* உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுத்தவர் அய்யா அமிர்தலிங்கனார்
* அனைவரையும் இணைக்கும் மய்யப்புள்ளியாகவும் திகழ்ந்தவர்!
யாழ்ப்பாணம், ஆக.31 மறைந்த அமிர்தலிங்கனார் உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்த வர். அனைவரையும் இணைக்கும் மய்யப்புள்ளியாக இருந்த மய்யப்புள்ளி! அவரின் நூற்றாண்டின்போது, அவர் விதைத்தது முளைத்து கனிகொடுக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 24.8.2024 அன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் மேனாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய நம்முடைய உரிமைசார் போராளிகள் மற்றும் இன உணர்வாளர்கள், மொழி உணர்வாளர்கள் இவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, இன்றும் என்றும் வாழக்கூடியவராக, மறைந்தார் என்று சொல்ல முடியாத வகையில் நம் நெஞ்சங்களில் நிறைந்தார் என்று பெருமையோடு சொல்லக்கூடிய அற்புதமான தலைவர், ஒப்பற்ற தலைவர் அய்யா அமிர்தலிங்கனார் அவர்களுடைய 97 ஆவது பிறந்த நாள் என்ற முறையில், அவருடைய பெயரால் அமைந்த அறக்கட்டளையின் சார்பாக நடைபெறக்கூடிய இந்த விழாவிற்குச் சிறப்பான பொருத்தமான, ஏற்கத்தகுந்த உணர்வாளர்களாக அய்யா அமிர்தலிங்கனார் அவர்கள் எந்த உணர்வை விதைத்திருக்கிறார், நேரிடையாக இல்லாவிட்டாலும் எப்படிப்பட்டவர்களையெல்லாம் உருவாக்கியிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இந்த அருமையான கூட்டத்திற்குத் தலைமை ஏற்றுச் சிறப்பாக ஓர் அரசியல் ஆய்வுரையை செய்திருக்கின்ற நம்முடைய மேனாள் நீதியரசர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய மேன்மைக்குரிய அய்யா இ.த.விக்னராஜா அவர்களே,
இந்நிகழ்ச்சியில் நம்முடைய உணர்வுகளையெல்லாம் அப்படியே கொட்டிக் கொடுத்து, சிறப்பாக உரையாற்றிய தென்னிந்திய திருச்சபையினுடைய ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பெருமைக்குரிய அய்யா அருட்தந்தை வி.பத்மதயாளன் அவர்களே,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
சந்திப்பு!
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு செய்கின்ற வகையில், இதில் கலந்துகொண்டு எங்களுக்கெல்லாம் புதிய உற்சாகத்தோடு, நீண்ட நாள் இடை வெளிக்குப் பிறகு, பிரிந்திருக்கின்ற குடும்பத்திலிருந்து இணைந்து இன்றைக்கு நம்முடைய சகோதரர்களைச் சந்திக்கின்றோம் – அனைவரையும் பார்த்து மகிழ்ந்து எங்களின் உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்கிறோம்.
பெருமைக்குரிய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் அருமைச் சகோதரர்கள் மாவை சேனாதிராஜா அவர்களே, சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே, சிவாஜி லிங்கம் அவர்களே, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அருமைக்குரிய சகோதரர் தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்களே, மேனாள் பேராயர் ஜெபநேசன் அவர்களே, மாகாண சபையினுடைய உறுப்பினர் அய்யா ஜெகஜீவன் அவர்களே, சட்டத்தரணி யும் நீண்ட காலமாக எங்களோடு எப்பொழுதும் பழகிவரும், உரிமைக்குக் குரல் கொடுக்கக்கூடிய அருமை அய்யா கரிகாலன் அவர்களே, தேர்தல் ஆணைய மேனாள் உறுப்பினர் ஜீவன்கூல் அவர்களே, தந்தை செல்வா அவர்களுடைய பெயரன் தோழர் இளங்கோவன் அவர்களே மற்றும் அமிர்தலிங்கம் அய்யா அவர்களின் பெயரால் அமைந்திருக்கின்ற நினைவு அறக்கட்டளை உறுப்பினர்கள் திருவாளர்கள் க.கவுரிகாந்தன் அவர்களே, தங்க முகுந்தன் அவர்களே, அமிர்தலிங்கம் அவர்களின் உதவியாளரும், கருத்தாளரு மான ஆர்.பேரின்பநாயகம் அவர்களே,
மற்றும் சிறப்பாக குழுமியுள்ள அறிவார்ந்த ஆன்றோர்களே, பெரியோர்களே, நண்பர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய நிகழ்விலே முதற்கண் என்னுடைய மனங்கனிந்த நன்றியை, என்னை அழைத்தமைக்காக இந்த அறக்கட்டளையினருக்கு உரித்தாக்கிக் கொள்கின் றேன்.
இது ஓர் அரசியல் கட்சியினுடைய கூட்டமல்ல. மாறாக, இது ஓர் அறக்கட்டளையினுடைய சார்பில், அந்த அறக்கட்டளைக்குரிய நாயகராக யார் இருக்கிறாரோ, அவருடைய தொண்டறம் எப்படி பல வகையில் எல்லை தாண்டிய ஒன்று – என்றைக்கும் மறக்க முடியாத – என்றைக்கும் சிறப்பாகப் பின்பற்றவேண்டிய ஓர் அற்புதமானது என்பதற்காகத்தான் அவருடைய 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று சொல்லக்கூடிய இந்த வாய்ப்பை நாம் தெளிவாக வைத்திருக்கின்றோம்.
அய்யா அமிர்தலிங்கனாரின் நூற்றாண்டில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்!
அய்யா அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள். இன்னும் மூன்றாண்டுகள் கடந்தால், நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப் போகிறோம். நிச்சயமாக அந்த நூற்றாண்டில் நல்ல மாறுதல்களை – அவர் எதை விதைத்தாரோ, அந்த விதை முளை கிளம்பி மிகப்பெரிய அளவிற்கு செழிப்போடு வரக்கூடும். கனி கொடுக்கும்; நல்ல உணர்வுகள் – அந்த உணர்வுகளுக்கான பணியை – உழவுப் பணியைத்தான் இந்த நிகழ்வு கள் செய்திருக்கின்றன என்பதை நம்மு டைய இரண்டு பெரும் அறிஞர் பெருமக்கள் இங்கே பேசினார்கள்.
