உடலில் காயம்பட்ட இடத்தில் கட்டுப் (பேண்டேஜ்) போட்டு காயம் ஆற்றுவோம். சில ஆழமான, எளிதாக குணம் ஆகாத காயங்களுக்கு சாதாரண பேண்டேஜ் போதாது. அவற்றுக்காகவே மின் அலைகளைப் பயன்படுத்தும் புது பேண்டேஜ் அறிமுகமாகி உள்ளது. நீர் பட்டவுடன் இது செயல்படத் துவங்கி காயம் ஆற்றும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் 3 டி பிரின்டிங் முறையில் பள்ளி வகுப்பறைகளைக் கட்டி வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இதில் கட்டுமானப் பொருளாக கான்கிரீட்டிற்குப் பதிலாக கட்டுமான இடத்திற்கு அருகிலே கிடைக்கும் மண் பயன்பட்டுள்ளது.
நடுத்தர வயதுடைய 172 பேரை வைத்து தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், மெக்னீசியம் சத்து குறைவாக உள்ளவர்களுக்கே டி.என்.ஏ. கோளாறுகள் அதிகமாக ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பீன்ஸ், பச்சை காய்கறிகள், விதைகள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் ஆய்1வாளர்கள்.
மனிதர்களுடன் டென்னிஸ் விளையாடும் ரோபோவை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. 29 போட்டிகளில் 13 வீரர்களை ரோபோ வீழ்த்தியது. இன்னும் சில மாற்றங்கள் செய்தால், இது மனிதர்களையே மிஞ்சக் கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
புரத மூலக்குறுகள் பொதுவாக மிகச் சில நானோமீட்டர் அளவே இருக்கும். ஆனால், முதல்முறையாக 1,250 நானோ மீட்டர் அளவு கொண்ட புரதத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கப் பாசி எனும் ஒருவகை பாசியில் காணப்படும் இந்தப் புரதத்திற்கு PKZILLA-1 என்று பெயரிட்டுள்ளனர்.