இலங்கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
* தமிழ் பொது வேட்பாளருக்கும் வரவேற்பு
* மீனவர்கள் பேசுவதே பிரச்சினை தீர வழி!
யாழ்ப்பாணம், ஆக.24 ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலில் சகல தரப்பினரும் ஓரணியில் திரள வேண்டும். ஒத்த கருத்துள்ளவர்களை இணைக்கும் பணியை திராவிடர் கழகம் செய்யும் – இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டி யிடுவதையும் அவர் வரவேற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பன்னாட்டு ஊடகமான ‘டான் தமிழ்ஒளி’ தொலைக்காட்சியின் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச் சியில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் ‘ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு முதலில், ஈழத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் தீர்வு காண்பது சாத்தியம்.
‘தமிழ்நாடு – இலங்கை தமிழ் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் பேச்சுகளை நடத்த வேண்டும். இரு நாடு களின் அரசாங்கங்களும் பேசுவதைவிட இரு நாடுகளின் மீனவர்களும் பேசுவதே பொருத்தமானது. இரு தரப்பு மீனவர்களும் தமக்குள் பேசி விட்டுக் கொடுப்புகளை செய்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்’’ என்று கூறினார்.
வரும், இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவதை ‘நல்ல விடயம்’’, என்று கூறி வரவேற்றார். அத்துடன், ‘தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும்போது எங்களுடைய ஒற்றுமையை பார்த்து பெரும்பான்மை இனத்தவர்கள் பயப்பட வேண்டும். இதன் மூலம் எங்களுடைய செய்தி சொல்லப்பட வேண்டும்’ என்றார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பங்கேற்ற ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சி நாளை (25.8.2024) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ‘டான் தமிழ் ஒளி’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.