புதுடில்லி, ஆக.24- பணமோசடி விவகாரத் தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தர ஆளுநர் தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் உத்தரவு
தமிழ்நாடு போக்குவ ரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிரான ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணை தாமதம் ஆவதை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி.) அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்க நீதி பதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு பதில்
இதனையடுத்து தமிழ் நாடு அரசின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் உதவி ஆணையர் சுரேந்தர் மூலம் வழக்குரைஞர் டி.குமணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், செந்தில்பாலாஜிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அவருக்கு எதிராக குற்றவழக்கு தொடரும் அனுமதியை மாநில அரசு வழங்கவில்லை என தெரிவித்து எஸ்.அய்.டி. கோருவது ஏற்புடையதல்ல எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ‘செந்தில்பாலாஜி தொடர் புடைய வழக்குகளில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை எப்போது தொடங்கும்?, அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞரை நியமிக்க கோருவது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?’ என கேட்டனர்.
ஆளுநர் தாமதம்
தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் டி. குமணனுடன் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவின்படி குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. எனவே விசாரணை அதிகாரி மீது எவ்வித குறையும் இல்லை. அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞரை நியமிக்கும் கோரிக்கையை ஆட்சேபிக்கிறோம்.
மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடரும் அனுமதி தொடர்பான கோப்பை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடந்த ஜனவரி 4ஆம் தேதி அனுப்பி வைத்தது. ஆளுநர் அலு வலகத்தில் கேட்ட கூடுதல் விசாரணை அறிக்கையையும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொட ரும் அனுமதிக்கு காத் திருக்கிறோம். இதே விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 72 அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடரும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. ஆளுநரின் அனுமதி கிடைத்தவுடன் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங் கும்’ என வாதிட்டார்.
2ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவழக்கு தொடரும் அனுமதி கோரி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோப்பு, போக்குவரத்து விவரங்களையும், அரசு தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளவரின் விவரத்தையும் தமிழ் நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசா ரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.