தலைவர் அவர்கள், உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். பொதுவாக நான் அறிந்த வரையில், நீதிபதிகளில் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய நீதிபதியை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். அதனால், நியாயம் சாகாது; நீதி ஒருபோதும் சாகாது; நீதி இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. சமுதாயத்திற்காக அவர்கள் பேசினார்கள். தனி மனிதர்களுக்காக அல்ல. இனத்திற்காகப் பேசினார்கள்.
அதைவிட இன்னொரு வியப்பு என்னவென்றால், இங்கே அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஆயர் அவர்களோடு நான் இருக்கிறேன். கருப்புச் சட்டையும் இருக்கிறது – வெள்ளை அங்கியும் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எதில் சேரவேண்டுமோ அதில் சேரவேண்டும். எதைத் தடுக்கவேண்டுமோ, அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்கு அடையாளம்தான் அவர்கள்.
தலைவர் அவர்களும், நம்முடைய அருட்தந்தை அவர்களும் பேசிய கருத்துகளை முதற்கண் நான் வழிமொழிகிறேன் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.
ஏனென்றால், அவ்வளவு ஆழமான கருத்துகள் – தேவையான கருத்துகள் அவை.
இன்றைய தலைமுறை மட்டுமல்ல – இனி வரக்கூடிய தலைமுறையினரையும் சேர்த்து – சிந்திக்க வைக்கவேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பைத் தந்திருக்கின்றார்கள்.
வாய்ப்புத் தந்த அறக்கட்டளையினருக்கும், வருகை தந்துள்ள அருமைச் சான்றோர் பெருமக்களுக்கும் நான் என்னுடைய மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
‘‘உங்களில் நானும் ஒருவன்!”
45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மண்ணிற்கு நான் வந்திருக்கின்றேன். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவின்போது 1979 ஆம் ஆண்டு, நவசோதி என்ற ஒரு நண்பர், கலைஞர் கருணாநிதி மன்றம் என்ற ஓர் அமைப்பை இங்கே நடத்திக் கொண்டிருந்தார். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினைத் தமிழ்நாட்டில் கொண்டாடினோம். அதற்கடுத்தபடியாக இங்கே கொண்டாடுவதற்கு அழைத்தபோதுதான், இங்கே வந்து உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பு. இப்பொழுது மீண்டும் இந்த மண்ணிற்கு என்னை அழைத்தமைக்கு இங்கே படமாக மட்டு மல்ல – நமக்கெல்லாம் பாடமாகத் திகழ்ந்து கொண்டி ருக்கக்கூடிய அய்யா அமிர்தலிங்கனாருடைய அறக்கட்டளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்.
இதற்கு முன்னால், காணொலிமூலமாகத்தான் பேசக்கூடிய வாய்ப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. ஏனென்றால், கோவிட் என்ற கரோனா தொற்று நோய் இருந்த காலகட்டம் அது. அதன் கார ணமாக நேரிடையாகச் சந்திக்கக் கூடிய வாய்ப்பில்லை.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னால், உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் அழைத்து வந்திருக்கின்ற விருந்தினன் என்று அல்ல. உங்களில் ஒருவன் என்ற முறையில்! நமக்குள்ளே பேதமில்லை. மண்ணால், எல்லையால், நாட்டால் நாம் பிரிக்கப்பட்டாலும், தொப்புள் கொடி உறவோடு என்றைக்கும் இருக்கக்கூடிய பண்பாட்டு அடிப்படையில் நாம் ஒன்றுபட்ட குடும்பம் என்ற உணர்வோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
நம்முடைய உறவை நாட்டு எல்லை பிரிக்கலாம்; அரசியல் பிரிக்கலாம். ஆனால், தமிழ்ப் பண்பாடு, அந்தத் திராவிட பண்பாடு இருக்கிறதே, எல்லாவற்றையும் தாண்டிய மானுட நேயம் – மனிதப் பண்பாடு இருக்கிறதே – அப்படி உலகத்திற்கு வழிகாட்டிய பண்பாடு, நம்முடைய பண்பாடு.
நம்முடைய பார்வை இருக்கிறதே, விசாலப் பார்வை.
புரட்சிக்கவிஞர் அழகாகச் சொன்னார்!
புரட்சிக்கவிஞர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார் –
‘‘அறிவை விரிவு செய் – அகண்டமாக்கு
விசால பார்வையால் விழுங்கு மக்களை” என்று.
அதுபோன்று நாம் அத்தனை பேரும் சிறந்த மானுட நேயத்தோடு இருக்கவேண்டும். மனித உரி மைக்காகத்தான் போராடுகிறோம்.
அது ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு உருவத்தைப் பொறுத்ததாக இருக்கிறது, ஒவ்வொரு இடத்தைப் பொறுத்ததது, அவரவர் போராட்டக் களத்தைப் பொறுத்தது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். ‘‘தலைவர் திரு.அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆவது பிறந்த நாள் நினைவு இதழ்” என்ற தலைப்பில். அந்த நூலை நான் படித்தேன். அவருடைய உரையை தேடிப் பிடித்து, நூலாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
அய்யா அமிர்தலிங்கனார் அவர்கள் பல வகையில் எடுத்துக்காட்டானவர். அப்படிப்பட்டவருடைய 1986, ஜூன் மாதம் சென்னை திருவல்லிக்கேணி – இலங்கை இந்திய நட்புறவு கழகத் தொடக்க விழா உரையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த அற்புதமான நூலை நீங்கள் எல்லோரும் படித்துப் பார்த்தால், பல செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு நல்ல தலைவனுக்கு என்ன அடையாளம்?
ஒரு நல்ல தலைவனுக்கு என்ன இலக்கணம்?
தலைவரை எப்படி நாம் அடையாளப்படுத்துவது?
வரலாற்றில் நிலைக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அந்த உரையினுடைய தத்துவத்தின் சாரத்தை இன்றைக்கும் படித்துப் பார்த்தால், அவருடைய தொலைநோக்கு என்பது, ஒரு நல்ல தலைவரை அடையாளங்காட்டக்கூடிய தொலைநோக்கு என்பதை நீங்கள் பார்க்கலாம்.
