போன மச்சான் திரும்பி வந்தார்!

2 Min Read

வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? – இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? – இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். கதர்ச் சட்டைப் போட்டுக் கொண்ட தோஷத்திற்காக – கிடைத்த பதவி போகாமலிருப்பதற்காகக் கூறுகிறார்கள்.

எதுவும் அவரவர்களாகவே அனுபவித் தால்தான் தெரியும். நமது பிரதமர் ரெட்டியார் அவர்கள் அனுமானில் ஏறிக் கொண்டு பறந்தார் டெல்லிக்கு. வழியிலேயே சகுனத்தடை ஏற்பட்டது. அதாவது அனுமான் பறக்காமல் கீழே இறங்கிக் கொண்டது. சகுனத்தடையையும் லட்சியப்படுத்தாமல் ரயிலில் போய்ச் சேர்ந்தார் டெல்லிக்கு நமது பிரதமர்.

அங்கே கிடைத்த பதில் என்ன தெரியுமா? சென்னை மாகாணத்துக்குத் தேவையான அரிசி கொடுக்க முடியும் என உறுதி கூற முடியாது. பூர்ண மதுவிலக்குச் செய்வதானால் வரவு, செலவைச் சரிகட்ட எங்களை (மத்திய சர்க்காரை)ப் பணம் கேட்கக் கூடாது.
ஜமீன்தாரர்களை ஒழிப்பதானால் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு எங்களை (மத்திய சர்க்காரை)ப் பணம் கேட்கக் கூடாது. (இதே மத்திய சர்க்காரில் உள்ள காங்கிரஸ் அய்கமாண்டுகள்தான் ஜமீன்தாரர்களுக்கு நஷ்டஈடு தாராளமாகக் கொடுக்க வேண்டும் என்று புத்தி சொன்னவர்கள் என்பதை இதுசமயம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.)

மேற்சொன்ன பதில்களைக் கேட்ட நமது பிரதமர் ரெட்டியார் மனம் எப்படியிருந்திருக்கும்? சிந்தித்துப் பாருங்கள். கட்டாயம் அந்த இடத்தில் பிரதமர் ராமசாமி அவர்கள், பெரியார் ராமசாமி அவர்களை நினைத்திருப்பார்! வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்றுகூட மனதில் எண்ணியிருப்பார். ஆனால் வாய்விட்டுச் சொல்ல முடியுமோ? சொன்னால் தொலைந்ததே பிரதமர் பதவி! உடனே வந்துவிடும் 93ஆவது செக்ஷன். அப்புறம் யாருடைய தர்பார் தெரியுமோ? சாட்சாத் பவநகர் மஹாராஜா ஆட்சிதான்! அதையும் நினைத்திருப்பார். வாய்மூடி மவுனியாக வந்து சேர்ந்துவிட்டார். எப்படி சமாளிப்பாரோ? பார்ப்போம். பிரதமர் ரெட்டியார் அவர்கள் வடநாட்டாருக்கு முகத்திலடித்தமாதிரி பண நெருக்கடி நேரத்தில், எங்கள் நாட்டில் இந்திக்காக எதற்கு வீண் செலவு? பெரிய எதிர்ப்பு! என்று கூறி இந்திக்காக தனது சர்க்கார் ஒரு செல்லாக்காசும் செலவு செய்ய முடியாது என்று கூறுவாரா? பார்ப்போம்!
25.09.1948 – குடிஅரசிலிருந்து…

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *