ; இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரிவித்ததோடு அறிவியல் கண்காட்சிகளைப் பள்ளிகள் தோறும் நடத்த வேண்டும் என்ற மகா சன்னிதானத்தின் கனவை நிறைவேற்றிட – பள்ளிக் கட்டடத் திறப்பு விழா நாளின் போது பூர்வாசிரமத் தாயார் மறைந்த நிலையில் சிதைக்கு எரியூட்டப்பட்ட நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைக் குறிப்பிட்டபோது அவையோர் கண்கள் பனித்தன. சீன விடுதலைப் போரின் போது திருவொற்றியூர் கூட்டத்தில் உருத்திராட்சங்களை ஏலம் விட்டு ரூபாய் நான்காயிரத்தை யுத்த நிதியாக வழங்கியதை எடுத்துரைத்தார்.
மகா சன்னிதானம் அவர்களுக்கும் தந்தை பெரியாருக்கும் உள்ள நட்பை விளக்கினார். முதலில் இருந்த கருத்து மோதல் – தத்துவ மோதலைச் சுட்டிக்காட்டி, அதன்பின் இழிவை நீக்க – சமூக நலத்திற்காக தமிழ் ஆர்வலர்கள், அய்யாவையும் அடிகளாரையும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து, அந்தச் சந்திப்பு ஈரோட்டில் சென்னியப்ப முதலியார் வீட்டில் நடைபெற்ற நிகழ்வையும் எடுத்துரைத்தார்.
அண்ணாவின் தொடர்பைத் தெரிவித்தார். கலைஞருக்கும் மகா சன்னிதானத்திற்கும் இடையில் இருந்த பாசத்தை வெளிப்படுத்திய பாங்கு மிகுந்த உருக்கமாக இருந்தது.
ஒப்பற்ற பெருங்கடல் சாய்ந்ததே!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்க ளுக்கும் தமக்கும் உள்ள தொடர்பை நெகிழ்ச்சியோடு எடுத்துரைத்தார். மகா சன்னிதானம் மறைந்த போது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்’ விடுதலை’ யில் எழுதிய, ‘ஒப்பற்ற தமிழ் பெருங்கடல் சாய்ந்தது ‘ என்ற அறிக்கையை எடுத்துக்காட்டி நெகிழ்ந்து பாராட்டினார். தான் பொறுப்புக்கு வந்து கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தஞ்சையில் நடைபெற்ற வேன் வழங்கும் விழா நிகழ்ச்சி தான் என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்தார். சன்னிதானத்திற்குக் கழகம் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு நன்றி தெரிவித்தார். கூட்டம் முடிந்து கலைந்து செல்லும் மக்கள் மனதில் அடிகளார் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் என்பது விழாவின் வெற்றி.
விழாவினை கழக சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா ஒருங்கிணைத்தார்!