நூலகங்களை அழிக்க முயலும் ஒன்றிய அரசின் முயற்சிகளை – முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்
மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுப்பதை அவசரக் கடமையாகக் கருதவேண்டும்
நூலகங்களை அழிக்க முயலும் ஒன்றிய அரசின் முயற்சிகளை – முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கருவிலேயே அதை சிதைத்து, மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுப்பதை மாநில அரசின் அவசரக் கடமையாகக் கருதவேண்டும்; தமிழ்நாட்டு எம்.பி., க்கள் இதில் அக்கறை காட்டவேண்டியது அவசரம்! அவசியம்!!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
வேத கால ‘மறுமலர்ச்சி’ நோக்கிய அரசியல்!
பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசின் மூலக் கொள்கைகளில் ஒன்று, மாநில அரசுகளே அற்ற ஒற்றை ஆட்சியாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதே! அதற்காகவே ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் இப்படி எல்லாம் ‘‘ஒரே, ஒரே” ராகம் பாடினாலும்கூட, ‘‘மக்கள் அனை வரும் ஒரே ஜாதி” என்பதை மட்டும் அவர்களால் சொல்ல முடியாது. காரணம், அவர்களது சனாதன, மதவாத அரசியல் என்பது வருணாசிரமத்தைக் காக்கும் வேத கால ‘மறுமலர்ச்சி’ நோக்கிய அரசியல்!
நேரிடையாக அதைச் செய்ய இன்றைய அர சமைப்புச் சட்டம் தடையாக இருப்பதால், அதை வெளிப் படையாகச் செய்யாமல், கட்டடத்தை உடைக்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கல்லைப் பெயர்த் தெடுப்பதுபோல, மாநில உரிமைகளை – அதிகாரங்களை – அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ளவற்றை அகற்றி, ஒன்றியப் பட்டியல் (Union List) அதிகாரத்தின்கீழ் வெளிப்படையாகவும், ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent List) மூலம் மறைமுகமாகவும், அதிகார அத்துமீறலாகவும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் செய்து வருகிறது – ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சி!
எடுத்துக்காட்டாக நேற்று (7.8.2023) சில ஊடகங்களில் வந்துள்ள ஒரு செய்தி:
மாநிலப் பட்டியலில்
ஏழாவது அட்டவணையில்…
தற்போது ‘நூலகங்கள்’ மாநிலப் பட்டியலில் ஏழாவது அட்டவணையில் List II என்பதின்கீழ் 12 ஆவது பொருளாக,
‘‘Libraries, museums and other similar institutions controlled or financed by the State; ancient and historical monuments and records other than those (declared by or under law made by Parliament) to be of national importance.”
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அவை போன்ற பிற நிறுவனங்கள் – மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை அல்லது மாநிலத்தால் நிதி உதவப்படுபவை; தொன்மையான மற்றும் வரலாற்றுச் சார்பான நினைவுச் சின்னங்களும், ஆவண ஏடுகளும் – நாட்டுத் தனிச் சிறப்பு வாய்ந்தவை என (நாடாளுமன்றத்தினால் செய்யப்பட்ட சட்டத்தின் வாயிலாகவோ, கீழாகவோ விளம்பப்பட்டவை) அல்லாதவை.”
நூலகங்கள், காட்சியகங்கள் எல்லாம் மாநிலங்களில் உள்ளவை. அறிவு ஊற்றுகளை அகழாய்ந்து தோண்டி எடுத்து மக்களுக்கு, இளைஞர்களுக்கு அறிவைப் போதிக்கும் ஆவணப் பல்கலைக் கழகங்கள் ஆகும்!
நூலகங்கள், கல்வியின் ஒரு முக்கிய பகுதி அல்லவா? அதை பரப்பிடுவதை மக்கள் தொடர்புள்ள மாநில அரசுதானே சீரிய முறையில் செய்ய முடியும்?
முறைசார்ந்த படிப்பு படிக்காதவர்களையும் கற்றவர் களாக்கும் வாய்ப்புள்ள, உயர் எண்ணங்கள் பரப்ப உதவிடும் அறிவுச் சோலைகள்!
தமிழ்நாட்டில் பற்பல இடங்களிலும் வளர்ந்துவரும் நூலகங்கள்…
தற்போதைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கல்வி வளர்ச்சி, கற்றறிவு, பொது அறிவு பெரிதும் பரவ, முந்தைய கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்மையில் முதலமைச்சரால் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம், தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறையால் பற்பல இடங்களிலும் வளர்ந்துவரும் நூலகங்கள், மாவட்ட மய்ய கிளை நூலகங்கள் போன்றவைமூலம் நமது கீழடி நாகரிகம், பொருநை நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் முதலிய பண் பாட்டு வரலாறுகளையும், திராவிட எழுச்சி சிந்தனை களையும் புரிந்துகொள்ளும் அறிவுத் தேக்கங்களாக அவை இருப்பதால், அதில் காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற அரிய சிந்தனையாளர்களின் நூல்கள், திராவிட இயக்க வரலாற்று சாதனை நூல்கள், அறிஞர் அண்ணா, கலைஞர், பகுத்தறிவு சமூகநீதி நூல்கள் எல்லாம் வைக்கப் படுகின்றன!
‘‘ஆயிரம் பூக்கள் மலரட்டுமே” என்பது போன்று பல கருத்தாளர்கள், சிந்தனைச் செல்வங்களும் இடம் பெறுகின்றன.
எனவே, இதைத் தடுத்து, ஒன்றிய அரசுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால், வெறும் புராணங்களை, வரலாறுகளாகவும், மதக் கருத்துகளைத் தத்துவமாகவும், போலி விஞ்ஞானத்தையே அறிவிய லாகவும் ஆக்கி, மாற்றிடும் திரிபுவாத நூல்களை, இல்லாத சரஸ்வதி நாகரிகத்தைப் பரப்பி, இருக்கும் சிந்துவெளி (திராவிடர் நாகரிகம்), கீழடி, பொருநை ஆய்வுகளை அதன் சுதந்திரத்திற்கேற்ப எழுதும், வெளிவரும் ஆய்வுகளைக் கட்டுப்படுத்தவும் மிக லாவகமான திட்ட ஏற்பாடாக நாம் பார்க்கிறோம்.
எப்பொழுதும் எதேச்சதிகாரிகள் – நூலகங்களை, சுதந்திர சிந்தனைகளை, வளர்ச்சிக் கூடங்களை ஏற்பதோ, சகிப்பதோ இல்லை.
எகிப்தில் அலக்சாண்டிரியா நூலகம் எரிப்பு, இலங்கையில் யாழ்ப்பாண (தமிழர்) நூலகம் எரிப்பு போன்றவை நம் கருத்துக்குரிய பழைய வரலாற்று நிகழ்வுகள் ஆகும்!
மாநில அரசின் அவசரக் கடமை!
நூலகங்களை அழிக்க முயலும் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளை – முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். கருவிலேயே அதை சிதைத்து, மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுப்பதை மாநில அரசின் அவசரக் கடமையாகக் கருதவேண்டும்.
தமிழ்நாட்டு எம்.பி., க்கள் இதில் அக்கறை காட்டவேண்டியது அவசரம்! அவசியம்!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.8.2023