‘‘கூடலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரமே வயநாடு. அதனால் நிகழ்வு நடந்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் அறக்கட்டளையின் கூடலூர் நண்பர்கள், குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டார்கள். மறுநாள் காலை கோவையில் இருந்து 6 பேர் கொண்ட குழு கிளம்பியது. இறப்பு எண்ணிக்கை முதலில் 20, 30 என சொல்லி வந்த நிலையில், 200… 300 என தாண்டிய செய்தி எங்களை இருப்புக்கொள்ள விடவில்லை. அடுத்து 10 பேர் கொண்ட குழுவும் கோவையில் இருந்து கிளம்பினோம். எங்களைத் தொடர்ந்து 8 பேர் கொண்ட பெண்கள் குழுவும் வந்தனர்.
நான் பார்த்த மிகப்பெரிய நிலச்சரிவு இது. ஒரு மலையே பெயர்ந்து, அப்படியே சரிந்து, பெரிய பெரிய பாறாங்கற்களோடு உருண்டு, காட்டாற்றில் இணைந்து, சேறும் சகதியுமாக கீழ்நோக்கி வந்திருக்கிறது.
இதில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகள் கடுமையாய் பாதிக்கப்பட்டிருந்தன. நிலச்சரிவு நிகழ்ந்த குறிப்பிட்ட இடத்திற்கு இரண்டு குழுக்களாகப் பிரிந்து களத்தில் இறங்கினோம்.
நிகழ்வு நிகழ்ந்த இடத்தில் வசித்தவர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த பணியாளர்களின் குடும்பங்கள். 30% பெரிய வீடுகளைக் கொண்ட பணக்காரர்களும் அங்கு வசித்திருக்கிறார்கள். சுற்றுலாப் பகுதி என்பதால், விடுதிகளுடன் ஓட்டல்களும் இருந்திருக்கின்றன.
எங்கள் அறக்கட்டளை மூலம் எத்தனையோ உடல்களை நல்லடக்கம் செய்திருந்தாலும் இங்கு நாங்கள் பார்த்த காட்சிகள் முற்றிலும் வேறானது. உடல்கள் பாறைகளில் அடித்துக்கொண்டு வரப்பட்டு, நைந்து, சேற்றில் சிக்கி, உடல் உறுப்புகள் பெரும்பாலும் தனித்தனியாகக் கழன்றே வந்தன. தண்ணீரிலே உடல்கள் இருந்ததால் அழுகிய நிலையிலும், கை வைக்க முடியாமலும், அடையாளம் காண முடியாத நிலையிலும் இருந்தது. கூடவே ஆடு, மாடு, நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளும் சேற்றில் அடித்துக் கொண்டு வரப்பட்டன.
நாங்கள் உடல்களையும், உறுப்புகளையும் சேகரித்து மார்சுவரிக்கு (பிணவறை) அனுப்பும் வேலை களைத் தொடர்ந்து செய்து வந்தோம். நிகழ்வு நடந்த அன்றே 1300 முதல் 1500 பேர் உயிரோடு காப்பாற்றப் பட்டார்கள். உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களை இரண்டு மூன்று முகாம்களில் தங்க வைத்து, மீட்டுருவாக்கப் பணிகளும் அருகிலேயே நடந்து வருகிறது. எங்களின் பெண்கள் குழு அவர்களை முகாமில் சந்தித்தார்கள்.
ராணுவம் களத்திற்கு வந்ததுமே, வாகனங்கள் செல்வதற்கான பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடித்தார்கள். அதன் பிறகே தேவையான உபகரணங்கள், உணவுகள், மீட்ட உடல்களை கொண்டு வருவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றது. நாங்கள் 5 நாட்கள் அங்கேயே தங்கி பணியாற்றினோம். எங்களுக்கான எல்லா வசதிகளையும் கேரள அரசு செய்து கொடுத்தது. கேரள காவல் துறையும் மிகப்பெரிய அளவில் ஆதரவுக்கரம் கொடுத்தனர்.
பாதிப்படைந்த பகுதி முழுவதுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, வாகன அனுமதி சான்றிதழ் போன்றவை முறைப்படுத்தப்பட்டது. எங்கள் அறக்கட்டளையின் வாகனங்கள், ஃப்ரீசர் பாக்ஸ் போன்றவையும், பேரழிவில் சிக்கிய உடல்களை எடுக்க பெரும் அளவில் உதவியாக இருந்தது. சிதைந்த நிலையில் இருந்த 17 உடல்களை நாங்கள் எடுத்து வந்தோம். அதில் இரண்டு குழந்தைகளின் உடல்களும் இருந்தது.
இது இயற்கை பேரழிவா அல்லது மனிதத் தவறால் நிகழ்ந்த துயரமா என்பதை சொல்லத் தெரியவில்லை. மேற்கொண்டு இந்த மாதிரியான துயரங்கள் நடைபெறாதவாறு அரசாங்கமும், அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் தாழ்மையான வேண்டுகோள்’’ என்றவாறு விடைபெற்றனர்.
எல்லா வகைத் துன்பத்தையும் எதிர்கொள்ள இந்தப் பெண்கள் குழு தயாராக இருந்தது.