ஒரு பெரிய இலக்கியவாதியான வி.செ.காண்டேகரை உங்களுக்குத் தெரியும். அவர் புதினம் எழுதக்கூடியவர். அதனால்,
புதுமைக் கருத்துகளையெல்லாம் சொல்லுவார். அவர் சொன்னார்,
ஒரு தலைவன் என்பதைக்
கண்டுபிடிப்பது எப்படி?
ஒருவன் தலைவன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சொன்னால், அவர் தன் காலத்திற்குப் பிறகு, 50 ஆண்டுகாலத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? எப்படி வரும் என்பதை யார் சிந்தித்துச் சொல்கிறார்களோ, அவர்கள்தான் தலைமைப் பதவிக்கான தகுதிக்குரியவர்களாக இருப்பார்கள் என்று சொன்னார்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிறப்பான கருத்துள்ள உரையாக அந்த உரை அமைந்திருக்கிறது. இன்றைய விழா நாயகராக நம்மால் போற்றப்படுகின்ற, பின்பற்றப்படவேண்டிய தலைவர் அமிர்தலிங்கனார் அவர்கள், எப்படியெல்லாம் தியாகம் செய்தார்கள்.
நம்முடைய நாட்டில், உடல், பொருள், ஆவி என்று சொல்வார்கள். ஆவி என்று சொல்வதைவிட, உயிர் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாவற்றையும் அவர்கள் தந்தார்கள். அவர் மறைந்தார் என்று சொல்ல முடியாது. வரலாற்றில் வாழுகிறார், வரலாறாகவே வாழ்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவருடைய தியாகம், அவருடைய உழைப்பு, அவருடைய முன்னோக்கு, அவருடைய சிந்தனை – எல்லாவற்றையும் தாண்டி, நம்முடைய ஆயர் அவர்கள் அழகாகச் சொன்னார்கள், அவருடைய மனிதநேயம் – மானுடப் பற்று.
பதவியை விட “மனிதம்” என்ற
அலங்காரமே பெரிது!
ஒரு மனிதனைப் பதவிகளால் அலங்கரிக்கலாம், பட்டங்களால் உயரலாம். ஆனால், மனிதம் அவ்வளவு எளிதல்ல. அந்த மனிதத்தை அவர்கள் எப்படியெல்லாம் பெற்றார்கள்; எப்படியெல்லாம் வலியுறுத்தினார்கள் என்பதை இன்றைக்கு இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் இப்பொழுது தேவையான மருந்து அது. இன்றைக்கு அவருடைய படத்தை இங்கே பார்க்கும்பொழுது, இலங்கை நாட்டு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு தமிழன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற வரலாற்றுக்கு அவர் நாயகர் என்று நினைக்கின்ற பொழுது பெருமையடைகின்றோம்.
எங்கள் நாடு எப்படி இருக்கிறது என்பது முக்கிய மல்ல; எங்கள் வீடு எப்படி இருக்கிறது என்பதுகூட முக்கியமல்ல. எங்கள் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சிந்தித்து தியாகம் செய்து அவர்களைத் தயாரிக்கக் கூடிய ஓர் அற்புதமான பாசறைத் தளபதியாக அவர் திகழ்ந்திருக்கிறார்.
இந்த விழாவினை ஏற்பாடு செய்த தோழர்க ளுக்கு, பெரியவர்களுக்கு, இவ்விழாவினை நடத்துகின்ற வர்களுக்கு நன்றியைச் சொல்லவேண்டும்.
இந்த விழாவிலே தன்னுடைய உணர்வுகளை யெல்லாம் கொட்டினார்கள் நம்முடைய தலைவர் அவர்கள். அதைச் சிறப்பாக இன்னும் மெருகேற்றினார் நம்முடைய ஆயர் அவர்கள்.
இந்தப் புத்தகத்தில் 1989 ஆம் ஆண்டு அமிர்த லிங்கனார் ஆற்றிய உரையை இன்றைக்கு எடுத்துச் சொன்னாலும், இன்றைக்கும் தேவைப்படுகின்ற, காலத்தை வென்ற கருத்தியல். அதில், சில கருத்துகளை நான் பின்னால் வைக்க விரும்புகிறேன்.
தமிழினத்திற்கு முன்னால் உள்ள பிரச்சினை!
நம்முடைய அய்யா அமுது (அமிர்தலிங்கம்) அவர்கள் பேசுகிறார்கள். தமிழுக்கும் அமுது என்று பெயர். அப்படிப்பட்ட ஒரு நிலையில், இளைஞர்கள் மத்தியில் சில தவறான கருத்துகள் இருக்கிறது. ஏதோ 1975 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான், இந்த விடுதலை இயக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பெல்லாம் வெறும் அந்தரத்திலே காற்றிலேதான் எல்லாம் நடந்தது என்ற கருத்து அது. அது ஒரு தவறான, தப்பான கருத்து. பெரிய பனைமரமாக வளர்ந்த பின்புதான், அங்கே நிலை கொண்டது என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அந்தப் பழ விதையை, மனிதன் யார் முதலில் போட்டாரோ, அவரை மறந்துவிடக் கூடாது. அது வளர்ந்து பலன் கொடுக்கின்ற நேரத்தில், அந்த மரத்தில் ஏறி, அந்தப் பழத்தை பறித்துக் கொடுத்தவரை நாம் நிச்சயமாக மறந்துவிடக்கூடாது. அவரும், அதனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று அற்புதமாகச் சொன்னார்கள்.
இதுதான் இன்றைக்குத் தமிழ் இனத்திற்கு முன்னால் உள்ள பிரச்சினை. அவர்கள் உண்ணுவார்கள், ஆனால், எண்ணமாட்டார்கள்.
அது எப்படி வந்தது என்பதற்காக எண்ணுவதற்குப் பல பேருக்கு நேரமும் இல்லை; முயற்சியும் இல்லை.
அதைத்தான் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கி றார்கள்.
வரலாற்றை மறந்து, ஒரு வருங்காலத்தை அமைக்க முடியாது.
