ஆர்.எஸ்.எஸ். இதழான ‘விஜயபாரதம்‘ இந்த வாரத்தில் (30.8.2024) ‘‘ராவணர்களும், துரியோ தணர்களும் திமிராகத் திரியவிடலாமா?‘‘ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.
இராவணனை நாம் பார்க்கும் பார்வைக்கும், பார்ப்பனர்களின் பார்வைக்கும் வேறுபாடு உண்டு. இராவணன் சிவ பக்தன் என்று சொல்லுகி றார்கள் – வட மாநிலங்களில் இராவணனுக்குக் கோவில் கள் கூட இருக்கின்றன. அப்படிப்பட்டவன் சீதை யிடம் தவறாக நடந்து கொண்டான் என்று சொல்லு வது… எங்கோ இடிக்கிறதே!
‘‘பாலியல் பலாத்காரம் என்ற பாவச் செயல் (‘‘குற்றச் செயல்’’ அல்ல) நடந்தால் பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் கண்டனக் குரல் எழுப்பி, கதறி கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கின்றன. ஆனால், அந்த பாவச் செயல் செய்தவன் தண்டனைக்கு உள்ளாகும்போது, அதை ஒண்ணரை வரியில் சொல்லிவிட்டு, ஓய்ந்து போய்விடுகின்றன. அது மாறவேண்டும். பாவச் செயல் செய்கிறவன் என்ன கதி ஆகிறான் என்பதை ஊரறிய தண்டோரா போட்டுச் சொல்லவேண்டும். அப்போதுதான் பாவம் செய்ய நினைக்கிறவன் எவனும் பயப்படுவான்’’ என்று தலையங்கம் தீட்டு கிறது- ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்!’
சரி, எந்தப் பாவம் செய்தாலும் அதற்குப் பிராயச்சித்தம் உண்டு என்று வைத்திருக்கிறதே இந்து மதம்; அப்படி இருக்கும்போது, பாவம் செய்ய எவன் பயப்படுவான்?
திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்தப் படலம் – ‘‘அன்னையைப் புணர்ந்து…’’ என்று தொடங்கும் பாடல் என்ன சொல்லுகிறது?
தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன்ற பாத கனின் பாவம் மதுரையம்பதி தீர்த்தத்தில் முழுக்குப் போட்டதால் தீர்ந்தது என்று எழுதி வைத்துவிட்டு, ‘விஜய பாரதங்கள்’ பாவம்பற்றிப் பேசலாமா?
மனுதர்மம்பற்றி எழுச்சித் தமிழர் திருமாவளவன் உண்மையைக் கூறினார் என்றதும், இந்தக் கூட்டம் தாண்டிக் குதிக்கவில்லையா?
மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 19 என்ன கூறு கிறது?
‘‘மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள்’’ என்று சொல்லவில்லையா?
வேலைக்குப் போகும் பெண்கள் பெரும்பாலும் ஒழுக்கக்கேடானவர்கள் என்று சொன்னவர் இவர்களின் லோகக்குரு சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இல்லையா? எழுத்தாளர் வாஸந்தி வெளுத்து வாங்கினாரே!
இந்த சங்கராச்சாரியாரின் யோக்கியதைதான் என்ன? எழுத்தாளர் அனுராதா ரமணன் என்ன சொன்னார்?
‘‘காஞ்சி மடத்துக்குச் சென்ற என்னைக் கையைப் பிடித்து இழுத்தார் ஜெயேந்திரர்’’ என்று கண்ணீரும், கம்பலையுடன் அவர் அளித்த பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதே! 30 சதவிகிதப் பெண்கள்தான் பெண்மை உடையவர்கள் என்று ‘துக்ளக்’ குருமூர்த்தி கூறி, வாங்கிக் கட்டிக் கொள்ளவி்ல்லையா?
பெண்கள்மீதான பாலியல் வன்மம்பற்றிப் பேச ஆர்.எஸ்.எஸ்., ‘விஜய பாரத’த்திற்குத் தகுதி உண்டா?
– மயிலாடன்