தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தவுடன்,
‘‘இனிமேல் இந்த இயக்கம் இருக்காது; பெரியாரோடு முடிந்து போய்விடும்!’’ என்றனர்
உலகளாவிய அளவிற்கு இந்த இயக்கம் இருக்கும் என்பதோடு – ஏராளமான விழுதுகளோடு – பழுதில்லாத கொள்கை விழுதுகளோடு இருக்கும் என்பதற்கு அடையாளம் இந்த மணவிழா!
தலைமுறை தலைமுறையாக இந்தக் கொள்கை வெற்றி பெறுகிறது என்று அர்த்தம்; ஆகவேதான், இந்த மணவிழா கொள்கைத் திருவிழாவாக அமைந்திருக்கிறது!
கோவை, ஆக.25 தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தவுடன், ‘‘இனிமேல் இந்த இயக்கம் இருக்காது; பெரியாரோடு முடிந்து போய்விடும்‘’ என்று சொன்னார்கள். இயக்கம் இன்றைக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது மட்டுமல்ல – உலகளாவிய அளவிற்கு இந்த இயக்கம் இருக்கும் என்பதோடு – ஏராளமான விழுதுகளோடு – பழுதில்லாத கொள்கை விழுதுகளோடு இருக்கும் என்பதற்கு அடையாளம் இந்த மணவிழா – அதுதான் மிகவும் சிறப்பானது. காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக இந்தக் கொள்கை வெற்றி பெறுகிறது என்று அர்த்தம். ஆகவேதான், இந்த மணவிழா கொள்கைத் திருவிழாவாக அமைந்திருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சி.தங்கவேல் – இந்துமதி இல்ல
மணவிழா வரவேற்பு!
கடந்த 14.7.2024 அன்று காலை கோவையில், சி.தங்கவேல்- இந்துமதி ஆகியோரின் மகள் இ.த.தமிழோவியாவிற்கும், சோ.பி.ராஜலிங்கம் – தயாராஜலிங்கம் ஆகியோரின் மகன் ரா,ராஜாதித்யனுக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
கொள்கையே தன்னுடைய வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டிருக்கக்கூடிய எங்கள் அன்பு பெயர்த்தி
கொள்கையிலேயே பிறந்து, கொள்கையிலேயே வளர்க்கப்பட்டு, கொள்கையே தன்னுடைய வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டிருக்கக்கூடிய எங்கள் அன்பு பெயர்த்தி, இந்த இயக்கத்தின் ஆற்றலோடு இணைந்துள்ள அசையா சொத்து என்ற கொள்கை – அசையும் சொத்துகள் என்று இதுபோன்று இருக்கக்கூடி யவர்களை உருவாக்கக் கூடிய ஓர் அற்புதமான நிகழ்ச்சி இது!
மணமகள் தமிழோவியா, மணமகன் ராஜாதித்தியன் ஆகிய இருவருக்கும் நடைபெறக்கூடிய இந்த அற்புதமான ஓர் ஒப்பற்ற கொள்கைத் திருவிழாவில் – திருமணம் என்பதைவிட, திருமணத்தை சாக்காக வைத்துக் கொண்டிருக்கக்கூடிய கொள்கை வெற்றி விழா என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இது பெருமைக்குரிய ஒன்றாகும்.
எந்தத் துறையை ஏற்றாலும் அதில் சாதனை முத்திரைப் பதிக்கக்கூடிய அருமைச் சகோதரர்!
