சென்னை, ஆக.29 சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் வட்டத்தை பிரித்து, புதிய கொளத்தூர் வட்டத்தை உருவாக்கி, புதிய பணியிடங்கள் ஏற்படுத்த ஒப்புதல் அளித்து, நிதியும் ஒதுக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிக்கை விவரம்: தமிழ்நாடு அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எழுதிய கடிதத்தில், சென்னை மாவட்டம், ஒன்றிய வருவாய் கோட்டத்தில் உள்ள அயனாவரம் வரு வாய் வட்டத்தை சீரமைத்து கொளத்தூர் எனும் புதிய வருவாய் வட்டம் (தாலுகா) உருவாக்குவது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியரின் கருத்துரு பரிசீலிக்கப்பட்டது.
அதில், ‘அயனாவரம் வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய ஏதுவாக, புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்றும், அயனாவரம் வட்டத்தில் உள்ள 8 வருவாய் கிராமங்களில் 5 கிராமங்களை அயனாவரம் வட்டத்திலேயே தொடர்ந்து இருத்தி வைத்து, மீதமுள்ள 3 வருவாய் கிராமங்களில் கொளத்தூர் கிராமத்தை கொண்டு கொளத்தூர் குறுவட்டம், சிறுவள்ளூர், பெரவள்ளூர் ஆகிய 2 வருவாய் கிராமங்களை கொண்டு பெரவள்ளூர் குறுவட்டத்தையும் உள் ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம்.
ேமலும், புதிய வருவாய் வட்டத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய 42 பணி யிடங்களில், அயனாவரம் வட்டத்தில் உள்ள மிகை பணியிடங்கள் 7 மற்றும் புதிதாக 35 பணியிடங்கள் உருவாக்கலாம், ஓர் ஓட்டுநர் பணியிட மும் தோற்றுவிக்கலாம்’ என்றும் தெரிவித் துள்ளார். எனவே, அயனாவரம் வருவாய் வட்டத்தை மறுசீரமைத்து கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம்’ என்று தனது கடிதத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தார்.
மாவட்ட ஆட்சியர் கருத்துரு, வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதம் ஆகியவற்றை கவனமாக பரிசீலித்த தமிழ்நாடு அரசு, கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. மேலும், இந்த வருவாய் வட்டத்துக்கு தேவைப்படும் 42 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. புதிய வருவாய் வட்டத்துக்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவுக்கு ரூ.2.91 கோடியும், தொடரா செலவினம், ரூ.32.22 லட்சமும் ஒதுக்கி உத்தரவிடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்டட அமைப்பியல் படிப்புக்கான கலந்தாய்வு
656 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
சென்னை, ஆக.29 பிஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் மொத்தம் 656 இடங்கள் நிரம்பியுள்ளன. இந்தாண்டு 682 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,338 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு சேர்க்கைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,553 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து சிறப்புப் பிரிவு மற்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 1,195 மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் 656 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு தற்போது சேர்க்கை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 49 பேர் அரசுப் பள்ளி மாணவர்களாவர். இதன் விவரங்களை /barch.tneaonline.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதற்கிடையே இந்தாண்டு பிஆர்க் படிப்பில் 656 இடங்களே நிரம்பியுள்ளன. இன்னும் 682 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. தொடர்ந்து எஸ்சிஏ பிரிவு காலியிடங்களுக்கான கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 30) இணைய வழியில் நடைபெற உள்ளது. அதன் முடிவில் காலியிடங்களின் இறுதி நிலவரம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தெரியவரும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.