வி.சி.வில்வம்
வாரம்தோறும் ஒரு மகளிர் குறித்து, விடுதலை ஞாயிறு மலரில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சிவகங்கை அருகே குக்கிராமத்தில் பிறந்து, பெரியார் கொள்கையை ஏற்று, சுயதொழில்கள் பல செய்து, இயக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, துணிவும், தெளிவும் கொண்டு இன்று சென்னையில் சுயதொழில் புரியும் ஒரு மகளிரைத் தான் சந்திக்க இருக்கிறோம்!
அம்மா வணக்கம்! சென்னையில் சுயமாகத் தொழில் செய்வதாக அறிந்தோமே?
ஆமாம்! சென்னை அண்ணா நகரில் “வைபவ் பிரைடல் ஸ்டுடியோ” எனும் பெயரில் பெண்களுக்கான ஆடைகள் தைக்கும் நிறுவனத்தை 6 மாதமாக நடத்தி வருகிறேன். நல்ல வரவேற்பு இருக்கிறது. இயக்க மகளிர் பெரும் ஆதரவைத் தருகின்றனர். நேர்த்தியாகச் செய்வதில் நானும் பெரு விருப்பமாய் இருப்பேன். எனது இணையர் சுப்பையா அவர்கள் மறைவிற்குப் பிறகு, பல்வேறு நிலைகளைக் கடந்து, இன்று தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தொழில் செய்யும் அளவிற்கு வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.
தங்களின் சொந்த ஊர் எது?
சிவகங்கை அருகே கீழப்பூங்குடி எனது ஊர். இணையர் பெயர் சுப்பையா. எனது பெயர் மணிமேகலை. தற்போது வயது 64. இணையர் மின் வாரியத்தில் பணி செய்தவர். தொடக்கத்தில் அவர் திமுகவில் இருந்தார். மேலூரில் பணியாற்றிய போது முதன்மைப் பொறியாளர்
கும.சுப்பிரமணியன் அவர்கள் மூலம் பெரியார் கொள்கைகளின் அறிமுகம் பெற்றார். பின்னர் அதே துறையில் பணியாற்றிய ஈரோட்டுச் செல்வன் மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகே பெரியார் கொள்கையை நாங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றோம். இணையர் மதுரையில் பணியாற்றிய போது, தல்லாகுளம் பெரியார் மாளிகை சென்று ‘உண்மை’ இதழை வாங்கி வந்து படித்துக் காட்டுவார்.
தங்களின் இயக்க நடவடிக்கைகள் எப்படி இருந்தன?
பணி நிமித்தம் பல்வேறு ஊர்களுக்குப் பயணப்பட்டாலும், 1992 இல் சிவகங்கை வந்தோம். எங்களுக்கான இல்லத்தைக் கட்டினோம். சடங்குகள் இல்லாமல் புதிய இல்லத் திறப்பு விழாவை நடத்தினோம். அப்போதைய சிவகங்கை மாவட்டத் தலைவராக இருந்த அய்யா சண்முகநாதன் அவர்கள் தலைமையில், வழக்குரைஞர் இன்பலாதன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்து இயக்கப் பணிகளைச் செய்யத் தொடங்கினோம். அம்மா இராமலட்சுமி அவர்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள்.
பெரியார், மணியம்மையாரைச் சந்தித்த நினைவு இருக்கிறதா?
நன்றாக இருக்கிறது. இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும். 1970ஆம் ஆண்டு சிவகங்கை பயணியர் விடுதியில் முதன்முதலில் பார்த்தேன். அதற்கு எதிரில்தான் எங்கள் வீடும் இருந்தது. பெரியார் அவர்கள் கூட்டங்களுக்கு வந்தால் அங்குதான் தங்குவார்கள். அப்போது காப்பகக் குழந்தைகளையும் அழைத்து வருவார்கள். அவர்களுடன் பழகி, எங்கள் இல்லத்திற்கும் அழைத்துச் செல்வோம். அப்போது எனக்கு வயது 10. அது ஒரு பசுமையான நினைவு! அங்குதான் மணியம்மையார் அவர்களைச் சந்தித்துள்ளேன்.
தங்கள் திருமணம் குறித்துக் கூறுங்கள்?
எங்களுக்கு 1977இல் திருமணம் நடைபெற்றது. உள்ளூர் தோழர்கள் அளவிலே நடந்தது. திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் வரையிலும் தாலி அணிந்திருந்தேன். ஒருநாள் திடீரென காரைக்குடிக்குச் சென்று, நகைக்கடையில் தாலியை அகற்றிவிட்டு வந்தேன். பணி முடித்து வந்த இணையர், செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். அகற்றப்பட்ட தாலியை விற்று பயனுள்ள வகையில் பயன்படுத்த எண்ணி, அதுசமயம் அறிவிக்கப்பட்ட திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ. 25 ஆயிரம் நன்கொடை வழங்கினோம்.
உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?
மகள் பெயர் கீதப்பிரியா. பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் “சிவில்” படிப்பு முடித்து, தமிழ்நாடு தேர்வாணையத்தில் தேர்வு எழுதி, தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறையில் உதவி கோட்டப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மருமகன் இரவிச்சந்திரன் அவர்களும் சிவில் இன்ஜினியர். முதல் நிலை ஒப்பந்தக்காரராக இருக்கிறார். தஞ்சையில் இயக்கத் தோழர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மகன் அருண்குமார் மின்பொறியாளராகப் இருக்கிறார். மருமகள் லோகநாயகி அவர்கள் மருத்துவராகப் பணிபுரிகிறார்.
மகளைப் பார்க்கப் போகும் போது, தஞ்சையில் ஆசிரியர் இருந்தால் அவர்களையும் சந்தித்து வருவேன். சில நேரம் தொழில் நுட்பக் கல்லூரியில் இணைந்து சாப்பிடும் வாய்ப்பை ஆசிரியர் தருவார்கள். இன்னும் சொன்னால் மகள் திருமணத்தின் போது தேவையான ஆலோசனைகள் கூறி, உதவிகள் செய்ததோடு, அந்தத் திருமணத்தையும் நடத்தி வைத்தவரே எங்கள் குடும்பத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான்!.
இயக்கத்தில் தாங்கள் வகித்த பொறுப்புகள் என்ன?
30 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆசிரியர் அவர்கள் என்னைப் பொதுக்குழு உறுப்பினராக அறிவித்தார்கள். தவிர சிவகங்கை மாவட்ட மகளிரணி தலைவராகவும் இருக்கிறேன். இயக்கப் பணி என வருகிற போது நானும் எனது இணையரும் உற்சாகமாகப் பணியாற்றுவோம். சிவகங்கையில் கிராமப் பிரச்சாரம் நடத்த முடிவெடுத்த போது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.
அப்போது தோழர்கள் பலரும் எங்கள் இல்லத்தில் தங்கி பிரச்சாரங்களை மேற்கொண்டனர். திருமகள், பார்வதி, பிறைநுதல் செல்வி உள்ளிட்ட பலரும் தங்கியுள்ளனர். அந்த நல்வாய்ப்பை நாங்கள் பெற்றோம்.
இயக்கப் போராட்டங்களில் தங்களின் பங்களிப்புகள் என்ன?
சிவகங்கை தவிர இராமநாதபுரம், மதுரை, காரைக்குடி உள்ளிட்ட அருகாமையில் நடக்கும் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன். இணையர் அரசுப் பணி என்பதால், நான் மட்டும் சென்று வருவேன். மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்ற மனுதர்ம எரிப்புப் போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினையில் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம், விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமம் என்று கூறிய சங்கராச்சாரியாரைக் கண்டித்து காஞ்சி சங்கரமடம் முன் நடந்த ஆர்ப்பாட்டம், இராமேஸ்வரம் தொடங்கி மதுரை வரை 5 நாட்கள் நடந்த விழிப்புணர்வு வெளிச்சக் கூட்டங்கள், தவிர மாநில மாநாடுகள் உள்ளிட்ட பலவற்றிலும் பங்கேற்றுள்ளேன். இயக்கக் கொள்கையில் இணையரும், நானும் போட்டியாளர்களாக இருப்போம்.
இணையர் சுப்பையா அவர்களின்
நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
2022ஆம் ஆண்டு ஜனவரியில் இணையர் மறைந்து விட்டார்கள். பின்னர் மார்ச் மாதத்தில் சிவகங்கையில் மண்டபம் பிடித்து முதலாமாண்டு நினைவு நாள் நடத்தினோம். சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, புதுக் கோட்டை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத் தோழர்கள் ஏராளம் பங்கு பெற்றனர். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார். ஆசிரியர் அவர்கள் காணொலி வாயிலாக நினைவுரை ஆற்றினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு சுமார் 3 இலட்சம் செலவழித்து, கொள்கைக் கூட்டமாக நடத்தினோம். பெரியார் உலகத்திற்கு ரூ 25 ஆயிரம் நன்கொடை வழங்கினோம்.
பொதுவாக வீட்டிற்கு இயக்கத் தோழர்கள் வந்தால் திருவிழாவாக எண்ணி மகிழ்வோம். என்னென்ன உணவுகள் செய்யலாம் என இணையர் முதல் நாளே பட்டியல் போடத் தொடங்கிவிடுவார். பெரும்பாலான தோழர்கள் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளனர். அது இன்றளவும் எங்களுக்குப் பெருமைதான்! எனது இணையர் சுப்பையா அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில, மாவட்டப் பொறுப் புகளில் இருந்தவர். எங்கள் குடும்பம் இந்தளவிற்குச் சிறப்பாக இருப் பதற்கு, பெரியாரின் கொள்கைகளே காரணம் என்பதை எனது உறவினர்கள், நண்பர்களிடம் அடிக்கடி கூறுவேன்.