அப்படிப்பட்ட இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்று, எனக்கு முன் மிகச் சிறப்பாக வாழ்த்தி அருளிய கூட்டுறவுத் துறை அமைச்சர் – ஆற்றலும், ஆளுமையும், அடக்கமும் சிறப்பாகக் கொண்டு, எந்தத் துறையை அவர் ஏற்றாலும் அதில் சாதனை முத்திரைப் பதிக்கக்கூடிய அருமைச் சகோதரர் மானமிகு மாண்புமிகு திரு.பெரியகருப்பன் அவர்களே,
அதேபோல, சிறப்பான வகையில் இவ்விழாவில் கலந்துகொண்டுள்ள அருமைத் தோழர் சன் தொலைக்காட்சியின் பொறுப்பாசிரியர் திரு.குணசேகரன் அவர்களே, மேற்கு மண்டல அய்.ஜி. பவானி ஈசுவரி அய்.பி.எஸ். அவர்களே, வருமான வரித் துறை துணை ஆணையர் திரு.கண்ணன் அவர்களே, ஓவியாவின் நண்பர்கள் பிரேமானந்தத் அவர்களே, நிஷன்னன் அவர்களே, மாநில திட்டக் குழுத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்களே, திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய ‘கலைஞர்’ தொலைக்காட்சியின் ஆசிரியர், சிறந்த எழுத்தாளர் அருமைச் சகோதரர் திருமாவேலன் அவர்களே, மற்றும் எதிரில் அமர்ந்திருக்கின்ற பல்துறை அறிஞர்களே, திராவிட இயக்க நண்பர்களே, அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களே, சான்றோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் மகிழ்ச்சியோடு எல்லோரும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி என்பது எவ்வளவு சிறப்பானது என்பதைச் சொல்லவேண்டும். இங்கே நம்முடைய அமைச்சர் அவர்களும் சொன்னார்கள்.
சோ.பி.ராஜலிங்கம் அய்.பி.எஸ். – தயாராஜலிங்கம்!
இந்துமதி – தங்கவேல் அவர்கள், அதேபோல, இவர்கள் குடும்பத்தில் சம்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அருமை அய்யா திரு.சோ.பி.ராஜலிங்கம் அய்.பி.எஸ். – தயாராஜலிங்கம் அம்மையார் ஆகியோரைத்தான் முதலில் நாங்கள் வரவேற்று பாராட்டவேண்டும் – மணமகளின் தாத்தா என்ற முறையில்.
ஏனென்றால், இந்துமதி – தங்கவேல் ஆகியோருடைய மணவிழா 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில் நடைபெற்றதை தோழர் கண்ணன் அவர்கள் இங்கே சொன்னார்கள்.
அவர்களுடைய மணவிழாவின்போது நடைபெற்ற ஒரு நிகழ்வினை இங்கே நினைவுபடுத்தினார்கள். அந்த நிகழ்வு எனக்குக்கூட நினைவில் இல்லை.
நீங்கள் உரையாற்றுவதற்கு முன் ஒரு செய்தியை நான் சொல்லவேண்டும் என்றார்.
தாராளமாக பேசுங்கள் என்றேன்.
அப்போது சொன்னார்கள், ‘‘நீங்கள் திருமணம் செய்து வைத்த நேரத்தில், கரண்ட் ஆஃப் ஆகி விட்டது. அப்பொழுது அந்த மணவிழாவிற்குப் புதிதாக வந்தவர்களுக்கும், வைதீக உணர்வு இருக்கின்ற வர்களுக்கும் ‘‘என்னாகுமோ, என்னாகுமோ” என்று கொஞ்சம் பயந்தார்கள். ‘‘ஒன்றும் ஆகாது” என்று நீங்கள் விளக்கம் சொன்னீர்கள் என்று சொன்னார்.
அஷ்டமி – நவமியில் திருமணமா?
அதேபோன்று, இந்த மணவிழாவில் மிகப்பெரிய வெற்றி என்னவென்று சொன்னால், நம்முடைய மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசும்பொழுது சொன்னார்.
‘‘திருமணத்திற்குச் செல்லவேண்டும்” என்று ஒருவரிடம் அமைச்சர் சொல்லியிருக்கிறார்.
‘‘இன்றைக்கு அஷ்டமி, நவமியாயிற்றே? இன்றைக்கா திருமணம் நடைபெறுகிறது?” என்று கேட்டிருக்கிறார். இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவின் வெற்றிகளில், இது தலையாய வெற்றியாகும். எனவேதான், கொள்கை வெற்றித் திருவிழா என்று சொன்னேன்.
பகுத்தறிவோடு கொஞ்சம் சிந்திக்கவேண்டும். மணமக்களுக்கு அறிவுரையோ, மணமக்களின் சிறப்புகளைப்பற்றியோ இங்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
மணவிழாவிற்கு மாலையே தேவையில்லை என்றனர்!
