சென்னை, ஆக.25 ஆளுநர்ஆர்.என்.ரவி, 3ஆவது முறையாக, நேற்று (24.8.2024) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டு சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவிக்காலம் நீடிக்கப்படவும் இல்லை, புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படவும் இல்லை. அதனால் ஆளுநராக ஆர் என் ரவி நீடித்து வருகிறார். இதற்கிடையே பதவிக் காலம் முடிந்த மறுநாள் (ஆகஸ்ட் 1ஆம் தேதி) காலை விமானத்தில் டில்லிக்கு சென்றார். 4 நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு சென்னை திரும்பினார். ஆனாலும் ஆளுநரின் பதவி நீடிப்பு குறித்த எந்த உத்தரவும் டில்லியில் இருந்து வரவில்லை.
அதற்கு பிறகு கடந்த 19ஆம் தேதி 2ஆவது முறையாக, ஆளுநர் டில்லிக்கு சென்றார். 3 நாட்கள் இருந்து விட்டு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் 3ஆவது முறையாக ஆளுநர் ரவி, நேற்று (24.8.2024) காலை 6.40 மணிக்கு, டில்லிக்கு புறப்பட்டார். இம்முறை 2 நாள் பயணமாக டில்லி சென்றுள்ள ஆளுநர், நாளை இரவு 8.20 மணிக்கு, பயணிகள் விமானத்தில், சென்னை திரும்புகிறார். பதவி நீடிப்பு உத்தரவை பெறுவதற்காக, தொடர்ச்சியாக 3 முறை ஆளுநர் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் பதவி நீடிப்பு குறித்து டில்லியில் இருந்து இதுவரையில் எந்தவிதமான தகவலும் வரவில்லை. இம்முறை பதவி நீடிப்பு உத்தரவு பெற்று ஆளுநர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே மற்றொரு தகவலாக தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. எனவே புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில், ஆர்.என்.ரவி பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.