தஞ்சை, ஆக.27 பெரியார் பேசுகிறார் 90 ஆவது நிகழ்வு 17.08.2024 அன்று, தஞ்சாவூரில் உள்ள பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு எனும் தலைப்பில் தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் பேசினார்.
முதல் வகையான எதிர்ப்பு!
அவர் பேசும்போது, பெரியாருக்கு மற்ற கொள்கைகளை விட அதிகம் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொடுத்தது பெண்ணுரிமைச் சிந்தனைகள் தான். பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால் குடும்ப உறவுகள் பாதிக்கப்படும், நமக்கு அடிமையாக இருக்க மாட்டார்கள் என்கிற எண்ணம் ஆண்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இதனையொட்டியே பெரியார் – மணியம்மையார் திருமணத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த இருபெரும் தலைவர்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும், இன்னமும் கொச்சைப்படுத்த நினைக்கிறார்கள் என்றால் கொள்கையின் வலிமை அப்பேர்பட்டது! அதேநேரம் பெரியார் தெளிவாகச் சொன்னார். “எனது பெண்ணுரிமைக் கருத்துகளை நீங்கள் புரிந்து கொள்ள, அதன் கொள்கைகளை உங்கள் தாய், தங்கையரோடு பொருத்திப் பாருங்கள்”, என்றார். அப்படிப் பொருத்திப் பார்க்க சிந்தனை அவசியம். அதற்கு இவர்கள் இன்னும் பழகவில்லை.
சமூகத்தை மாற்றிய இயக்க மகளிர்!
அதேநேரம் பெரியாரின் பெண்ணுரி மைச் சிந்தனைகளை இவர்கள் ஏற்கா மல் போனாலும், நடைமுறையில் அதை அனுபவிப்பதில் இவர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். ஹிந்து மதம் சொன்ன எந்த ஒரு வழக்கத்தையும் தமிழ்நாட்டுப் பெண்கள் கடைப்பிடிப்பதில்லை. கல்வி, வேலைக்குச் செல்வது, உடைக் கட்டுப்பாடு, வெளி நாட்டுப் பயணங்கள், வாகனங்களை இயக்குதல், பல்துறை நிர்வாகங்கள், மறுமணம், சுதந்திர சிந்தனை, தனித்து வாழ்தல் என இவர்களது வாழ்க்கை விண்ணுலகம் நோக்கி சென்றுவிட்டது. இதையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, பயன்பெற்றுக் கொண்டு தான், அதற்குக் காரணமான பெரியாரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ள பகுத்தறிவுச் சிந்தனை மிக முக்கியம்.
இப்பேற்பட்ட பெரியார் வாழ்வில் தங்கை கண்ணம்மாள், இணையர் நாகம்மையார், மணியம்மையார் போன்றோ ரின் சமூகப் பங்களிப்புகளை இந்த நாடு அறியும். வரலாறும் தம் பக்கங்களில் குறித்து வைத்துள்ளது! அதேபோன்று பெரியார் கொள்கைகளை ஏற்று, திராவி டர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட ஆயிரமாயிரம் போராளிகள் இங்கே இருக்கிறார்கள். சுயமரியாதைச் சுடரொளிகள் எனும் நூலில் மறைந்த மகளிர் குறித்த ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை பல பகுதிகளாக வெளிவந்துள்ளன. ஹிந்தி எதிர்ப்புப் போரில் மகளிர் பங்கு எனும் நூல் கூட அண்மையில் வெளிவந்துள்ளது.
எங்களின் தாய் பெரியார்!
ஆக மக்கள் தொகையில் சரிசமமான பெண்கள் கொள்கையிலும், போராட்டத்தி லும் கூட சமமான பங்களிப்பையே வழங்கியுள்ளனர். அடிப்படையில் இருந்தே இதற்கு காரணமானவர் பெரியார்.
பெண்கள் குறித்து பெண்களே யோசிக்காத காலத்தில், உளவியல் பூர்வமா கச் சிந்தித்து மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி யவர் அவர்.