எவ்வளவு அற்புதமான ஓர் பேருண்மை. வரலாற்றை நாம் படிக்கிறோம். வருங்காலத்தை உருவாக்குவதற்கு மட்டும் வரலாறு அல்ல. இன்னும் ஒருபடி தாண்டிப் போய் பார்த்தோமேயானால், அந்த வரலாற்றில் எத்தனை தவறுகள் நடந்தன? எந்தெந்த இடத்தில் நாம் சறுக்கி இருக்கின்றோம்? எந்தெந்த இடத்தில் நாம் விழக்கூடாத இடத்தில் விழுந்திருக்கின்றோம்? எழுவதற்காக நாம் முயற்சி செய்து மீண்டும் அந்த இடத்தில் விழுந்திருக்கின்றோமே என்று எண்ணிப் பார்க்கவேண்டிய கட்டம் இன்றைய காலகட்டம்.
எனவேதான் நான் சொன்னேன், அய்யா அமிர்த லிங்கனார் அவர்களுக்கான வெறும் படத்திறப்பாக இதைக் கருதக்கூடாது. பாடங்களைப் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பாக இதனைக் கருதவேண்டும்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். தமிழ் இன உணர்வின் சின்னம். உரிமைக் குரல் எங்கிருந்து வந்தாலும், அந்த உரிமைக் குரலுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கக்கூடியவர்கள். நம்முடைய அய்யா அவர்களும், அம்மா மங்கையர்க்கரசி அவர்களும், அவரைப் பார்த்துப் பாராட்டியவர்கள். பல நேரங்களில் ஒரே மேடையில் பேசியிருக்கின்றோம். அடிகளாருக்கும் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு.
அப்படிப்பட்ட நிலையில், அடிகளார் அவர்கள் ஒருமுறை சொன்னதை, நான் பல கூட்டங்க ளில், தமிழர்கள் மத்தியில், இன உணர்வை உருவாக்க வேண்டும் என்று கருதுகின்ற நேரத்தில், அதைத்தான் சொல்வேன்.
ஆயர் அவர்கள் எப்படிப்பட்ட உணர்வோடு இங்கே வந்திருக்கின்றாரோ, அதுபோன்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், காவி உடை அணிந்துகொண்டு, இன உணர்வோடு பேசக்கூடியவர்கள். அப்படிப்பட்ட வர்களையெல்லாம் நாங்கள் ஒரே மேடையில் சந்திப்போம் – கைகுலுக்குவோம் – கருத்தை ஒன்றாக்கிக் கொள்வோம். எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல; எது எங்களை இணைக்கிறது என்பதுதான் மிக முக்கியம் என்ற உணர்வோடு நாங்கள் பகிர்ந்துகொள்வோம்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறிய கருத்து!
அழகாகச் சொன்னார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
‘‘தமிழனைப்பற்றி எனக்கு இருக்கின்ற கவலை யெல்லாம் என்னவென்று சொன்னால், தமிழன் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறான் என்பதுகூட அல்ல; விழுகிறவன் எழுவான்; எழவேண்டும். அது முக்கியமானது, அது உலகத்திற்குத் தெரிந்த பழமொழி. ஆனால், இங்கே இருக்கக்கூடிய ஒரு கெட்ட வாய்ப்பு என்னவென்றால், தமிழனைப் பொறுத்தவரையில், நேற்றைக்கு விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுகிறான்; நாளைக்கும் விழுகிறான். அதுதான் எனக்கு இருக்கின்ற வேதனை.
விழுகிறதுதான் விழுகிறாயே, புதிய இடத்திலாவது விழவேண்டாமா?” என்று கேட்பார்.
எனவேதான், தமிழர்களைப் பார்த்து முதல் கேள்வியே, ‘‘நேற்று விழுந்த இடத்திலே, இன்றைக்கும் விழாதீர்கள், புதிய இடத்திலாவது விழுங்கள்” என்பதுதான்.
அப்படி விழக்கூடாது; உங்களை விழ விடமாட்டோம் நாங்கள். அதற்காகத்தான் எங்களைப் போன்றவர்கள் இருக்கின்றோம்.
உதாரணத்திற்குச் சொல்கிறேன். புதிய இடத்தில் விழுங்கள் என்பதல்ல; விழாமல் வாழுங்கள் என்ப தற்குத்தான் உழைக்கின்றோம்.
இந்தப் படத்திறப்பு விழா – பிறந்த நாள் விழா என்பது சம்பிரதாய விழாவா? அல்லது சரித்திரத்தை மட்டும் ஞாபகப்படுத்திவிட்டு, நாம் விடைபெற்றுச் செல்வதா? அல்ல!
அடுத்த செயல் திட்டம் என்ன என்பதை அதிலேயி லிருந்து புத்தாக்கத்தை, புதிய உணர்வை நாம் பெற்றாகவேண்டும், அதுதான் மிக முக்கியமானதாகும்.
வேர்களைத் தேடித்தான் விழுதுகள் செல்லவேண்டும்!
வேர்களைத் தேடித்தான் விழுதுகள் செல்ல வேண்டும்; வேர்கள் பாதுகாப்பாக இருப்பதால்தான் விழுதுகளே உருவாகியிருக்கின்றன. எனவே, விழுதுகள் பழுதில்லாமல் இருக்கவேண்டும்; பழுதில்லாத விழுதுகளை நாம் உருவாக்கவேண்டும். அதுதான் வேருக்குப் பெருமை – அதனைச் செய்திருக்கிறார்கள்.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, நடப்பவைகள் இனி நல்லவைகளாக இருக்கவேண்டும்.
நாம் பாடங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அதுவும் நமக்கு உரிமைகள் கிடைத்துவிட்டனவா? இன்னும் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய நிலைகள் எல்லாம் மாறிவிட்டனவா?
நாமெல்லாம் மனிதர்கள்தான் – மனித உரிமைகள், மானுட உரிமைகள் எல்லாம் கிடைத்துவிட்டனவா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் அய்யா அமிர்தலிங்கனார் அவர்களின் படத்தைப் பார்த்து விடையை காண வேண்டும்.
ஏனென்றால், நான் இன்னொரு நாட்டுக்காரர்; இந்த மண்ணுக்கு வந்திருக்கின்ற நேரத்தில், எனக்கு சில எல்லைக் கோடுகள் உண்டு. அந்த எல்லைக் கோடுகளைத் தாண்டி நான் நடப்பது எனக்குச் சங்கடம் என்பது இருக்கட்டும்; அடுத்தவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கக் கூடாது. அதுதான் மிக முக்கியமான கவலை, பொறுப்பு.
