சிறீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்த செய்தி சில நாள்களுக்கு முன் வெளியானது. சுக்கிரன் ஸ்தலமான சிறீரங்கத்தின் கோபுர வாசல் இடிந்து விழுந்ததால் என்ன ஆகுமோ என்று பக்தர்கள் அச்ச மடைந்துள்ளனராம்!
‘நாட்டுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது. அதன் அறிகுறி தான் இது – அபசகுனம்… ஆபத்து ஆபத்து’ என்று சொல்லி, மீண்டும் இடிந்து விழுந்த கோபுரச் சுவரை எடுத்துக் கட்டுவார்கள். தோஷம் கழிப்பார்கள் – யாகங்கள் செய்வார்கள் – பக்தர்களும் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டுவார்கள்.
108 வைணவ ஸ்தலங்களுள் மிக முக்கியமானது சிறீரங்கம் கோயில், உலக அளவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோயில் என்று பிரஸ்தாபிப்பார்கள் – ஆழ்வார்கள் அனைவரும் மங்களா சாசனம் என்று ஆர்ப்பரிக்கிறார்கள் – இக்கோயில் தான் சிறீரங்கம்.
சிறீவில்லிபுத்தூர் என்ற ஊரில் பிறந்த கோதை என்று அழைக் கப்படும் ஆழ்வார்களின் ஒரே பெண்ணான ஆண்டாள் அரங்கனுள் அய்க்கியமான சிறப்பு இந்த சிறீரங்கம் கோயிலுக்கு உண்டு என்று ஊரெல்லாம் உபன்யாசம் செய்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இவ்வளவு சக்தி வாய்ந்த பெருமாள் குடி கொண்டிருக்கும் கோயில் கோபுரச் சுவர் இடிந்து விழுவானேன்?
அரங்கநாதன் சக்தி இவ்வளவுதானா என்று கேள்வி கேட்கும், சிந்திக்கும் புத்தி இல்லாமல் போன பரிதாபத்தை என்ன சொல்ல!
ஓ, பக்தி வந்தால் தான் புத்தி போய் விடுமே என்று தந்தை பெரியார் கூறியது பொய்த்துவிடக் கூடாதல்லவா?
1960-1962களில் இதே சிறீரங்கக் கோயில் தீ பற்றி எரியவில்லையா?
மூலவர் வெடித்து சிதறவில்லையா?
இது பற்றிய ஓர் ஆதாரப் பூர்வமான தகவல் இதோ :
மேனாள் சி.பி.அய். அதிகாரி ஏ.கே. ராஜகோபால் என்பவரின் சுயசரிதை நூலில் இருந்து, பற்றி எரிந்த சிறீ ரங்கநாதர் கோயில் குறித்து ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது. அவர் திருச்சி மாநகரில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் அவர் கூறுகிறார்.
“சிறீரங்கநாதர் ஆலயத்தில் தீ விபத்து விடியற்காலை 5 மணிக்கு நடந்தது. மூலவர் ரங்கநாதர் சிலை தீயில் முழுமையாக எரிந்து கொண்டு இருந்தது. காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் ஆகியோரை வைத்து மனித சங்கிலி அமைத்து ரங்கநாதன் சிலைமீது தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்பட்டது. நீண்ட காலமாக எண்ணெய் ஊற்றி தைலக்காப்பு செய்திருந்த காரணத்தால் ரங்கநாதன் சிலை முழுவதுமாக எரிந்த பின்புதான் தீ அணைந்தது. தீ விபத்துக்கு முன்பு இருந்ததை விட சிலையின் அளவில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது.
முகத்தில் கோடு போன்ற ஒரு அடையாளம் மட்டும் காணப்பட்டது. வேறு எந்த நாமம் போன்ற அடையாளமும் இல்லை” என்று உறுதி யாக கூறுகிறார். இந்த காவல்துறை அதிகாரியின் பொறுப்பில்தான் தீயணைப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன என்பது குறிப் பிடத்தக்கது.
