திராவிடர் கழகம் தோன்றிய நாள் [27.8.1944]
திராவிடர் கழகம் என்றால் என்ன? அதன் தன்மை என்ன? அணுகுமுறை என்ன? என்பதை பளிச்சென்று புரியும் வண்ணம் ‘விடுதலை’யில் வெளியிட்ட வாசகத்தை வாசகர்கள் அறிந்து கொள்க. திராவிடர் கழகம் ஓர் எதிர்ப்பு உணர்ச்சி ஸ்தாபனம் (A Revolting Spirit Organisation).
திராவிடர் கழகம் இந்து சமுதாயத் துறையில்:
பார்ப்பன எதிர்ப்பு, வைதிக எதிர்ப்பு. மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாஸ்திர, புராண, இதிகாச எதிர்ப்பு, ஜோசியம், சகுனம், சடங்கு. யாகம் எதிர்ப்பு.
மதத் துறையில்:
கடவுள்கள் எதிர்ப்பு, கோவில், பூசை, உற்சவங்கள் எதிர்ப்பு, ஆன்மா, மேல் உலகம் எதிர்ப்பு. மோட்ச – நரகம் எதிர்ப்பு,
அரசியல் துறையில்:
பார்ப்பன ஆதிக்கம் எதிர்ப்பு, மத்திய அரசாங்க ஆதிக்க எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு.
கல்வி கலை இலக்கியத்துறையில் :
ஆரிய கலாச்சார, அனுஷ்டான, வர்ணா ஸ்ரம, மத கருத்துகள் புகுத்தும் கல்வி, கலை, இலக்கியம் எதிர்ப்பு
பொருளாதாரத் துறையில்: சுரண்டப் படுதல், குவிக்கப்படுதல் எதிர்ப்பு.
இந்தத் தன்மையான எதிர்ப்பு உணர்ச்சி கொண்ட எந்த ஸ்தாபனங்களுடனும் திராவிடர் கழகம் இந்தக் காரியங்களுக்கு வேறு சிறு குறை இருந்தாலும் ஒத்துழைக்க முன்னிற்கும். இந்தத் தன்மைகளை ஆதரிக்காத – இலட்சியப்படுத்தாத உணர்ச்சி உள்ள ஸ்தாபனங்களுடன் ஒத்துழைக்காது என்பதுடன் எதிர்க்கவே முன்னிற்கும்.
அது கூட்டுறவு கொள்ளும் எந்த ஸ்தாபனத்தைப் பற்றியும், இந்தத் தன்மைகளை முதலில் யோசித்துத்தான் அதன் தராதரத்தையும் முன் பின் நடத்தையையும் லட்சியத்தையும் பார்த்து தான் உறவுகொள்ளும்.
சாதாரணமான அதாவது பெரிய லட்சியத்திற்காக சிறிய காரியங்களில் அவ்வப்போது முயற்சித்து அவ்வப்போது அடையும் முடிவுகளில் மாத்திரம், பொறுத்த காரியங்களில் மாத்திரம் இந்த லட்சியங்கள் முக்கியமாகக் கருதப்படாமல் இருக்கலாம்.
ஆனால், பொதுவாக அது (திராவிடர் கழகம்) எதிர்ப்பில்தான் உற்சாகமுள்ளதாக இருக்குமே தவிர, ஆதரிப்பை அவ்வளவாக விரும்பாததாகத்தான் இருக்கும்.
கழக உணர்ச்சி மக்களிடையில் பரப்பப்பட ஆதரிப்புக் காரியங்களில் ஈடுபடுவதைவிட, எதிர்ப்புக் காரியங்களில் ஈடுபடுவதே பலன் தரத்தக்கதாகும் என்பது அதன் கருத்து. இதுதான் கழகத்தின் போக்கு என்பதை இளைஞர்கள் அறிவார்களாக.
‘விடுதலை’ 7.4.1952