தனியாக நிகழ்ச்சி நடத்திய அனுபவம் உண்டா?
ஆமாம் உண்டு! அந்த வாய்ப்பையும் ஆசிரியர் அவர்கள்தான் எனக்கு வழங்கினார்கள். அதுசமயம் நான் சென்னை வந்துவிட்டேன். இருந்தாலும் சிவகங்கையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்கிற நிலையில், எனது இணையர் சுப்பையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவையும் இணைத்து ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தேன். பெரியளவிலான அந்த நிகழ்ச்சி ஆசிரியர் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூட்டம் நடத்தச் சொன்னால், மணிமேகலை மாநாடே நடத்திவிட்டார் என்றார்கள். இந்தக் கொள்கை தான் நம்மை உயர்த்தும் வாழ்க்கை நெறி என்கிற போது, தலைவர் எது சொன்னாலும் செய்வதற்கு நான் தயாராய் இருப்பேன். அந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளிலும் பெரியார் உலகத்திற்கு ரூ 25 ஆயிரம் நன்கொடை வழங்கினோம். இதுவரை 4 தவணைகளாக ரூ 25 ஆயிரம் வழங்கியுள்ளோம். எங்கள் பிள்ளைகளும் இதையே விரும்புகிறார்கள். அப்பா கொள்கை வழியே இறுதிவரை நீடிக்க வேண்டும் என்பதே பிள்ளைகளின் விருப்பமும்!
சிவகங்கையில் பிறந்து வளர்ந்து, 64 வயதிற்கு மேலான சென்னை வாழ்க்கை எப்படி இருக்கிறது?
இணையர் அரசுப் பணியில் இருந்தாலும், நானும் ஏதாவது தொழில் செய்து கொண்டே இருப்பேன். பெண்களுக்குச் சுய வருமானம் என்பது மிக முக்கியம். சிவகங்கையில் இருந்தாலும் பல்வேறு தொழில் முயற்சிகளில் நான் ஈடுபட்டுள்ளேன். இப்படியான நிலையில் இணையர் மறைவிற்குப் பிறகு பேரன், பேத்தியின் கல்வி நிமித்தம் சென்னை வந்தேன். வடபழனியில் தங்கியிருக்கும் சூழலில், பகல் முழுக்க ஏன் “சும்மா” இருக்க வேண்டும் என யோசித்தே, அண்ணா நகர் கிழக்கில் ஒரு கடையைத் தொடங்கினேன். அதுவும் சிறப்பாக இயங்கி வருகிறது. எதுவுமே செய்யாமல் இருப்பது மனதிற்கும், உடலிற்கும் சோர்வை ஏற்படுத்தும். இந்த இயக்கமும், கொள்கையும் தந்த நம்பிக்கைதான், இந்தளவு வாழ்க்கையைத் திட்டமிட உதவுகிறது.
பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது சென்று வருவேன். நான் சுயமாகத் தொழில் தொடங்கியதை, ஆசிரியர் அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியோடு கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னார்கள். சிவ கங்கையில் இருந்து சென்னை வந்து, அதுவும் தற்காலிகமாக வசிக்கும் நிலையில், தொழில் தொடங்கியதை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் வியப்போடு பார்த்து பாராட்டுகின்றனர்.
பல ஆண்டுகளாய் ஆசிரியரை அறிவீர்கள். அவர்கள் குறித்துத் தங்கள்
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
பெரியாரின் நம்பிக்கைக்குரியவர் நமது ஆசிரியர் அவர்கள்! பெரியார் கொள்கைகளைப் பறைசாற்றி, பாரெங்கும் எடுத்துச் செல்லும் பணிக்காக ஓய்வறியாது உழைப்பவர். அனைவருடனும் பண்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர்கள். அன்பானவர், நேர்மையானவர். சிறந்த பேச்சாளர், அரங்கத்தில் ஆதாரத்தோடு கருத்துகளை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். இயக்கச் செயல்பாடுகள் இளைஞர்களிடம் தொடர வேண்டும் எனும் அடிப்படையில், இளையவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, அவர்களை வழிநடத்திச் செல்பவர். கொள்கை எந்த அளவிற்குப் பலமோ, அதேபோல ஆசிரியர் அவர்களும் எங்களுக்குப் பலம்; எங்களின் நம்பிக்கையும் கூட!”, எனத் தம் உறுதியைப் பகிர்ந்து கொண்டார் மணிமேகலை!