2020 மார்ச் 10ஆம் தேதியும் இதே கோயில் தீ விபத்துக்கு ஆளாகவில்லையா?
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை கூறியதுண்டே!
மின் சக்தியா? கடவுள் சக்தியா? என்று சிந்திக்கும் திறன் இல்லாது போனது ஏன்?
‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்’ என்பதை ஒப்புக் கொள்வார்களா?
“பிரபஞ்சத்தின் எஜமானரான விஷ்ணுவை சந்தேகத்திற்கு இடமின்றி நான் வணங்குகிறேன். அவர் பெரிய பாம்புப் படுக்கையில் எப்போதும் அமைதியாக இருக்கிறார். அவரது தொப்புளிலிருந்து படைப்பு சக்தியில் தாமரை துளிர்க்கிறது. நிச்சயமாக அவர் பிரபஞ்சத்தின் பரம இறைவனாக இருக்கிறார். அவர் பிரபஞ்சம் முழுவதையும் ஆதரிப்பவராகவும், எங்கும் நிறைந்தவராகவும் இருக்கிறார். அவர் அழகான லட்சுமி உருவத்துடன் ஒளிரும் மேகங்களைப் போல இருண்டவராக இருக்கிறார். அவர் தாமரைக் கண்களை உடையவர். யோகிகள் தியானத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். அவர் சம்சார பயத்தை அழிப்பவர். எல்லா லோகங்களுக்கும் இறைவன்” என்று ஸ்தல புராணம் பாடுகிறது.
பூலோக வைகுண்டம் என்று இதற்குப் பெயராம்.
இவ்வளவு அற்புதங்களும், மகா சக்தியும் வாய்ந்த கோவில் களும் பற்றி எரிகின்றனவே, இடிந்து விழுகின்றனவே – ஏன்?
இதற்கு பாமர மக்களாக இருக்கட்டும் – ஜீயர்களாகட்டும், சங்கராச்சாரியார்களாகட்டும் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்!
60 ஆண்டுகளுக்கு முன் சபரிமலை அய்யப்பன் கோயில் பற்றி எரிந்து சாம்பலானது உண்டே!
1997 ஜூன் ஏழாம் தேதி தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் தீ விபத்து நடக்கவில்லையா?
2018 பிப்ரவரி 3ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்படவில்லையா? இந்தக் கோயிலில் ஆண்டுக்கு பாதி நாள்கள் சடங்குகள் உற்சவங்கள் இத்தியாதி… இத்தியாதி…. நடைபெற்றுக் கொண்டு தானே இருக்கின்றன!
2022 அக்டோபர் 1 அன்று மதுரை கள்ளழகர் கோயில் தீ விபத்து… இன்னும் எத்தனை எத்தனையோ கோயில்களில் விபத்துக்கள் நடந்து மூல விக்கிரகங்களே புதுப்பிக்கப்பட்டதும் உண்டு.
இந்த இலட்சணத்தில் காவி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அயோத்தியில் ராமன் கோயிலை ஓர் அரசாங்கமே நேரில் தலையிட்டு கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி கட்டிக் கொண்டிருக்கிறது.
நெருப்புக்கு முன்னே நிற்க முடியாத கடவுள் – புயல் வெள்ளத்திற்கு முன்பு தாக்குப் பிடிக்க முடியாத கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பாராம், கேட்ட வரங்களை அள்ளிக் கொடுப்பாராம்! கேட்பவன் “கேணையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும்” என்பானாம் – அது போன்ற கதை அல்லவா இது!
கோயில்களில் தீப்பற்றி எரிந்தாலும், மூல விக்கிரகங்கள் தீயினால் வெடித்துச் சிதறினாலும் பரிகாரங்கள் என்று சொல்லி கோயிலை புதுப்பிப்பது – கட்டுவது – கும்பாபிஷேகம் செய்வது எல்லாம் பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டத் தானே! சிந்திப்பீர்!!