ஆனால், எனக்கு ஒரு பெரிய துணிச்சல் என்னவென்று சொன்னால், நீதியரசர் தீர்ப்பு எழுதியிருக்கிறார். மேல்முறையீடு செய்தாலும் நிற்கக்கூடிய தீர்ப்பு அவருடைய தீர்ப்பு.
இனம், பண்பாடுகளைக் காப்பாற்றும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு
இனம், மொழி, பண்பாடு என்பது இருக்கிறதே, அதை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு, உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அது ஏதோ பிச்சை போடுவதல்ல.
We want parity; not charity
இதுதான் மிக முக்கியம்.
நாம் ‘இனம்’ என்று சொல்லுகிறபொழுது, இன வெறியை சொல்லவில்லை. நாம் ‘இனம்’ என்று சொல்லும்பொழுது கூட்டமைப்பு – ஒரு சமுதாயம் – ஒரு பண்பாடு.
எந்த நாட்டிலும் அவரவருடைய பண்பாடு என்பது இருக்கிறதே, அது காப்பாற்றப்படவேண்டிய பண்பாடு.
நம்முடைய பண்பாட்டை நாம் மறந்துவிட முடியாது. நம்முடைய உறவை நாம் மறந்துவிட முடியாது.
எடுத்துக்காட்டாக ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லுகிறேன் இந்த நேரத்தில்.
நம்முடைய இளைஞர்கள், கடந்த கால நிகழ்வுகளைப்பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. புதிதாக அடுத்து நம்முடைய உரிமைகளைப் பெறுவதற்காக, நம்மை நாம் எப்படித் தயாரித்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்விலே அவர்கள் பக்குவம் பெறுவதற்கு இவையெல்லாம் இருக்கவேண்டும்.
சில நேரங்களில், பழம்பெருமையையே பேசிக் கொண்டிருங்கள் என்று நாங்கள் சொல்லமாட்டோம். அதற்கு நாங்கள் எதிரி. ஆனால், பழம்பெருமையைப் புறக்கணித்துவிட வேண்டும் என்று சொல்லுவதும் எங்களால் ஒப்புக்கொள்ள முடியாது.
உணவுக்கு உரம் முக்கியமே – ஆனால்,
உரமே உணவாக முடியாது!
பழம்பெருமை என்பது இனத்தைப் பொறுத்து, மொழியைப் பொறுத்து, பண்பாட்டைப் பொறுத்து எப்படி இருந்தாலும்கூட, அது உணவாக இருக்க முடியாது. ஆனால், உரமாக இருக்கலாம்.
உரம் வேறு; உணவு வேறு.
உரம்தான், உணவை உற்பத்தி செய்கிறது. ஆனால், அதற்காக உரத்தையே உணவாக ஆக்கிக்கொள்ள முடியாது.
உப்பு, சாப்பாட்டிற்குத் தேவைதான். ‘‘உப்பில்லாத பண்டத்தை குப்பையில் எறி” என்று சொல்லுகிறோம்.
உணவிற்கு உப்புத் தேவைதான்; ஆனால், உணவே உப்பாக முடியுமா?
அதுபோலத்தான் நண்பர்களே, பழம்பெருமை என்பதை நாம் உரமாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
பிறப்பு என்று நினைக்கின்ற நேரத்தில்கூட, அத்து ணை பேரையும் சமமாக சொல்லிச் சொல்லி, ‘‘யாதும் ஊரே” என்ற ஒரு பரந்த விரிந்த மனப்பான்மை.
மற்றவர்களைப் பார்த்துக்கூட நம்முடைய பண்பாடு குற்றம் சொல்வதில்லை.
‘‘தீதும் நன்றம் பிறர்தர வாரா!”
எவ்வளவு பரந்த விரிந்த மனப்பான்மை.
Sympathy, Empathy என்றால் என்ன?
ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு – இது அறிவார்ந்த அறிஞர்கள் நிறைந்த அவை.
ஆங்கிலத்தில் Empathy என்று சொல்வார்கள். உயர்ந்த மனிதன் யார்? சிறந்த மனிதன் யார்? என்று அய்யா அமிர்தலிங்கனார் அவர்களுடைய படத்தைப் பார்க்கின்றபொழுது, அவருடைய வாழ்க்கையில் 40 ஆண்டுகள் நெருக்கமான நண்பனாக, தோழனாக, சகோதரனாக, அவருடைய குடும்பத்தோடு இணைந்து கொண்டிருந்த ஒருவன் என்கிற முறையில் ஒரு செய்தியைச் சுட்டிக்காட்டவேண்டும்.
ஆங்கிலத்தில் Empathy என்று சொல்லும் பொழுது, பல நேரங்களில் நாங்கள் விவாதித்தோம், நண்பர்களோடு, தமிழ் உணர்வாளர்களோடு.
Sympathy என்பதற்கும், Empathy என்பதற்கும் என்ன வேறுபாடு என்று ஆங்கிலம் படித்த உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
பொதுவாக நாம் விளக்கம் சொல்லும்பொழுது, Sympathy என்றால், மனிதர்களுக்காக இரக்கப்ப டுவது. இரங்குவது! இரக்கப்படுவது என்று சொல்லும்பொழுது Sympathy என்கிற வார்த்தையை நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.
ஆனால், Sympathy என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன?
ஒருவர் நோயினாலோ அல்லது அடிபட்டு இருக்கின்ற நேரத்திலோ, அவருக்காக நாம் இரங்குவது – அதை நம் மனதில் உணர்ந்து அவருக்காக இரக்கப்படுவது – அதுதான் சிம்பதி.
ஆனால், எம்பதி என்ற சொல் இருக்கிறதே, அது அவர்களாகவே நாம் மாறிவிடுவது.
அவர்கள் என்ன துன்பத்தை அனுபவிக்கி றார்களோ, அதே துன்பத்தை நாம் அந்த இடத்தி லிருந்து கொண்டு அனுபவிப்பது!