பேசுவதற்குத்தான், பெயரத்தியிடம் கொஞ்சம் அனுமதி வாங்கி பேசவேண்டும். ஏனென்றால், இன்றைய பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு அட்வான்சாக வந்துவிட்டார்கள் என்றால், திருமணத்தில், நீண்ட நேரம் பேசவேண்டியதில்லை என்கிறார்கள். அதோடு, அவர் கொள்கை முறையில் வளர்க்கப்பட்டதால், மணவிழாவிற்கு மாலையே தேவையில்லை என்றார்.
இப்போது மணமக்கள் அணிந்திருக்கும் மாலை கள்கூட, வீணாகக்கூடிய மாலை இல்லை. ஏலக்காய் மாலை. அதைப் பிரித்தால், ஓராண்டிற்கு ஒரு குடும்பத்திற்குத் தேவையான ஏலக்காய் இருக்கிறது. அதை கீழே போட்டுவிட்டுப் போக வேண்டிய அவசியமில்லை.
ஆகவேதான், எதைச் செய்தாலும், பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற நிலையில், இம்மணவிழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மணமகனின் பெற்றோரை பாராட்டவேண்டும்!
இதில், மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஞாயிற்றுக்கிழமை வசதியாக இருக்கும் என்று மணவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட, இவ்வளவு சங்கடங்களைப்பற்றி கவலைப்படாது, சம்பந்தியாக வந்திருக்கிறார்களே, மணமகன் ராஜாதித்தியன் அவர்களுடைய பெற்றோரைத்தான் நாம் பல மடங்கு பாராட்ட கடமைப்பட்டு இருக்கின்றோம்.
ஏனென்றால், தங்கவேல் – இந்துமதி ஆகியோர் இந்தக் கொள்கையில் ஊறியவர்கள். ஆனால், அவர்களுடைய சம்பந்தியாக வந்தவர்கள் அப்படியில்லை. இருந்தாலும், இந்த மணவிழா முறைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இதுபற்றி கவலைப்படவில்லை என்றாலும், உற்றார் உறவினர் சிலர், இந்த நேரத்தில் மணவிழாவிற்கு ஏற்பாடு செய்யலாமா? என்று கேட்டிருப்பார்கள்.இந்தக் குடும்பத்தின் தலைவன் என்ற முறையில் அவர்களுக்கு நன்றி!
அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், இவர்களுடைய வேகத்திற்கு அவர்கள் ஈடுகொடுத்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. முதலில், இயக்கத்தின் சார்பில், இந்தக் குடும்பத்தின் தலைவன் என்ற முறையில் அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றோம், பாராட்டுகின்றோம்.
அடுத்ததாக, அஷ்டமி, நவமி என்று சொல்கிறார்களே – அது கெட்ட நேரம் என்று சொல்கின்ற வைதீர்கள் சிந்திக்கவேண்டும். நாங்கள் சொல்வதை நம்பவேண்டும் என்று இல்லை பெரியார் கருத்துப்படி, அதை நாங்கள் திணிக்கமாட்டோம்; சில பேருக்கு அந்த எண்ணங்கள் இருக்கலாம் – அவர்களுக்காகத்தான் இதைச் சொல்கிறோம்.
அஷ்டமி என்றால் என்ன?
கோகுலாஷ்டமி என்றால், கிருஷ்ணன் பிறந்த நேரம்.
நவமி என்றால், ராமன் பிறந்த நேரம்.
எல்லா நாட்களும் எங்களுக்கு நல்ல நாட்கள்;
எல்லா நேரமும் நல்ல நேரம்தான்!
இந்த இரண்டும், மோசமான நேரம் என்று நாங்கள் சொல்லலாம். பெரியார் தொண்டர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால், நாங்கள் அதை வரவேற்கிறோம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. எல்லா நாட்களும் எங்களுக்கு நல்ல நாட்கள்; எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.
ஆனால், வைதீகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், யாரோ சொல்லி வைத்ததற்கு, இவர்கள் தலையாட்டுகிறார்கள்.
இராமனையும், கிருஷ்ணனையும் கும்பிடுகிறவர்கள் ஏன் அஷ்டமியையும், நவமியையும் கெட்ட நாள், கெட்ட நேரம் என்று சொல்லவேண்டும்? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
கலைஞர் பிறந்த நாளில் நாங்கள் யாராவது வருத்தப்படுவோமா? அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி பெருமைப்படுவோம்.