அதனால் தான் அந்தக் காலத்திலேயே “பெரியார்” எனும் பட்டத்தைப் பெண்கள் வழங்கினர். இன்றைய தலைமுறைப் பெண்களோ பெரியார் எங்கள் தந்தை மட்டுமல்ல; எங்கள் தாயும் அவர்தான் எனப் பூரிக்கிறார்கள். இப்படியான பெரியார் கொள்கைக்கு, திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கு மகளிரின் பங்கு எவ்வளவு என்பதை எடுத்துரைக்கும் வாய்ப்பாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது.
இயக்கத்தின் சாதனை மகளிர்!
பொதுவாக உண்மை, விடுதலை, ஞாயிறு மலரில் பெரியார் பெருந்தொண்டர்கள், அதாவது ஆண்களின் பேட்டி அதிகம் வந்துள்ளது. தனிச்சிறப்பாகப் பெண்களை மட்டும் நேர்காணல் செய்யலாமே எனும் போது அதற்கான வரவேற்புகள் சிறப்பாக இருந்தன. அதேநேரம் மகளிரிடம் பேசும் போது கொள்கைச் செய்திகளைக் குற்றால அருவியாய் கொட்டித் தீர்த்தார்கள். இரண்டு மணி நேரம் நேர்காணல் செய்தால் மட்டுமே விடுதலை ஞாயிறு மலரில் ஒரு பக்கம் வரும். அந்த வகையில் அனைவருமே இயக்க வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள். இன்னும் எடுக்கப்பட வேண்டிய மகளிரும் ஏராளம் உள்ளனர்.
இதில் மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டியது ஆசிரியர் அவர்களின் தொடர் அங்கீகாரம். மகளிர் பேட்டிகளை முழுமையாகப் படித்து, அவர்களைப் பார்க்கும் போது பாராட்டுவதும், அதனால் மகளிர் உற்சாகம் பெறுவதும் சிறப்பான ஒன்று. இதுவரை எடுக்கப்பட்ட 28 மகளிரில், அவர்களின் ஒரே ஒரு சிறப்பை மட்டும் எடுத்துச் சொன்னாலே, அதுவே பெரும் தொகுப்பாகும். ஒரே மாவட்டம், ஒரே ஊர் என்று இல்லாமல் பல இடங்களிலும் நடந்த பரந்துபட்ட சந்திப்பு இதுவாகும். இன்னும் சொன்னால் மாநகராட்சிப் பகுதிகள் தொடங்கி சிறு ஊராட்சிகள் வரை வசிக்கிறார்கள் நமது சாதனை மகளிர்!
தமிழ்நாடு முழுக்க மகளிர் சந்திப்புகள்!
அந்த வகையில் இதுவரை நேர்காணல் செய்யப்பட்ட மும்பை தொ.இரத்தினம், வேலூர் கலைமணி, இலால்குடி குழந்தை தெரசா, மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, காரைக்குடி ஜெயலெட்சுமி, சென்னை வெற்றிச்செல்வி, தருமபுரி நளின குமாரி, அமெரிக்கா சரோஜா, தஞ்சாவூர் கலைச்செல்வி, மதுரை ராக்கு தங்கம், கும்பகோணம் ஜெயமணி, போடி பேபி சாந்தா, கீழ்வேளூர் குருக்கத்தி கமலம், பூலாங்குடி ரெஜினாமேரி, அரியலூர் இந்திராகாந்தி, தஞ்சாவூர் வள்ளியம்மை, திருப்பத்தூர் கவிதா, தஞ்சாவூர் மலர்க்கொடி, நெடுவாக்கோட்டை ஜெயமணி, கோயம்புத்தூர் கலைச்செல்வி, திருவாரூர் மகேஸ்வரி, சிவகங்கை மலர்க்கண்ணி, மதுரை பாக்கியலட்சுமி, கோயம்புத்தூர் மலர்விழி, திருப்பத்தூர் கமலம்மாள், கன்னியாகுமரி கிருஷ்ணேசுவரி, தென்காசி அன்னபுஷ்பம், சென்னை இன்பக்கனி உள்ளிட்ட 28 மகளிரிடம் எண்ணற்ற செய்திகள் தொகுக்கப்பட்டன. எழுதப்பட வேண்டியவை இன்னும் ஏராளம் உள்ளன.