அதற்கு என்ன தமிழ்ச் சொல் என்று தேடிப் பார்த்த நேரத்தில்தான், நம்முடைய இலக்கி யங்களில், இல்லாதவையா? நாம்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
வள்ளுவருடைய 1330 திருக்குறளில், ஒரு குறளை நீங்கள் படித்திருப்பீர்கள்.
‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்” (குறள் 213)
மனிதர்கள் மொத்தம் எத்தனை கோடி இருக்கி றார்கள்? என்று வள்ளுவரிடத்தில் கேட்டால், மொத்த மக்கள் தொகை இவ்வளவு கோடி என்று சொன்னால், அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், குறள் கருத்துப்படி.
‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்”
என்றுதான் சொல்வார்.
மற்றவர்களுக்கு வந்த துன்பம் தனக்கே வந்ததாக, அந்த வலியை அப்படி வாங்கிக் கொண்டு, அதற்கு என்ன நிவாரணம் தேவை? எந்த வகையில் அதற்கு மாற்றுத் தேடுவது? என்பதற்காக போராட தன்னையே ஒப்படைத்துக் கொள்கிறார்கள் அல்லவா, அவர்கள் எல்லாம் ஒத்த தறிவான் என்று சொல்லக்கூடியவர்கள். பகுத்தறிவு, பட்டறிவு -படிப்பறிவு என்று ஒரே சொல்லாக சொல்லிக் கொண்டு வருகின்ற நேரத்தில், வள்ளுவருடைய குறளிலிருந்தே Empathy என்று சொல்லுவதற்கு, ஒத்தறிவு என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தலாம்.
பட்டறிவு என்பதுபோல், ஒத்தறிவு என்று தெளிவாகச் சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒத்தறிவோடு ஓர் அனுபவம் இருக்கிறது என்றால், அது இங்கே படமாக இருக்கின்ற அமிர்தலிங்கனார் அய்யா அவர்கள்தான். தன்னைத் தானே இந்த சமூகத்திற்கு அவர்கள் விலையாகக் கொடுத்தார்.
வரலாற்றில் திருப்பங்களை உருவாக்க, அவற்றைப் பயன்படுத்தவேண்டும்.
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றம்!
அரசியல் பிழைத்தோருக்கு அறம்கூற்றம்.
அந்த அறம் என்று சொல்லும்பொழுதுகூட,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (குறள் 33)
அறம் என்று சொன்னால், ‘அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது, தர்மம்’ என்றெல்லாம் சொல்லி பெருமைப்படுவார்கள். பெரிய தர்மங்களைக்கூட செய்வார்கள். ஒரு பக்கத்தில் வேறு விதமாக நடந்துகொண்டு, இன்னொரு பக்கத்தில் தர்மவான்களாக இருப்பார்கள். அது அறம் அல்ல. அது ஒரு அறவிலை வணிகம்தானே தவிர, வேறு ஒன்றும் கிடையாது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு அறம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வை – அந்த அறத்தை நான் என்னுடைய நேர்மையினாலே, என்னுடைய வாழ்வினாலே சொல்லுவேன் என்று சொல்லிய ஓர் அற்புதமான தலைவராக, ஓர் எடுத்துக்காட்டான தலைவராக இருப்பதால்தான், அவரை நாம் முன்னெடுத்துக் கொண்டு, இளைய தலைமுறை இவரிடமிருந்து பெறவேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன என்கிறோம். அவற்றை மறக்கா தது மட்டுமல்ல, எத்தனையோ செய்திகள் உண்டு.
அய்யா அமிர்தலிங்கம் அவர்களுக்கு
நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?
ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், யாரையும் அவர் தனிப்பட்ட முறையில் எதிரிகளாகக் கருதவில்லை. கொள்கைகளை எதிரிகளாகக் கருதினார். உரிமை மறுப்போரை, ஆதிக்கவாதிகளை எதிரிகளாகக் கருதி னார்.
மனிதர்கள் எப்பொழுதுமே சாவதில்லை – தத்து வங்களாக அவர்கள் இருக்கின்ற வரையில்! ஆனால், தத்துவங்களில் இருந்து அவர்கள் மாறி, தனி மனிதருடைய சுயநலம், தன்னலம் என்று ஆகின்ற நேரத்தில்தான் அவர்கள் மறக்கப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இல்லாத மனி தர்களை, தலைவர்களைத்தான் நாம் தேடிக் கொண்டி ருக்கின்றோம் வழிகாட்டுவதற்கு. அதுவும் இந்தக் காலகட்டத்தில், இளைய தலைமுறையினர்
கலங்கரை வெளிச்சங்கள் இல்லாவிட்டால் கப்பல்கள் கடலிலே பயணம் செய்ய முடியாது. அதனை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
கலங்கரை விளக்கம் வெளியே – அதேபோல, காம்பஸ் என்று சொல்லக்கூடிய திசையை அடையாளங் காட்டுவது அது உள்ளே!
அப்படிப்பட்ட ஒரு அற்புதமான சூழலை உருவாக்கித் தருவதற்குத்தான் இந்த விழாக்கள்.
எல்லோருக்குமான மய்யப்புள்ளி அவர்!
அய்யா அமிர்தலிங்கனார் போன்றோருடைய சிறப்புகளை நாம் எடுத்துச் சொல்லி, எடுத்துச் சொல்லி மிகப்பெரிய அளவில் வருகின்றபொழுது ஒன்றைச் சொல்லவேண்டும்.
அவர் எல்லோரையும் அணைத்தார்.
வெளிநாட்டில் இருக்கின்ற தலைவர்கள் உள்பட! தமிழ்நாட்டிற்கு வந்தால், ஏராளமான கட்சிகள். ஒருவருக்கொருவர் ஒரே மேடையில் சந்திக்க முடியாதவர்கள்கூட இருப்போம். ஆனால், அய்யா அமிர்தலிங்கனார் தமிழ்நாட்டிற்கு வந்தால், அவர் ஒரு மய்யப் புள்ளி. அதற்குச் சாட்சியமாக இங்கே அமர்ந்திருக்கின்றார்கள் சகோதரர்கள் சேனாதி ராஜா போன்றவர்கள். சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கடைசிவரையில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏனென்றால், தமிழ்நாட்டில் அஷ்டதிக்கு பாலகர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எட்டு திசைகள் இருந்தால், ஒன்பது பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாலும், அத்துணை பேரையும் ஈர்க்கக்கூடிய ஒரு மாமனிதராகத்தான் அமிர்தலிங்கனார் அவர்கள் இருந்தார்கள்.