பெரியார் பிறந்த நாள் விழா என்றால், அதைக் கொண்டாடுவோம்; காமராசர் பிறந்த நாள் விழா நாளைக்கு என்றால், அதற்கு நாங்கள் பெருமைப்படுவோம்.
பிறக்காத கடவுள்களுக்குப் பிறந்த நாள்!
அதுபோன்று, கடவுள்கள் பிறந்தார்களா, இருக்கிறார்களா? என்பனவெல்லாம் வேறு பிரச்சினை. பிறக்காத கடவுள்களுக்குப் பிறந்த நாள் என்று வைத்திருக்கிறார்கள். அந்தக் கடவுள்கள் பிறந்ததற்கு இப்படி ஒரு கதையைச் சொன்னார்கள். அந்தக் கதையில் எவ்வளவு மூடத்தனம் இருக்கிறது என்பதற்கு அடையாளம் – அந்த நேரம் கெட்ட நேரம் என்று சொல்கிறார்கள். கெட்ட நேரம்தான், எங்களைப் பொறுத்தவரையில், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
ஆனால், கெட்டது – நல்லது என்று வாழ்க்கை யில் கிடையாது. எல்லாவற்றையும் சந்திப்பதுதான் வாழ்க்கை.
வாழ்க்கை என்பது இருக்கிறதே, இன்பத்தை எதிர்பார்க்கக் கூடிய ஒவ்வொருவரும், துன்பத்தை யும் எதிர்பார்க்கவேண்டும்.
வாழ்க என்று சொல்வதினால், நான் மகிழ்ச்சியடைவதில்லை!
பெரியார்தான் சொன்னார், ‘‘என்னை வாழ்க என்று சொல்வதினால், நான் மகிழ்ச்சியடைவதில்லை. காரணம் என்னவென்றால், வாழ்க என்று சொல்பவர்களைவிட, ஒழிக என்று சொல்பவர்கள்தான் அதிகம். வாழ்க என்று சொல்வதினால், நான் மகிழ்ச்சியடைவதில்லை. ஒழிக என்று சொல்வதினால், நான் துன்பப்படுவதும் இல்லை” என்றார்.
இந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டாகும். இந்த நூற்றாண்டில் மூன்று செய்திகளை உங்களுக்குச் சொல்கிறேன்.
இந்த மேடையைப் பார்க்கிறேன் – இந்த மணமக்கள் இவ்வளவு சிறப்பான கொள்கை உணர்வோடு, மகிழ்ச்சி யாக இருக்கிறார்கள். இம்மணமுறையில், புகையில்லை, மணமக்கள் கண்களைக் கசக்குவதில்லை.
ஆனால், எல்லாவற்றையும்விட, இந்த மேடை – அமைச்சரிலிருந்து தொடங்கியிருக்கக் கூடிய மேடை – எதிரே அமர்ந்திருக்கக்கூடிய பெருமக்கள் – ஒவ்வொருவரும் இங்கே உரையாற்றியவர்கள் – இன்னும் வாய்ப்பில்லாமல் எதிரே இருக்கக்கூடிய அதிகாரிகள் – ஓய்வு பெற்ற அதிகாரிகள் – இன்றைக்குப் பணியாற்றக் கூடிய அதிகாரிகள் – அவர்கள் அத்துணை பேரும் இம்மணவிழாவிற்கு வந்து, மணமக்களை வாழ்த்துகிறார்கள் என்பதைவிட, அவர்களைப் பார்க்கின்றபொழுது, எங்களைப் போன்றவர்கள் என்ன நினைக்கிறோம், எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்பதற்கு அடையாளம் – தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தவுடன், ‘‘இனிமேல் இந்த இயக்கம் இருக்காது; பெரியாரோடு முடிந்து போய்விடும்” என்றெல்லாம் சொன்னார்கள்.
பழுதில்லாத கொள்கை விழுதுகளோடு இருக்கும் என்பதற்கு அடையாளம்
இந்த மணவிழா!
இயக்கம் இன்றைக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது மட்டுமல்ல – உலகளாவிய அளவிற்கு இந்த இயக்கம் இருக்கும் என்பதோடு – ஏராளமான விழுதுகளோடு – பழுதில்லாத கொள்கை விழுதுகளோடு இருக்கும் என்பதற்கு அடையாளம் இந்த மணவிழா – அதுதான் மிகவும் சிறப்பானது.
காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக இந்தக் கொள்கை வெற்றி பெறுகிறது என்று அர்த்தம்.
ஆகவேதான், இந்த மணவிழா கொள்கைத் திருவிழாவாக அமைந்திருக்கிறது.
மாலைகள் தேவையில்லை, ஆடம்பரம் தேவையில்லை, பெரிய பெரிய நிகழ்ச்சிகள் தேவையில்லை – பதிவு செய்தாலே போதும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைய பிள்ளைகள் இருக்கிறார்கள்.
நம்மைவிட நம்முடைய பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். ஒரு காலத்தில் நாம் சொன்னோம், ‘‘சின்ன பிள்ளைகள், அவர்களுக்கு என்ன தெரியும்” என்று.
ஆனால், இன்று அப்படியில்லை,
‘‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”
வள்ளுவருடைய குறள். தம்மைவிட, தம் மக்கள் இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு சிறந்து விளங்குகிறார்கள். அதைத்தான் இம்மணவிழாவில் இணைப்புரையை வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய, இந்தக் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய நம்முடைய அருமைத் தோழர் திருமாவேலன் அவர்களும் இங்கே சொன்னார்.
நான் ஒரு கருத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்!
ஒன்றே ஒன்றை நான் அன்போடு கேட்டுக்கொள்கி றேன். என்னைப்பற்றி அவர்கள் அறிமுகப்படுத்தக் கூடிய அளவிற்குச் சொன்னார்கள். பல நேரங்களில், இப்படி சொல்லக்கூடிய நண்பர்களுக்கெல்லாம் நான் சொன்ன பதிலை, இங்கும் சொல்லுகிறேன். ‘‘வாழும் பெரியார்” என்று சொன்னார்.
அந்த வார்த்தையைப் பொறுத்தவரையில் நான் ஒரு கருத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல; பெரியார் என்பது தத்துவம்
அது என்னவென்றால், ‘‘வாழும் பெரியார்” என்று யாரையும் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. காரணம் என்னவென்றால், பெரியார் எப்பொழுதுமே வாழக்கூடியவர்தான். பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல. பெரியார் என்பது தத்துவம்.
ஆகவே, அந்தத் தத்துவத்திற்கு மரணம் கிடையாது. அந்த தத்துவம் வாழும் தத்துவம்தான்.
‘‘வாழும் பெரியார்” என்று ஒருவர் சொன்னார் என்றால், அந்தப் பெரியார் இறந்துவிட்டார் என்று அர்த்தமாகும்.
அது தத்துவ ரீதியாக, பகுத்தறிவு ரீதியாக, தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பது என்னுடைய பணிவன்பான கருத்தாகும்.
ஆகவே, அந்த வார்த்தையைப் பாராட்டுவதற்காக தயவுசெய்து அருள்கூர்ந்து பயன்படுத்தவேண்டாம் என்று உரிமையோடு நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். மற்றபடி பாராட்டலாம்.
‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!’’
இந்தக் கொள்கை அவ்வளவு சிறப்புடையது. வாழுகிறார் என்பதற்கு என்ன அடையாளம் என்று சொன்னால், ‘‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு” என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்று.
இதற்கு ஊர், நாடு, உலகம் என்று எதுவும் எல்லை கிடையாது. மனிதம் என்பதுதான் அவருடைய எல்லைக் கோடு.
மனிதருக்கு அழகு எது?
ஏனென்றால், மனிதன் அழகாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது இருபாலராகவும் இருக்கலாம் அல்லது எப்பாலராகவும் இருக்கலாம்.
அழகு என்பதற்கு இதுவரையில் நாம் நினைத்தது, உடல் ரீதியான விஷயமாக இருந்தது. ஆனால், தந்தை பெரியார் அவர்கள் உள்ள ரீதியாகப் பார்த்தார்கள்.
மானமும் அறிவும் உள்ளதே அழகு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற குடும்பம்!
அப்படிப்பட்ட மானமும் அறிவும் உள்ளதே அழகு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற குடும்பம்தான் தங்கவேல் – இந்துமதி அவர்களுடைய குடும்பம். அந்த வழியிலே வந்த பிள்ளைகள்தான் எங்கள் பிள்ளைகள். தமிழோவியாவாக இருந்தாலும், இளவேனில் அவர்களானாலும் எல்லோருமே அந்தப் பழக்க வழக்கத்தில், இந்தக் கொள்கையில் மிக முக்கியமாக இருக்கக் கூடியவர்கள்.
