ஒன்றிய அரசு பிடிவாதமாகத் திணிக்கும் புதிய கல்வி!
தமிழ்நாட்டின் இருமொழி கொள்கைக்கு விரோதம்!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான பதில்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண் டால்தான் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என ஒன்றிய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அண்மையில் தெரிவித்தார். மேலும், ‘ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்படாததால் 16,000 ஆசிரியர்களின் ஊதியம் கூட நிறுத்தப்படக் கூடிய நிலை ஏற்படும்’ என்றார். அதேவேளையில், “தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் க.பொன்முடி
மும்மொழிக்கொள்கையை கட்டாயம் வலியுறுத்தும் ‘பி.எம்.சிறீ’ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டல் தொனியில் கூறியதற்குப் பதிலளித்து அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும், அதனை ஏற்க நாங்கள் தயாராக இல்லை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசின் திட்டங்களை இணைந்து இருக்கிறோம்.
உயர்கல்வியாக இருந்தாலும் இரண்டு மொழி கட்டாயம். தமிழ் மொழியைக் கொண்டு வந்ததால்தான், இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு மிகச்சிறந்த நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை, ஆக. 31 “தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், பிஎம் சிறீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய பதில் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதியுதவியை அளிக்கப் பிடிவாதமாக மறுக்கிறது.
ஒன்றிய கல்வி அமைச்சரின் பிடிவாதம் – மிரட்டல்
சமக்ரா சிக்ஷா திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 ஆம் தேதி எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில், அவருக்கு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், “2023-2024 ஆம் நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கான ஒதுக்கீட்டின் கீழ் நான்கு தவணைகளாக ரூ.1876.15 கோடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டுக்கு ரூ.4,305.66 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020 சிறந்த பலன்களை வழங்கும். மும்மொழிக்கொள்கை மூலம் பன்மொழிக் கற்றல் மற்றும் தாய்மொழியில் கல்வி கற்றலை ஊக்குவிக்க ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பிரதமரின் சிறீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது.
ஆனால், இதுவரை அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் பிஎம் சிறீ பள்ளிகள் திட்டத்தைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்வது முக்கியம். கூட்டு முயற்சிகள் மூலம், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவதை ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஏற்கெனவே முன்வந்தபடி, பிஎம் சிறீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் தர்மேந்தி ரப் பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
ஏமாற்றும் ஒன்றிய அரசு
தமிழ்நாடு நீண்ட காலமகாவே இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இது அனைத்து ஆட்சியாளர்களுக்கும் தெரிந்த ஒன்று. அப்படி இருக் கும்போது மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள், அப்படி ஏற்றுக்கொண்டால் தான் நிதி தருவேன் என்று மிரட்டும் செயல் மோசமானது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியுதவி வழங்குகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக்ஷா) இந்த நிதியை பெற ஒன்றிய அரசின் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
பல மாநிலங்களும் எதிர்ப்பு!
இதற்கிடையே ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் சிறீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் டில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. அதேநேரம், பிஎம் சிறீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு உள்பட சில கோரிக்கைகளை தமிழ்நாடு முன்வைத்தது.
ஆனால், அதை ஏற்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டதால் இந்த திட்டத்தில் தமிழ்நாடு சேரவில்லை. இதனால் கடந்த கல்வியாண்டில் (2023-2024) 4 ஆவது தவணை நிதியுதவியையும், நடப்பு கல்வியாண்டில் (2024-2025) முதல் தவணை நிதியையும் ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது.
இதனால் மாநில அரசின் பங்களிப்பைக் கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நீண்ட காலத்துக்கு இதைக் கொண்டு சமாளிக்க முடியாது. எனவே, பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதவிர காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பிலும் நிதியை விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது – ஆர்ப்பாட்டங்களையும், மாநாட்டையும் கூட நடத்தியுள்ளது.