தந்தை பெரியார் காலத்திலிருந்து, அண்ணா காலத்திலிருந்து, கலைஞர் காலத்திலிருந்து இந்த உணர்வு!
நான் தந்தை பெரியாருடைய தொண்டன், பகுத்தறிவுவாதி.
அப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது எவ்வளவு பெரிய ஈர்ப்போடு – என்ன செய்யவேண்டும் அடுத்தபடியாக என்று, இந்திரா காந்தி அம்மையாரோடு போராடி, எவ்வளவு பெரிய சிறப்பைச் செய்தார்கள் என்பதை நம்முடைய மாண்பமை நீதியரசர் அவர்கள் இங்கே அழகாகச் சொன்னார்கள்.
உரிமைக்காகக் குரல் கொடுப்பார். அதேநேரத்தில், கலைஞர் அவர்கள் சொன்ன வரிகள் எல்லாவற்றிற்கும் பயன்படும்.
உறவுக்காகக் கைகொடுப்பதில் தவறே இல்லை. ஏனென்றால், உறவுக்காகக் கைகொடுக்கின்ற நேரத்தில், அதற்காகவே நாம் மங்கிவிடக் கூடாது; பின்தங்கிவிடக் கூடாது.
உறவுக்குக் கை கொடுத்தார் – உரிமைக்குக் குரல் கொடுத்தார்!
உறவுக்காகக் கைகொடுக்கவேண்டும்; அதே நேரத்தில் உரிமைக்காகக் குரல் கொடுக்கத் தவறக் கூடாது. அந்த உணர்வை அவர்கள் தெளிவாகக் காட்டினார்கள்.
அதைச் செய்வதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு – தன்னைவிட இளைஞர்கள், சிறு பிள்ளைகள் என்று சொல்லக்கூடியவர்களையெல்லாம், பல பெரியவர்கள் என்ன சொல்வார்கள், ‘‘அவர்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் எங்களோடு இருக்கக்கூடியவர்கள் அல்ல” என்று ஒதுக்குவார்கள், புறந்தள்ளுவார்கள், அலட்சியப்படுத்துவார்கள்.
அனைவரையும் ஒன்றுபடுத்தியவர்!
ஆனால், இளைஞர்களாக இருந்தாலும், வயது முக்கியமல்ல – அவர்களுடைய ஆற்றல் மிக முக்கியம். அந்த ஆற்றல்கள், அவர்களை கவனச்சித றல்களுக்கு உள்ளாக்கக் கூடாது. அவர்களையும் ஒன்றுபடுத்தவேண்டும். ‘‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்?” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நாம் அவர்களை ஒன்றுபடுத்தவேண்டும் என்ற அந்த பரந்த விரிந்த மனப்பான்மைக்குச் சொந்தக்காரர்தான் அய்யா அமிர்தலிங்கனார் அவர்கள்.
ஆகவே, அய்யா அமிர்தலிங்கனார் அவர்களைப் பாராட்டுவது என்பது ஒரு தனி மனிதரைப் பாராட்டுவது அல்ல.
அவருடைய சிறப்புகளை மட்டும் பேசிவிட்டு செல்வதைவிட, இன்றைய காலகட்டத்தில் அதை நாம் பாடமாக எடுத்துக்கொண்டு படிக்கவேண்டும். அந்தப் படிப்பினைகளைப் பெறவேண்டும். பெற்ற படிப்பி னைகளுக்காக நாம் உழைக்கவேண்டும்; அதுதான் மிகவும் முக்கியம்.
நம்மிடம் ரத்தக் கறைகள் இருக்கின்றன!
ஏற்கெனவே நம்மினத்திலே ரத்தக் கறைகள் ஏராளம். அதை வெறும் கண்ணீர் விட்டு அழித்துவிடலாம் என்று மேலெழுந்தவாரியாக நாம் நினைத்துக் கொள்ளக்கூடாது.
ஏற்றுக்கொள்வதோ, தள்ளுவதோ –
கேட்பவருக்கு உரிமை உண்டு!
என்னைப் பொறுத்தவரையில், நான் பகுத்தறிவுவாதி, பெரியாருடைய தொண்டன் – அவர் சொல்லுவார், ‘‘நான் சொல்லுகின்ற கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. தள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு; கொள்ளுவதற்கு உரிமை உண்டு” என்று. அதையேதான் இந்த அரங்கத்திற்குக்கூட நான் சொல்லுகிறேன் – இது எங்களுடைய கருத்து; சொல்லுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு; அதைத் தள்ளுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தெளிவாக நினைத்துப் பாருங்கள் – நாம் இதிலிருந்து என்ன பயன் பெற்றோம்?
கடந்த காலத்தில் ரத்தக் கறைகள் இருக்கின்றன; அவற்றை வெறும் கண்ணீர் விட்டு நாம் அழித்துவிட முடியுமா? அழித்தால் போதுமா? போதாது!
வெறும் கண்ணீரால் மாற்ற முடியாது; மாற்றக்கூடாது – நிலைக்காது!
அவற்றிலிருந்து மீண்டும் நாம் பாடம் கற்று, நாம் ஓரணியில் திரண்டாகவேண்டும். அந்தக் காலகட்டம் நெருக்கி வந்திருக்கின்றது. அதற்கான உழைப்பின் வேர்வை இருக்கிறதே, அந்த வேர்வையின்மூலமாகத்தான் அதை மாற்ற முடியுமே தவிர, வெறும் கண்ணீரால் மாற்ற முடியாது; மாற்றக்கூடாது – நிலைக்காது.
15 ஆண்டுகளுக்கு மேலாயிற்று என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது தோழர் களே, அடுத்து என்ன?