ஆகவேதான்,
‘‘அறிவை விரிவு செய் – அகண்ட மாக்கு
ஒருவருவருக்கொருவர் புரிந்ததோடு மட்டுமல்ல, மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்!
விசாலப் பார்வையில் விழுங்கு உலகத்தை” என்று சொன்ன புரட்சிக்கவிஞருடைய கருத்துப்படி, இந்த மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்பாக வாழவேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் புரிதலுடன் இருக்கிறார்கள். ஒருவருவருக்கொருவர் புரிந்ததோடு மட்டுமல்ல, மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்துமதி அவர்கள் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். அதேபோன்று நம்முடைய தமிழோவியா அவர்களைப் பார்த்தாலும் அதேபோன்றுதான் இருக்கிறார். ஏனென்றால், அவரை சிறு குழந்தையிலிருந்து எங்களுக்குத் தெரியும்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நல்ல குடும்பம் – ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம். இந்தக் கொள்கைப் பல்கலைக் கழகத்தில் இவர்கள் உருவாகியிருக்கின்ற காரணத்தினால், இம்மணவிழா நிகழ்ச்சி என்பது மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
மனம் என்பதே ஒரு கூட்டுறவுதான்!
கூட்டுறவுத் துறையில் அவர்கள் பணியாற்றுகிறார்கள் – கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களும் இம்மணவிழாவிற்கு வந்திருக்கிறார். இதுவே மிக இயல்பான ஒரு வாழ்த்தாகும்.
ஏனென்றால், மனம் என்பதே ஒரு கூட்டுறவுதான். ‘‘கணவன் – மனைவி” என்றுகூட தந்தை பெரியார் அவர்கள் சொல்லமாட்டார். ‘‘வாழ்க்கை இணையர்” என்றுதான் சொல்வார். வாழ்வில் சம வாய்ப்பைப் பெற்றவர்கள்.
சிறிது நேரத்திற்குமுன், தங்கவேலை கூப்பிடுங்கள் என்று இந்துமதி அவர்களிடம் சொன்னேன். அவர் இயல்பாக ‘‘கண்ணம்மா” இங்கே வாங்க என்று கூப்பிட்டார். அமைச்சர் அவர்கள், ‘‘என்னம்மா, கண்ணம்மா என்றுதான் கூப்பிடுவீர்களா?” என்று கேட்டார்.
கணவன் எஜமானன் அல்ல;
மனைவி அடிமையல்ல!
இதுதான் சுயமரியாதைத் திருமணத்தினுடைய வெற்றி. கணவன் எஜமானன் அல்ல; மனைவி அடிமையல்ல. இருவரும் உற்ற தோழர்களாக வாழுங்கள் என்று தந்தை பெரியார் வகுத்தார்.
எங்கள் பிள்ளைகள், எங்கள் இளைஞர்கள் இவ்வளவு உறுதியோடு இருப்பதே தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்கிறது என்பது மட்டுமல்ல – வெற்றி பெற்றிருக்கின்றது என்பதற்கு இந்த மேடையே ஓர் அடையாளம்.
இதைப் பார்க்கும்பொழுது, எங்களுக்கு ஒரு பெரிய லாபம் என்னவென்றால், எங்கள் வயது மறந்து போகிறது; மறந்து போவதைவிட, வயது துறந்து போகிறது. உற்சாகத்தைப் பெறுகிறோம். இந்தக் கொள்கைகளை அழிக்க யாராலும் முடியாது. அதனுடைய வெற்றி எல்லா ரூபத்திலும் வருகிறது.
அந்த வகையில், இன்றைக்கு இந்த இயக்கம் செல்லுபடியாகும் என்ற நிலை வந்தது மட்டுமல்ல; மீண்டும் பழைய நிலை வரவேண்டும் என்று சொல்லக்கூடியதற்கு எதிராக ஒரு போராட்டம்.
அந்தப் போராட்டத்தில் இந்த மணமக்கள் எதிர்த்து நிற்கக்கூடிய அளவிற்கு இன்றைக்குத் தெளிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இது யாருக்காக? நமக்காக, நம்முடைய சமுதாயத்திற்காக என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.
