இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே!
ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு ஏற்காததால், தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்காமல் முடக்குவது தி.மு.க. அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்தவேண்டும் என்ற உள்நோக்கம்தானே – இதனைக் கண்டித்து கழக மாவட்டங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய (தேசிய ஜனநாயக – இன்றைய கூட்டணி) அரசு சட்டப்படி தரவேண்டிய கல்வித் தவணை நிதி 367 கோடி ரூபாயைத் தராமல் – வேண்டுமென்றே நிலுவையில் வைத்து இழுத்தடிப்பது, எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிய கல்வி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும், இப்படி பாராமுகமாகவும், அலட்சியமாகவும் இருப்பது, வஞ்சம் தீர்க்கும் வன்ம அரசியல் அல்லாமல் வேறு என்ன?
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது!
தேசியக் கல்விக் கொள்கை (NEP) என்ற பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு – தி.மு.க. அரசு எடுத்துக்காட்டான முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘திராவிட மாடல்’ அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கேற்ப செயல்படுத்த ஒப்புதல் தராததே இந்த நிதித் தவணையைத் தராமல் காலதாமதம் செய்யும் அரசியல் அவலத்திற்கு மூல காரணம் – மறைமுகக் காரணம் என்றும் அவதா னிக்கப்படுகிறது அரசியல் வட்டாரங்களில்!
இந்தியா ஒரு கூட்டாட்சி அரசு – பா.ஜ.க. வாய்மொழி வடிவில் வாய்ப்பறைக் கொட்டுவது ‘‘கூட்டுறவுக் கூட்டாட்சி’’ – ‘‘Co-operative Federalism’’ என்பதாகும்.
அதன் லட்சணம், யோக்கியதை இதுதானா?
ஆர்.எஸ்.எஸ். வகுத்த இந்த ‘‘தேசிய கல்வித் திட்டம்’’ என்பது சமூகநீதிக்கும், பெண்களுக்கான கல்வி பரப்புதலுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51–ஏ(எச்) என்ற அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பதற்கும் முற்றிலும் முரணான ஒன்று என்பதால், சமதர்ம, சம வாய்ப்பினை வற்புறுத்தும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் கொள்கைத் திட்ட நடை முறைக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறது, ஏற்க மறுக்கிறது.
அதிலென்ன தவறு இருக்க முடியும்?
கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலின்கீழ் மட்டுமே இருந்த ஒன்று.
நெருக்கடி நிலையைக் குறைகூறும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு – கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வராதது ஏன்?
அன்றைய நெருக்கடி காலம்பற்றி இன்று வாய்க்கிழி யப் பேசும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்கீழ் நெருக்கடி காலத்தில் ஏற்படுத்தப்பட்டவற்றையெல்லாம் மாற்றினார்களே, அப்போது கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்ற எந்த முயற்சியும் செய்யாமல், தங்களது கலாச்சாரப் படையெடுப்புக்கு ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு போன்றவற்றிற்கு வசதியாக இருக்கட்டும் என்று கருதியே, இதனை மட்டும் மாற்றாமல் வைத்திருந்தனர்.
இதுகுறித்து கல்வி அறிஞர்கள் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக பாதி விசாரணையோடு நின்று உள்ளது.
அப்படி இருந்தாலும்கூட, கல்வி என்பது இன்றும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (Concurrent List) இடம்பெற்றுள்ளது!
அதன்படி மாநில அரசுக்கு அது தனக்கேற்ப கல்வித் திட்டத்தை – மாநில சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டே – அதன் கொள்கைத் தத்துவங்களுக்கு முரண் இல்லாத ஒரு கல்வித் திட்டத்தையே பின்பற்ற முழு உரிமை உண்டே!
அதற்காக இப்படி நமது உரிமைப்படித் தரவேண்டிய பணத்தை நிறுத்திக் கொண்டு, பழைய ஈட்டிக்காரர்களைப் போன்று அடாவடித்தனம் செய்வது எவ்வகையில் நியாயமாகும்?
நிதி நெருக்கடியைத் தந்து தி.மு.க. ஆட்சிக்கு
நெருக்கடி கொடுக்கும் திட்டமா?
நிதி நெருக்கடியைத் தந்தால் – தேர்தல் வாக்குறுதி களை செய்யாமல் தடுத்து, தி.மு.க.மீது தமிழ் மக்களுக்கு – குறிப்பாக வாக்காளர்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்று ஒரு தப்புக் கணக்குப் போட்டுத்தானே இந்த மாதிரி நிதி மறுப்பு வியூகங்களின்மூலம் வினையாற்றுகிறது!
அதையும் தாண்டி நிதி ஆலோசனைப் பெற்று Fiscal Management – சிறப்பாக முதலமைச்சர் செய்து, மக்களுக்குச் சொன்னதைத் தாண்டி, சொல்லாததையும் செய்து வரலாறு படைத்து வான்புகழ் கொள்வது – இந்த வயிற்றெரிச்சல்காரர்களால் செரிமானம் செய்ய முடியாதபடி இப்படி ‘கீழறுப்பு‘ வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
இதனை மக்களுக்கு விளக்கவும், இந்த அற்பத்தன அடாவடித்தனத்தைக் கண்டிக்கவும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் வருகிற 3.9.2024 அன்று சென்னை மாவட்டத் தலைநகர் மற்றும் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட அறிவிப்புச் செய்துள்ளோம்!
சென்னை மற்றும் கழக மாவட்டங்களில்
கண்டன ஆர்ப்பாட்டம்!
உடனடியாக இதனை வெற்றிகரமாக – மக்களிடம் அநீதியின் கொடுமையை விளக்கி, காவிகளின் ஓரவஞ்சனையை அம்பலப்படுத்த – அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக நடத்திடவேண்டும் என்பது அவசர அவசியமாகும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
29.8.2024