நாம் பலா கொட்டைகளை கையில் வைத்துக் கொண்டிருந்தால் போதுமா? அல்லது நாம் ஒரு வருக்கொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டி ருந்தால் போதுமா? அய்யா நம்முடைய அருமைத் தலைவர் அமிர்தலிங்கனார் போன்றவர்கள், அதற்கு முன் தந்தை செல்வா போன்றவர்கள், அதற்கு முன்பு வழிகாட்டியவர்கள், நமக்காக எத்தனையோ தியாகங்களை செய்தவர்கள், அண்மையில் மறைந்த சம்பந்தனார் உள்பட போராளிகள் – எந்த ரூபத்தில் இருந்தாலும், அத்துணை பேருக்கும் சேர்த்துச் சொல்கிறோம். எத்தனை ஆயிரக்கணக்கில், எத்தனை லட்சக்கணக்கில் நாம் மிகப்பெரிய இழப்பைப் பெற்றிருக்கின்றோம். அந்த இழப்பிற்குப் பின்னாலே நாம் என்ன பாடத்தைப் பெற்றோம்? அதற்கு என்ன மாற்றுத் தேவை? என்பதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
அப்படி சிந்திக்கின்ற நேரத்தில், அவர் வேறு; இவர் வேறு; நான் வேறு என்று இருக்கக்கூடாது. எது நம்மைப் பிரிக்கிறதோ, அதை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது என்பது எங்களைப் போன்றவர்களின் தாழ்மையான கருத்தாகும்.
தோழர்களே, தந்தை பெரியார் அவர்கள் ஒரு பொதுவான கருத்தைச் சொல்வார்கள் – ஏனென்றால், அவருடைய மாணவன் நான்.
நண்பன் யார்? எதிரி யார்? என்று
சரியாக அடையாளம் காண வேண்டும்!
ஒரு பொது நோக்கோடு நாம் ஒன்று சேர்க்கின்ற நேரத்தில், முதலில் ஒரு பொது இலக்கு, பொதுப் போராட்டம், பொது உரிமைக்கானது என்று வருகின்ற நேரத்தில், நண்பன் யார்? எதிரி யார்? என்று சரியாக அடையாளம் காண வேண்டும்.
நண்பனை எதிரியாகக் கருதக்கூடாது; எதிரியை நண்பனாகவும் நம்பிவிடக் கூடாது.
இரண்டாவதாக நாம் பார்க்கவேண்டிய ஒரு செய்தி – எது நம்மைப் பிரிக்கிறது என்பதைப்பற்றி நீங்கள் கவலைப்படக் கூடாது. எது நம்மை இணைக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். பிரிப்பதை, அலட்சி யப்படுத்துங்கள்.
ஒன்றுபடவேண்டிய நேரத்தில், இணைப்பை அகலப்படுத்துங்கள்; ஆழப்படுத்துங்கள் என்று சொன்னார்.
புரட்சிக்கவிஞர் அழகாகச் சொன்னார்:
சமயத்தால் பிரிவுற்றோம்! சாதியினால் பிரிவுற்றோம்!
சடங்கு மற்றும்
சாற்றரிய பழக்கவழக் கங்களினாற் பிரிவுற்றோம்!
கொடுத்தல் கொள்ளல்
தமில்முற்றும் பிரிவுற்றோம்! அரசியலாற் பிரிவுற்றோம்!
வருவாய் தன்னில்
தாழ்வுயர்வாற் பிரிவுற்றோம்! சலுகையினாற் பிரிவுற்றோம்!
எனினும் இந்நாள்
நமையெல்லாம் ஒன்றாக்கிப் புத்துணர்வை உண்டாக்கி
நலம்செய் தற்கு
நாமொன்று பெற்றுள்ளோம்! ‘தமிழ்‘ அதனை உயிரென்று
நாளும் காப்போம்!
அமிழ்தொத்த புதுநூற்கள் பொதுநூற்கள் ஆகுமா
றந்தமிழ்க்கே
அன்றன்று நூறுநூ றென்றுதோன் றுதல்வேண்டும்
அறிஞ ராலே!
எனவே, இந்தக் காலகட்டம் இருக்கிறதே, தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலகட்டம். நம்முடைய உரிமைகளுக்காக – மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமை – எல்லா உரிமைகளுக்காகவும் நாம், நம்மை ஆழமாக, அகலப்படுத்தவேண்டிய காலகட்டம்.
அதற்கான நல்ல அறிஞர் பெருமக்கள் இங்கே இருக்கிறீர்கள். இதை ஒரு பெரிய அரங்கக் கூட்டமாக நான் கருதவில்லை. இது ஒரு திருப்புமுனையாக – மய்யமாகத்தான் இதைக் கருதுகிறேன்.
இருட்டு முடிந்தால், பகல் நிச்சயமாக வரும்!
ஆகவே, இங்கே வந்திருக்கின்றவர்கள் வரலாறு தெரிந்தவர்கள். எல்லோரும் பழைய வரலாறுகளை அறிந்தவர்கள். இந்த வரலாறு இந்த அரங்கத்தோடு போய்விடக் கூடாது. இளைய தலைமுறையினர், இனி வரும் தலைமுறையினர் ஆகியோரிடம் தெளி வாக எடுத்துச் சொல்லவேண்டும். இருட்டு என்று சொன்னால், அது நிரந்தரமானதல்ல. இருட்டு முடிந்தால், பகல் நிச்சயமாக வரும். விடியலே இல்லாத நாள்கள் கிடையாது.
எனவே, விடியலைத் தேடிச் செல்லுகின்ற நேரத்தில், அந்த உரிமையை, இலக்குகளைத் தெளிவாக அடைவோம். அதேபோல, தலைவர்கள், அதற்காக தங்களைத் தியாகம் செய்தவர்கள் எந்த அணியில் இருந்தாலும், எந்த வகையில் இருந்தாலும், அவர்கள் அத்துணை பேருடைய தியாகத்தையும் நாம் படிக்கற்களாக மாற்றுவோம். அதேபோல, உரிமைகள் மறுக்கப்பட்ட இனத்தை, மீண்டும் நிலை நிறுத்துவோம். நாம் வேறு; அவர்கள் வேறு என்று கருதாமல், ஒரு புதிய திருப்பத்தை, புதிய சூளுரையை எடுப்பதற்கு இந்த விழாவினைப் பயன்படுத்துகிறோம். வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க அமிர்தலிங்கனார் புகழ்!
வாழ்க பெரியார்!
வளர்க இன உணர்வு! மொழி உணர்வு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.