திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி
நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை
திருப்பதி, ஆக.26 திருவள்ளூர் மாவட்டம் திருத் தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றுள்ளார்.
அங்கு நடைபாதையில் நடந்து சென்ற அவர் 2350ஆவது படியில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் சோதித்து விட்டு அவர் ஏற்ெகனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதை அறிந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
கடவுள் சக்தி இதுதான்!
கோவில் கருவறையில் தீ விபத்து
உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
சேத்துப்பட்டு, ஆக.26 திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த தேவி காபுரத்தில், 500 அடி உயர மலை உச்சியில், 365 படிக்கட்டுகளுடன் பழைமையான கனக கிரீஸ்வரர் கோவில் மற்றும் அடிவாரத்தில், பெரியநாயகி அம்மன் தனி சன்னிதி உள்ளது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் குடமுழுக்கு நடத்த திருப்பணி நடக்கிறது. இதனால் விழா காலங்களில் பயன்படுத்தப்படும், 13 உற்சவர் அய்ம்பொன் சிலை, பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்கள், சேலை, நெய், தீப எண்ணெய், மஞ்சள், குங்குமம், விபூதி, யாகசாலைக்கு பயன்படுத்தப்படும் கலசங்கள், யாக சாலை பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
கோவில் குருக்கள், குருபிரசாத் நேற்று (25.8.2024) காலை கோவில் நடையை திறந்து உள்ளே சென்றபோது, கருவறை மண்டபம் புகைமூட்டமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தேவிகாபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். பின்னர் ஆய்வு செய்த போது, கருவறை மண்டபக் கதவுகள் கருகி காணப்பட்டன. உற்சவர் சிலை, கலசங்களும் சேதமடைந்து உள்ளன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தேவிகாபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
என்ன காட்டுமிராண்டித்தனம்!
எருமைகளை பலியிட்டு
ரத்தம் குடிக்கும் திருவிழா
சிவகங்கை, ஆக. 26 சிவகங்கை, பழமலை நகரில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விரதமிருந்தனர். கடந்த 22ஆம் தேதி பெருமாள்சாமி பூஜையுடன் திருவிழா தொடங்கியது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்தை குடிக்கும் நிகழ்ச்சி நேற்று (25.8.2024) அதிகாலை தொடங்கியது.
காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை (தலையை அசைப்பது) காத்திருந்து, அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்படுகின்றன. கழுத்தில் வெட்டி அதிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் அப்படியே குடிக்கப்படுகிறது. காளிக்கு எருமையையும் பிற தெய்வங்களை வணங்குபவர்கள் ஆடுகளையும் பலியிடுகின்றனர். நேற்று 21 எருமைகள், 120 ஆடுகள் பலியிடப்பட்டன.
இவ்விழா சுமார் 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் (ஒரே குடும்பத்திலிருந்து வரும் வழித்தோன்றல்) குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிட்டனர். அந்த கறியை அந்த குடும்ப வாரிசுகள் எந்த ஊரில் உள்ளார்களோ அவர்களுக்கு கொடுத்து அனுப்புகின்றனர். காளி, அசுரனை (எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்த்தெழும் எனவும், அதனால் அதை சிந்த விடாமல் குடித்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.