சூத்திரக் கடவுள் என்று பார்ப்பனர்களால் கூறப்படும் சிவனும் தீண்டாமையைக் கடைப்பிடித்தானா? ஆமாம். நந்தனுக்காக கோவிலை விட்டு வெளியே வராமல் தீயை வளர்த்து அதில் இறங்கி பூணூல் போட்ட பார்ப்பனராக வா என்று கூறினானாம். அதாவது விதிப்படி இந்த பிறவியில் நீ செய்த நற்செயலால், தீயில் இறங்கி இறந்து மறுபிறவி எடுத்தால் பார்ப்பனராக பிறப்பாய் பிறகு உள்ளே வா என்கிறான் சிவன்.
காரணம், நந்தன் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்தவன். இதே தில்லை அம்பலவாணன் என்று கூறப்படும் சிவன் ஒரு பார்ப்பனச் சிறுவனுக்காக கோவிலை விட்டு வெளியே வந்தானாம்.
இதோ அந்த கதை
கும்பகோணம் – சீர்காழி – சிதம்பரம் வழியில் உள்ள ஊர் ஆற்றூர். அதனை தாண்டி நந்தனார் பிறந்த ஆதனூர் உள்ளது. ஆற்றூரில் அமைந்துள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயில் தலபுராணம் என்று சொல்லப்படும் கட்டுக்கதை இதோ
ஆற்றூரில் வாழ்ந்த சுகேது என்ற பார்ப்பனனின் மகன் சங்கரன் நாள்தோறும் தில்லைக்கு சென்று சிவனின் நடனத்தை கண்டு வருவது வழக்கம். ஒரு நாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடவே மிகுந்த சிரமத்திற்கு நடுவே தில்லையை சென்றடைந்தான். ஏனப்பா இப்படி வெள்ளத்தை உருவாக்கி என்னை தில்லைக்கு வர விடாமல் செய்கிறாய் என அழுது புரண்டான். சங்கரன் நாள்தோறும் தில்லைக்கு வருவதில் உள்ள சிரமத்தை உணர்ந்த நடராஜர், ஒரு நாள் சங்கரனின் கனவில் தோன்றி ‘கவலையை விடும். ஆற்றூரிலேயே எமது திருநடனம் காணலாம்’ என்று சொல்ல பரவசமடைந்த சங்கரன் ஆற்றூருக்கு திரும்பினான்.
நாள்தோறும் சங்கரனுக்காக நடராஜர் தில்லையிலிருந்து நந்தனார் பிறந்த ஆதனூர் வழியாக ஆற்றூருக்கு வந்து பார்ப்பனச் சிறுவனுக்கு முன்பு அடவுகட்டி ஆடினார்
அந்தணனின் மகன் தில்லைக்கு வருவதில் சிரமத்தை உணர்ந்த சிவன் அவன் வாழும் ஊருக்கு தானே வரும் போது, நந்தனாருக்காக ஏன் கோயிலுக்கு வெளியே வராமல்
நந்தியை விலக சொல்ல வேண்டும்?
நந்தனார் தில்லைக்கு வருவதில் உள்ள சிரமத்தை உணர்ந்த சிவன் ஏன் தில்லையிலிருந்து ஆதனூருக்கு செல்லவில்லை?
ஆதனூருக்கும், ஆற்றூருக்கும் இடையே சில கி.மீ. தான் தொலைவு. மேலும் ஆதனூரை தாண்டித்தான் ஆற்றூருக்கே செல்ல முடியும் என்கிற போது நந்தனாருக்காக ஏன் சிவன் ஆதனூர் செல்லவில்லை? தில்லையை சுற்றிச் சுற்றி நந்தனார் வந்த போது தில்லையின் எல்லைக்கே ஏன் சிவன் வரவில்லை?
நந்தனாரை தீக்குளிக்க வைத்தது ஏன்?
திருப்புன்கூர் நந்தியை விலக சொல்வதற்கு பதிலாக பார்ப்பனச் சிறுவன் சங்கரனுக்காக பல கி.மீ. நடந்த கால்கள் கோயிலுக்கு வெளியே வருவதில் என்ன சிக்கல்? ஆற்றூருக்குச் சென்ற சிவன் ஆதனூருக்குச் செல்ல முடியாதா – முடியாது. காரணம், நந்தன் ஆதிதிராவிடர் சங்கரன் பார்ப்பனர்
சிவன் கூட தீண்டாமைத் தீட்டு பார்த்திருக்கிறான்.