புதுடில்லி, ஆக. 31- ரயில்வேயில் தொழில் பழகுநர்களாக (அபரண்டீஸ்) உள்ளவர்களுக்கு அங்கேயே நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் அதிகாரிகள் இதனை நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.
கடைசியாக 2020ஆம் ஆண்டுவரை நிரந்தா வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது ஆனால் தென்னக ரெயில்வே மற்றும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (அய்.சி எப்) மட்டும் அதனை நிறுத்தியுள்ளனர். தென்னக ரயில் வேயில் 2008 வரையிலும், அய்.சி.எப்.பில் 1998 வரையிலும் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்துக்கு பிறகு தொழில் பழகுநர்களாக இருந்தவர்களுக்கும் வேலை வழங்கவேண்டும் என்றகோரிக் கையை வலியுறுத்தி தொழிற்பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலர் போராடி வருகிறார்கள்.
இதற்கு முன்பு சென்னை, டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி விட்டனர்.
இந்த நிலையில் 29.8.2024 அன்று மீண்டும் டில்லி வந்து ரயில்வே அமைச்சகம் உள்ள ரயில் பவனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள ரயில்வே வாரிய அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் முறையிட்டனர். இதையடுத்து 5 பேர் மட்டும் வாரிய அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் விவரத்தைக் கேட்டு பதில் சொல்வதாக வாரிய அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.