மனத் தெளிவும்; உள்ள உறுதியும்!
ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடு வது போல தோழர்கள் ஒவ்வொருவரிடம் இயக்கப் பங்களிப்புகள் உள்ளன. அந்த வகையில் நமது இயக்க மகளிர் சிறு நிகழ்ச்சி தொடங்கி மாநாடு வரை கருப்புடை அணிந்து வருகிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் உள்ள நடைமுறைகளையும் கவனிக்க வேண்டும். பொருளாதாரத் தேவைகளுக்காக அவர்கள் பணி செய்தல், வீட்டை நிர்வகித்தல், பிள்ளைகளைப் பராமரித்தல், இயல்பான பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகள், இயக்கத்தில் செயல்படுவதாலே வரக்கூடிய சில கேள்விகள் என அத்தனையையும் தாண்டித்தான் அவர்களது கொள்கை வாழ்க்கை நீடிக்கிறது.
இந்த நேர்காணலில் பெரிய படிப்பின்றி, வாய்ப்பு, வசதிகள் இன்றி, குக்கிராமத்தில் வாழும் மகளிரிடத்தும் நிறைய செயல்பாடுகள் உள்ளன. அவர்க ளின் உள்ள உறுதி, மனத்தெளிவு நம்மை வியப்பூட்டுவதோடு, மடங்கு நம்பிக்கையையும் நமக்கு அள்ளித் தருகிறது. அவர்களைப் போன்றோர் அச்சாணியாக இருந்து தான், அவர்களைப் போன்றோர் விமர்சனத்தைத் தாங்கிக் கொண்டு தான் இளம் தலைமுறைப் பெண்களை இந்தளவு உயரத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.
ஒப்பற்ற சுயமரியாதை!
ஆக ஒரு நாத்திக இயக்கத்தில் அன்னை மணியம்மையார் தலைவராக இருந்ததும், அதே நாத்திக இயக்கத்தில் ஆயிரமாயிரம் மகளிர் பணியாற்றி வருவது உலக சாதனை அல்லவா! பெருமைகளை விட, இடையூறுகளை அதிகம் சந்தித்து, எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைக்கிறார்கள் என்றால், அதுதான் உலகிலேயே மதிப்பற்ற அந்த “சுயமரியாதை!”. அந்த வார்த்தைக்கு ஈடுஇணை எங்கும் கிடையாது எனப் பெரியார் சொன்ன ஒன்றே இத்தனைக்கும் அடிப்படை காரணம்”, என வி.சி.வில்வம் பேசினார்.
பங்கேற்றோர்!
இந்த நிகழ்ச்சிக்கு த.வள்ளியம்மை தலைமை வகிக்க, ச.அஞ்சுகம் வரவேற்றார். அ.கலைச்செல்வி, தி.மலர்க்கொடி, க.தமிழ்ச்செல்வி, ஏ.பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாநக ராட்சி துணைமேயர், மருத்துவர் அஞ்சுகம் பூபதி தொடக்க உரையாற்றினார். ப.யாழினி நன்றி கூறினார். கூட்ட நிகழ்வுகளைப் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.அழகிரி, செயலாளர் பாவலர் பொன்னரசு, அமைப்பாளர் குழந்தை கவுதமன் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் தலைமைக் கழக ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மு.அய்ய னார், தெற்கு நத்தம் சித்தார்த்தன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், ஜெயமணி, தமிழ்ச்செல்வன், ஜெகதாரணி, பூவை.புலிகேசி, எழிலரசன், வெற்றிக்குமார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.