சென்னை, ஆக.25- தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, அலைபேசி செயலி வாயிலாக மேற்கொள்ளும் பணியை சோதனை அடிப்படையில் மின்சார வாரியம் நடத்தி வருகிறது.
மின் பயன்பாடு கணக்கெடுப்பு
தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள், வீடுகள்தோறும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மின் பயன்பாடு கணக்கெடுப்புக்கென மின் வாரியம் சார்பில் தற்போது ”எச்.எச்.சி’ எனும் கையடக்க கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மின் பயன்பாட்டு கணக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கவும், நுகர்வோர்களுக்கு மின் கட்டண விவரத்தை உடனடியாக தெரிவிக்கும் வகையிலும்,மின்பயன்பாட்டு கணக்கெடுப்புப் பணியை அலைபேசிகள் மூலம் மேற்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் திட்டமிட்டது.
இதற்கென தமிழ்நாடு மின்வாரியம் தனி செயலி ஒன்றையும் உருவாக்கி உள்ளது. முதல் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள மின்வாரியத்தின் சென்னை, காஞ்சிபுரம், கோவை,ஈரோடு, மதுரை உள்பட 12 மண்டலங்களை சேர்ந்த சில மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் மூலம் இந்த செயலியை பயன்படுத்தி அலைபேசி மூலம் மின் அளவீடு செய்யும் சோதனை அடிப்படையிலான பணிகளை மின் வாரியம் மேற்கொண்டது.
சோதனைப் பணி
இந்த நிலையில், அலைபேசி செயலி மூலம் மின்அளவீடு செய்யும் சோதனை அடிப்படையிலான பணி களை தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் துரிதப்படுத்தி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் இந்த செயலியை பதிவேற்றம் செய்து, வீடுகளில் மின் அள வீடு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரத்யேக‘புளூடூத்’ கருவி மூலம் மீட்டர் கருவி மற்றும் அலைபேசி இடையே இணைப்பை ஏற்படுத்தி, ஒவ் வொரு வீடுகளின் மின் பயன்பாடுகளும் தற்போது சோதனை முறையில் கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்த புதிய முறை காரணமாக, மின் பயன்பாடு யூனிட் அளவீடுகளில் எந்தவித முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெறாது என்று மின்வா ரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மின் வாரிய உதவிப் பொறியாளர்கள் கூறுகையில், அலைபேசி மூலம் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணி சோதனை ஓட்டம் முறையில் நடந்து வருகிறது. பெரும்பா லான பணியாளர்கள் இதில், சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளனர். இந்த புதிய முறையால், மின் பயன்பாட்டில் எந்தவித மாற்றங்களையும் யாராலும் மேற்கொள்ள முடியாது. அரசுக்கும் சரியான வருவாய் கிடைக்கும்’ என்றனர்.
அடிப்படை வசதிகள் அவசியம்
சோதனை அடிப்படையிலான இந்தப் பணிகள் குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது:-
அலைபேசி மூலம் வீடுகளில் மின் அளவீடு கணக்கெடுக்கும் பணி சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, பணியாளர்களின் அலைபேசிகளையே பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளார்கள். இது நல்ல திட்டம்தான். ஆனால்,இவற்றை நடைமுறைப்படுத்தும்போது பணியாளர்களுக்கு அதற்கான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். இந்த பணிக்காக பணியாளர்கள் தங்களது செல்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால், அவை செயலிழந்து விடுகின்றன. மேலும், வீடுகளில் வைக்கப்படும் மீட்டர் பெட்டிகள் உயரத்திற்கு ஒரு நிலையான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.