அகர்தலா, ஆக.27 திரிபுராவில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு விஷமிகள் தீவைத்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக திரிபுரா மாநில காவல்துறை துணைத் தலைவர் (சட்டம் – ஒழுங்கு) அனந்தா தாஸ், செய்தியாளரிடம் கூறியதாவது:
மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ராணிர்பஜார் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் காளி சிலையின் முகம் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின் எதிரொலியாக, ராணிர்பஜார் பகுதியில் 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத விஷமிகள் 25.8.2024 அன்று இரவு தீவைத்தனர்.
எனினும் இந்த நிகழ்வில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் பதற்றத்தைத் தணிப்பதற்காக பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை உளவுத்துறை காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தன்கரும், மேற்கு திரிபுரா காவல் கண்காணிப்பாளர் கிரண்குமாரும் பார்வையிட்டனர். சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பிடும் பணி முடிந்ததும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும். சம்பந்தப்பட்ட பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது‘ என்றார் அவர்.
வீடுகளுக்கு தீவைத்த நிகழ்வைத் தொடர்ந்து ராணிர்பஜார் பகுதியை உள்ளடங்கிய ஜிரானியா வட் டாரத்தில் தடை உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷால் குமார் தெரிவித்துள்ளார். இந்தத் தடை உத்தரவின்படி பொது இடங்களில் அய்ந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திப்ரா மோத்தா கட்சித் தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேவ்வர்மா,
முகநூலில் வெளியிட்ட பதிவில் “வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வு கவலை அளிக்கிறது. சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். திரிபுராவில் கடந்த 19ஆம் தேதி முதல் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 26 பேர் உயிரிழந்துவிட்டனர்; 1.17 லட்சம் பேர் வீடுகளை இழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.