மணமக்களே, திருமணம் செய்துகொண்டு உங்கள் பெற்றோர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அதுபோல எடுத்துக்காட்டாக, அதைவிட நாங்கள் கொள்கையில் ஒருபடி கூட இருக்கின்றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாழுங்கள்.
உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்கு,
இந்தக் கொள்கையைவிட சிறந்த கொள்கை
வேறு கிடையாது!
அது கொள்கைக்கு வெற்றி மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்கு, இந்தக் கொள்கையைவிட சிறந்த கொள்கை வேறு கிடையாது. ஏனென்றால், நாம் யாரையும் வெறுப்பதில்லை.
இங்கே அழகாகச் சொன்னார்கள், வெறுப்பு அரசியல் இங்கே கிடையாது என்று.
எல்லா மனிதர்களையும் ஒன்று என்று நாம் கருதுகின்றோம். யார்மீதும் நமக்குத் தனிப்பட்ட முறையில் வெறுப்பு கிடையாது. மூடநம்பிக்கையாளர்களைப் பார்த்து, ‘‘அய்யோ, நீங்கள் மூடநம்பிக்கையாளர்களாக இருக்கிறீர்களே – எனக்காக நீங்கள் பரிதாபப்படவேண்டாம்; உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். காரணம், மனித சமுதாயத்தில், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்” என்றார்.
நீங்கள் அறப்போர் வீரர்களாக திகழுங்கள்!
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்று, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, நல்ல போர் வீரர்களாக, நீங்கள் அறப்போர் வீரர்களாக திகழுங்கள்.
பழைய தத்துவத்தில், இல்லறத்திற்குப் பிறகு துறவறம் என்று சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை. இல்லறம் – இல்லறத்தில் இருந்துகொண்டே தொண்டறம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை நினைவூட்டி, நீங்கள் உங்களுக்காக வாழுவதைவிட, சமூகத்திற்காக வாழுங்கள் என்று சொல்லி, மணமக்கள் சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.
அதைவிட மிக முக்கியமான வேண்டுகோள் – இங்கே வந்திருப்பவர்கள் – இந்த மணவிழா எவ்வளவு சிறப்பாகவும், எளிமையாகவும் நடைபெறுகிறது என்பதை நன்றாக கவனிக்கவேண்டும். தங்கவேல் – இந்துமதி ஆகியோருடைய மணவிழாவில் இவ்வளவு பெரிய கூட்டம் இல்லை. ஆனால், இன்றைக்கு பெரிய அளவில் கூட்டம் வந்திருக்கிறது.
‘‘மணவிழா என்று அறிவித்தால் போதும்!’’
அதேபோன்று தந்தை பெரியார் அவர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக்கூடிய நம்முடைய மணமகள் தமிழோவியா அவர்கள், ‘‘மணவிழா என்று அறிவித்தால் போதும்” என்று சொன்னார்.
ஆகவே, இவர்களுடைய பிள்ளைகளுக்கு மணவிழா என்று வரும்பொழுது, இன்னும் எளிமையாக, ‘‘திருமணம் செய்துகொண்டோம் என்பதை அறிவிக்கின்றோம்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரும். என்றைக்காவது ஒரு நாளில், சந்தித்து விருந்து நடத்துவார்கள்.
ஆகவே, ஆடம்பரம் என்பதை எல்லா வகைகளிலும் தவிர்க்கவேண்டும். பெரிய மண்டபங்களில் மணவிழாவினை நடத்தவேண்டிய அவசியமில்லை. இந்தக் கொள்கை வெற்றிக்காக இன்றைக்கு இது தேவைப்பட்டு இருக்கிறது. ஆனால், நாளைக்கும், என்றைக்கும் இதுபோன்று தேவைப்படாது.
சிக்கனமாக வாழுங்கள்; வாழ வழிகாட்டுங்கள்; அதற்குத் திட்டமிடுங்கள்!
எளிமையை, இனிமையாக ஆக்கிக் கொண்டு, சிறப்பாக, சிக்கனமாக வாழுங்கள். வாழ வழிகாட்டுங்கள். அதற்குத் திட்டமிடுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கின்றேன்.
வாழக மணமக்கள்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.