ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு
மதுரை, ஆக.30 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட காலதாமதம் ஆவதற்கு கரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் கிளை அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்க கடந்த 2019-இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மதுரையுடன் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் மதுரையில் இன்னும் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி பாஸ்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு; நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கவுரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தாமதம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
அதில், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கட்டுமான பணிகள் எப்பொழுது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? ,”என்று ஒன்றிய அரசிடம் வினவினர்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசு, கரோனா தொற்று காலத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது; 2025க்குள் பணிகள் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,” கரோனோ 2022ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது; அதனை காரணம் காட்டாதீர்கள் என தெரிவித்து, தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப். 24-க்கு ஒத்திவைத்தனர்