பழுது நீக்கவும், நெடுஞ்சாலைத்துறை பணியிடங்கள் குறித்து ஆராயவும்
5 பேர் கொண்ட குழு அமைப்பு!
சென்னை, ஆக. 31- நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் களைக் கொண்ட ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்கப்படும் என என சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள 9479 பாலங்களை ஆய்வு செய்து உறுதித்தன்மையை கண்டறிந்து பழுதுகள் நீக்க ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யவும் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழு, நெடுஞ்சாலை துறையின் கீழ் கட்டப்பட்ட பாலங்களை ஆய்வு செய்து பழுது ஏற்பட்டு இருப்பின் அதனை உடனுக் குடன் சீரமைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
நெடுஞ்சாலை துறை இயக்குநர் செல்வதுரை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை மேலாளர் பழனிவேல், கண்காணிப்பு பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி, தேசிய நெடுஞ்சாலை துணைத் தலைமை பொறி யாளர் சிவகுமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இ-சேவை மய்யங்களில் முக்கிய மாற்றம்!
தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, ஆக.31- சென்னை மாவட்டத்தில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும் 44 அரசு இ-சேவை மய்யங்களைச் சார்ந்த முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளர்களை வேறு இடத்திற்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒரு அரசு துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலமாக 530 அரசு இ-சேவை மையங்கள் மற்றும் 328 நிரந்தர ஆதார் சேர்க்கை மய்யங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அரசு இ-சேவை மய்யங்கள் மூலமாக வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் சமுக நலன் சார்ந்த 170க்கும் மேற்பட்ட சேவைகளை இணைய வழி மூலமாக பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது.
இதேபோல நிரந்த ஆதார் சேர்க்கை மய்யங் கள் மூலமாக புதிய ஆதார் பதிவுகள் மற்றும் ஆதார் திருத்தங்கள் போன்ற சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், மற்றும் கோட்டம்/வார்டு அலுவலகங்களில் இ-சேவை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன.
தொழில் முனைவோர்களுக்கு முதலீடு – நிதிசேவை ஆலோசனை தளம் அறிமுகம்
சென்னை, ஆக.31- தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவருக்கும் நிதி சேவை மற்றும் முதலீடு மற்றும் அனைத்து ஆலோசனைகளுக்கும் தீர்வு மற்றும் வழிகாட்டுதலை அளிப்பதற்காக நிதி தொழில்நுட்ப தளமான மார்கெட்ஸ் மோஜோ நிறுவனம் கோஜோ எம்.எஃப் (MOJOMF) என்ற பெயரில் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
“மிகச் சரியான துல்லியமான உத்திகளை உள்ளடக்கிய முதலீட்டாளர்களின் குறிப்பிட்ட நிதி இலக்குகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள நிதி சேவைகள் அனைத்தும் இலவசமாகும். இதன் தொடக்கமாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் குடும்பத்தினரின் நிதி முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர் வசதிகளையும் அளிக்க உள்ளது.
இந்தத் தளத்தில் சந்தை அபாயம் குறித்த விவவரங்கள் மற்றும் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள், குறிப்பாக கடன் பத்திரங்கள், நிறுவன நிரந்தர சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாகக் கிடைப்பதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டு வருகிறது” என மார்க்கெட்ஸ் மோஜோ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் கோலியா தெரிவித்துள்ளார்.