புதுடில்லி, ஆக.31 வேலை வாய்ப்பு மோசடியால் ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்
இது தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘ரஷ்யா-உக்ரைன் போரில் நடந்த ட்ரோன் தாக்குதலில், திருச்சூரைச் சோ்ந்த சந்தீப் சந்திரன் உயிரிழந்தார். அவரது உடல் ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனா். எனவே, இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் சந்தீப்பின் உடலை ஒப்படைக்க ஒன்றிய அரசு விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
போலி வேலை வாய்ப்பு மோசடிகளால் சட்டவிரோதமாக ரஷ்யாவுக்குச் சென்ற கேரளாவைச் சோ்ந்த சந்தோஷ் , சண்முகன், சிபி, சூசம்மா, பாபு மற்றும் ரெனின் தாமஸ் ஆகியோர் லுஹான்ஸ்கில் உள்ள ராணுவ முகாமில் சிக்கியுள்ளனா்.
அவா்கள் ரஷ்ய-உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு, ஆபத்தான சூழ்நிலைகளை அங்கு எதிர்கொண்டு வருகின்றனா்.
மேலும், இதேபோல் அங்கீகரிக்கப்படாத ஆள்சோ்ப்பு முகவா்கள் மற்றும் தனிநபா்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியா்களின் எண்ணிக்கை குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்த வேண்டும். ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் அவா்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
சென்னையில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போர் அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
சென்னை, ஆக.31- சென்னை மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போருக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது வருமாறு:–
தமிழ்நாடு அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருது வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட் டுள்ளதால், சென்னை மாவட்டத்தில் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தனிநபருக்கு மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது வீட்டில் உள்ள நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன, எந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் விவரம் என்பன உள்ளிட்ட விவரங்களுடன், பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கும் மாவட்ட நூலக அலுவலக முகவரிக்கும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நூலக அலுவலரால் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பாதித்தோருக்கு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி
சென்னை, ஆக.31 வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், மாநில பொருளாளர் ஏ.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.5 லட்சத்திற்கு அதிகமான நிவாரணத் தொகையை நிலச்சரிவால் கலந்து கொண்ட குடும்பங்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் சி.வி.இம்ரான் மற்றும் மாநில செயலாளர் ஏ.சித்திக் மற்றும் கோவை வடக்கு, நீலகிரி மாவட்ட மற்றும் கேரள மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், மத, இன, பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.